விலக்க நினைத்தாலும் விலக்க முடியாதவர் இறைவன்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனிதன் தனித்து இருப்பது நல்லது அல்ல எனக் கண்ட இறைவன் மனிதனுக்கு தகுந்த துணையை உருவாக்கினார். இறைவன் உருவாக்கிக் கொடுத்த துணையோடு இணைந்து இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். ஆனால், ஆரம்பத்தில் இணைந்து வாழ்வதில் இன்பம் கண்ட மனிதன், இன்று இணைந்து இருப்பதைவிட, தனித்திருப்பதே மேல் என எண்ணக் கூடியவனாக மாறிவிட்டான். ஏன் மனிதனிடையே இத்தகைய மாற்றம்? என சிந்திக்கின்ற போது, சுயநலமும், தான் மட்டும் தான், என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கின்றது. இன்று கடவுளுக்கு முன்பாக வாக்குறுதிகள் கொடுத்து இணையக் கூடியவர்கள், இணைந்த பிறகு, தன்னுடைய விருப்பத்தின்படி மற்றவர் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.
அன்பு என்பது ஒருவரை இருப்பது போலவே ஏற்றுக்கொள்வது. ஆனால் இன்று பிறரை இருப்பது போல் ஏற்றுக் கொள்வதை விட்டுவிட்டு, நாம் விரும்புவது போல அடுத்தவர் இருக்க வேண்டும் என்ற எண்ணமானது மனிதர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டது. இதன் காரணமாகவே இணைந்து இருப்பதைவிட, தனித்து இருப்பது நல்லது என எண்ணுகிறான். எனவே, இணைந்திருக்கும் போது, தனது இணையிடம் தன்னுடைய விருப்பங்களை தான் அவன் தனது இணையிடம் எதிர்பார்க்கக் கூடியவனாக இருக்கின்றான்.
இயேசுவினிடத்தில் கணவன் மனைவி எப்போது பிரிந்திருக்கலாம்? என்ற கேள்வியை எழுப்பும் போது அவர், பிரிவு என்பது இவர்களிடையே இருக்கக் கூடாது என்பதனை கற்பிக்கின்றார். தொடக்க காலத்திலும் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்த போது அவர்களுக்கு விடுதலை தந்து அவர்களை கானான் நாட்டுக்கு இறைவன் அழைத்து வந்த நேரங்களில், பல சூழ்நிலைகளில், பல நேரங்களில் அந்த மக்கள் ஆண்டவரை விட்டு விட்டு விலகிச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் விலக நினைத்தாலும் அவர்களை விலக்கி விடாதவராக இறைவன் இருந்தார்.
நமது வாழ்வில் நாம், அந்த இறைவனைப் போலவே இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரோடும் இருக்க அழைக்கப்படுகின்றோம். குறிப்பாக, கணவன் மனைவி என்ற அற்புதமான திருமண பந்தத்தால் இணைக்கப்படுகின்றவர்கள், தங்களுடைய எல்லாச் சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கவும், ஒருவரை அவர் இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு, அவரோடு இணைந்திருக்கவும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
வீட்டிற்கு வீடு வாசல் படி என்று கூறுவார்கள். எல்லா வீட்டிலும் பிரச்சனைகள் உண்டு. ஆனால் பிரச்சனைகளின் வடிவங்கள் தான் வெவ்வேறாக இருக்கின்றது. பிரச்சனைகளை மையப்படுத்தி பிரிந்து போவதற்கு ஆயிரம் காரணங்களை தேடுகிறோம். ஆனால், இணைந்திருப்பதற்கான காரணத்தை தேட மறுக்கின்றோம். நாம் இணைந்து இருக்கவும், விலக்க முடியாதவர்களாக ஒருவர் மற்றவருடைய வாழ்வில் இணைந்திருக்கவுமே இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார்.
இஸ்ரயேல் மக்கள் விலக்க எண்ணிய போதும் இஸ்ரயேல் மக்களை விலக்காதவராக கடவுள் இருந்தார். எனவே அந்த மக்களின் வாழ்வில் அவர்களின் இன்ப துன்பத்தின் எல்லா நேரங்களிலும், இறைவன் உடன் இருந்து அவர்களை தேற்றக் கூடிய நபராக இருந்திருக்கிறார்.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் அந்த இறைவனை நாம் நமது உறவுகளிடையே பிரதிபலிக்க வேண்டும். எல்லாச் சூழ்நிலையிலும் நாம் தனித்து இருப்பதை விட இணைந்து இருப்பதையே சிரமேற் கொண்டு செயல்பட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். நாளுக்குநாள் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை நாடுவோரின் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற செய்தி ஒருபுறம் இருந்தாலும், தனித்திருப்பதை விட இணைந்திருப்பதையே இறைவன் விரும்புகிறார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டு, தனித்து இருப்பதில் அல்ல இன்பம். இணைந்து இருப்பதில் தான் இன்பம் இருக்கிறது. இணைந்திருப்பது என்பது இறைவனுடன் மட்டுமல்ல அருகிலுள்ள ஒவ்வொருவரோடும், குறிப்பாக கணவன் மனைவியோடும் மனைவி கணவனோடும் என இணைந்து வாழவே நாம் அழைக்கப்படுகின்றோம்.
நாம் அனைவரும் கடவுளை தந்தை என அழைப்பதால் கடவுளின் பிள்ளைகளாக இணைக்கப்பட்டுள்ளோம். எனவே அவரின் பிள்ளைகளான நாம், அவரிடம் இருந்து அவர் கற்பிக்கின்ற பாடங்களை கற்றுக் கொண்டு, நமது வாழ்வில் இணைந்து, இன்புற்று வாழ அழைக்கப்படுகிறோம்.
விலக்குவதை விட்டுவிட்டு, இணைந்து இருப்பதை மட்டுமே நமது வாழ்வின் முதல் படியாக கொண்டு, இந்த உலகத்தில் பயணம் செய்ய இறையருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக