வியாழன், 19 ஆகஸ்ட், 2021

அன்பு சீடர்களாக மாறுவோம்....(20.8.2021)

அன்பு சீடர்களாக மாறுவோம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
     அன்பே அனைத்திற்கும் ஆணி வேராகும். அன்பின் அடிப்படையில் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உலகத்தின் மையம் எது என்று கேட்டால் அது அன்பாக மட்டும் தான் இருக்க முடியும். அன்பை அனைவரும் எதிர்பார்க்கிறோம்.  இந்த சமூகத்தில் நம்மை அன்பு செய்ய ஒருவர் இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் நாம் மற்றவரை எப்படி அன்பு  செய்கிறோம் என சிந்திக்க இன்றைய நாள் அழைப்பு தருகின்றது.  எல்லோரும் நம்மை அன்பு செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடிய நாம் பிறரை அன்பு செய்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். 

               இன்று அன்பின் பெயரால் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். அன்பின் பெயரால்  பல அநீதிகள் இன்று இவ்வுலகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  முழுமையான அன்பு என்பது அடுத்தவர் இருப்பது போல அவரை  ஏற்றுக்கொள்வது தான். ஆனால்,  இன்று நாம் விரும்புவது போல அடுத்தவர் இருக்க வேண்டும் என்பதை தான் அன்பு எனக் கருதி இந்த சமூகத்தில் பயணம் செய்கிறார்கள். 

    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, உன்னை நீ அன்பு செய்வது போல அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் என இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக நமக்கு கற்பிக்கின்றார். 

                  அடுத்தவரை அன்பு செய்ய வேண்டுமாயின் அவர் இருப்பது போல் நாம் ஏற்றுக் கொண்டு அவரை அன்பு செய்யக் கூடியவர்களாக நாம் இச்சமூகத்தில் இருக்க வேண்டும்.  இது முற்றிலும் எளிதானது அல்ல.  கடினமான ஒரு காரியம், பிறரை அவர்கள் இருப்பது போல ஏற்றுக்கொள்வது. 

       ஏனென்றால் இன்று அன்பு என்பது எதிர்பாராத விதமாக ஆரம்பமாகிறது.  நாளடைவில் அன்பு வளரும்போது ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக மாறுகின்றது.  அந்த அன்பில் நிலைத்திருக்க வேண்டுமாயின் ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். தியாகங்கள் செய்யக்கூடியவர்களாக மாறுகிறார்கள். 

       உதாரணமாக,  கணவனும் மனைவியும் அன்போடு வாழ வேண்டும் என எண்ணுகிறார்கள்.  அதிகமான அன்பு ஒரு கட்டத்தில்  ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிவகுக்கிறது.  அன்பில் முறிவு ஏற்படக்கூடாது என்பதற்காக,  ஒருவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ வேண்டிய சூழல்தான் இன்று பல இடங்களில் நிலவுகிறது. பலர் இதை உணர்ந்து கொள்கின்ற போது வாக்குவாதத்தினாலும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும்,  உறவை முறித்துக் கொண்டு அன்பிலிருந்து விலகிச் செல்லக் கூடிய நிலை, இன்று இந்த நாட்டிலே அதிகம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. 

      ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளை அன்பு செய்ய வேண்டுமாயின் அடுத்திருப்பவரை அன்பு செய்ய வேண்டும் என்கிறார்.  அடுத்திருப்பவரை அவர்கள் இருப்பது போல ஏற்றுக்கொண்டு,  இந்த சமூகத்தில் நாம் பயணம் செய்ய வேண்டும். அப்படி பயணிக்கின்ற போது தான் நாம் இயேசுவின் உண்மை சீடர்களாக நாம் இருக்க முடியும்.  இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது பலர் பல விதமான கருத்து வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்தார்கள்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைவரையும் அன்பு செய்தார்.  எனவே தான் எது நீதியோ, எது தேவையான ஒன்றோ அதனை முன்மொழிந்தவராய் தன் வாழ்வில் தன் பயணத்தை மேற்கொண்டார்.  அதன் வெளிப்பாடு தான் கல்வாரி மலையிலே தன்னை குற்றுயிரும் குலையுயிருமாக சிலுவையில் தொங்கவிட்டு எள்ளி நகையாடிக் கொண்டிருந்த கூட்டத்தினரையும் கூட அவர் மன்னித்து அவர்களுக்காக இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்யக் கூடியவராக மாறினார். 

        அன்பின் திருவுருவம் எது என்றால் அது சிலுவையில் தொங்கும் இயேசு மட்டும் தான்.  அந்த இயேசுவைப் பின்பற்ற கூடிய நாமும் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் அடுத்தவர்களை அவர்கள் இருப்பது போல ஏற்றுக்கொண்டு  அன்பு செய்யத் தொடங்குவோம். அதன்வழி இயேசுவை உண்மையாக அன்பு செய்யும் அவரது சீடர்களாக மாறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...