ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

வழிகாட்டிகளாக மாறிட... (23.08.2021)

 


வழிகாட்டிகளாக மாறிட...

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திங்கள்கிழமை


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!




இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே நாம் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட ஒரு வழிகாட்டிகளாக இருக்கின்றோம்? என்று சிந்தித்துப் பார்க்க நமக்கு அழைப்பு  தருகின்றது.


இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதத்தில் அங்கு இருக்கக்கூடிய மக்களை பாராட்டுகிறார்.  அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் மேலும் அவர்கள் கிறிஸ்துவின் மீது ஆழமான மன உறுதி கொண்டு இருக்க வேண்டும் என்பதையும்,  அவர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக இந்த கடிதத்தை அவர்களுக்கு எழுதுவதாக நாம் வாசிக்கிறோம்.


 இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்றைய யூத சமூகத்தில் வாழ்ந்த வழிகாட்டிகளாக கருதப்பட்ட மறைநூல் அறிஞரையும், பரிசேயர் சதுசேயரையும் இறைவன் கடுமையாக சாடுகின்றார்.  காரணம்,  அவர்கள் தன்னலத்தை முன்னிறுத்தி மக்களை மதத்தின் பெயராலும் சட்டதிட்டங்களின் பெயராலும் தவறான போதனைகளின் அடிப்படையிலும் அடிமைப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு தலைவன் என்பவன் எப்படிப்பட்ட வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்கு இயேசுவும் அவரை பின் பற்றிய பவுலைப் போல பலரும் நமக்கு முன்னுதாரணமாக இருந்தாலும்,  எப்படிப்பட்டவர்களாக இருக்க கூடாது என்பதற்கு இந்த பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும்,  உதாரணமாக இருக்கிறார்கள்.


            இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு தேவை செய்து காட்டுபவர்கள் தான், குறை கூறுபவர்கள் அல்ல என்பார்கள். இன்றைய சமூகத்தில் பெரும்பாலான மனிதர்கள் மற்றவரை குறை கூறுவதன் மூலமாக,  தாங்கள் பெரிய வழிகாட்டிகள் என எண்ணிக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், நாம் இந்த சமூகத்தில் இயேசுவைப் போல நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.  எப்படி இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் அவர்கள் போதிப்பதை எல்லாம் தங்களுடைய வாழ்வில் செயல்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்களோ அது போல, நாமும் நமது வாழ்வில் நல்ல வழிகாட்டிகளாக வாழ அழைக்கப்படுகிறோம்.  இயேசு நல்ல வழிகாட்டியாய் வாழ்ந்தார்.  அவரை பார்த்து அவரைப் பின்பற்றியவர்கள் அவரைப் போல மாறினார்கள்.  நம்மைப் பார்த்து நம்மை பின்பற்றுபவர்களும் நல்ல வழிகாட்டிகளாக மாற வேண்டுமாயின்,  நாம் நல்ல வழிகாட்டிகளாக இந்த சமூகத்தில் பயணிக்கவேண்டும்.  எனவே இறைவன் விரும்பக்கூடிய வகையில் இறைவனது வார்த்தைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்ட இயேசுவின் சீடர்களைப் போல, நாமும் இந்த சமூகத்தில் நல்ல வழிகாட்டிகளாக மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.  இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...