வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

சுதந்திர தின விழா திருப்பலி முன்னுரை (15.8.2021)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் கல்வாரித் திருப்பலிக்கு உங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இன்று நம் நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டை நாம்  நினைவு கூருகிறோம்.  அதனோடு கூட அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை   கொண்டாடிட  திருஅவை நமக்கு அழைப்பு தருகின்றது. 
நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற வரம், இந்த சுதந்திரம். நாம் வளர, அவர்கள் விதையாய் மடிந்தார்கள்.  அவர்களின் தியாகத்தை மனதில் கொண்டு இந்த சமூகத்தில் நாமும் தியாகங்கள் பல புரியக்கூடிய மனிதர்களாகிட இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகின்றது. 

இந்த தியாகத்தின் வடிவமாகத் தான் திருஅவை அன்னை மரியாவை இன்று  நினைவு கூருகிறது. மனுக்குல மீட்பிற்காக, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசுவை தன் வயிற்றில் சுமந்தவர் இந்த அன்னை மரியா. இந்த அன்னை மரியா நமக்கு பலவிதமான பாடங்களை கற்பிக்கின்றார். இந்த சமூகத்தில் துணிவோடு செயல்படவும்,  அடுத்தவரின் நன்மையை முன்னிறுத்தி செயல்படவும்,   அடுத்தவருக்காக பரிந்து பேசவும்,  எப்போதும் எல்லாச் சூழ்நிலையிலும் நல்லதை மட்டும் நாடவும் இந்த அன்னையின் வாழ்வு நமக்கு வழிகாட்டுகிறது.  

இந்த நல்ல நாளில் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த பலரின் வாழ்வும் இதே செய்திகளைத்தான் இன்று நமக்குத் தருகின்றது.  இவர்கள் மூலமாக நாம் கற்றுக்கொண்ட, அல்லது  தெரிந்துகொண்ட நற்செயல்களையும் நற்பண்புகளையும் நமது வாழ்வில் செயலாக்கப்படுத்திட இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம்.  அழைக்கப்படக் கூடிய நாம் அனைவரும், தகுதி உள்ளவர்களாக மாறி, நமது குற்றம் குறைகளை இறைவனிடத்தில் அறிக்கையிட்டு,  இனி வருகின்ற நாட்களில், இறைவன் விரும்பக் கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் நாம் வலம் வருவோம்...   சுதந்திர தினத்தையும் அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவையும்  நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளிலே, நம்மிடம் இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து,  அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவருக்கு அரணாகவும், கேடயமாகவும், இருக்கக் கூடிய இயேசுவின் சீடர்களாக மாறிட,  இறையருளை வேண்டி, இணைவோம் இந்த திருப்பலியில், சுதந்திர உணர்வோடு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...