சனி, 3 ஜனவரி, 2026

எழு! ஒளிவீசு!... 4.1.2026

 “எழு! ஒளிவீசு!” – காணிக்கைத் திருநாளின் மறையுரை....

அன்பான சகோதரர் சகோதரிகளே,

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஒரு சக்திவாய்ந்த வார்த்தைகளை மையமாக வைத்து நம்மை அழைக்கின்றார் ... அவ்வார்த்தைகள்

 
“எருசலேமே! எழு! ஒளிவீசு!”

இது வெறும் ஒரு அழகான கவிதைச் சொல் அல்ல.
இது –
 மனிதகுலத்துக்கு
மூடிக்கிடக்கும் நம்பிக்கைகளுக்கு
இருளில் தவிக்கும் உலகத்துக்கு
இறைவன் விடுக்கும்  அழைப்பு.

இன்றைக்கு “எழு” என்ற வார்த்தைகளை நினைவு கூறுகிறபோது என் நினைவுக்கு வருவதெல்லாம்  அதிகாலையில் 
அலாரம் அடித்ததும்,
“5 நிமிஷம்… 5 நிமிஷம்…” என்று சொல்லி,
அரை மணி நேரம் கழித்து எழுவது மட்டுமே...,

ஆனால் இறைவன் சொல்கிற “எழு” என்பது –
உடலை மட்டும் அல்ல,
மனசையும், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் எழுப்புவது.

இன்று தாய் திரு அவை மூன்று அரசர்களின் பெருவிழாவை கொண்டாடுகிறது.

விண்மீன் – Google Map அல்ல, God’s Map

நற்செய்தியில், ஞானிகள் ஒரு விண்மீனைப் பார்த்து பயணம் செய்கிறார்கள்.

இன்றைய காலத்தில் நம்மால் ஒரு தெருவுக்கே போக முடியாது,
Google Map இல்லாம!

ஆனால் ஞானிகளை வழிநடத்திய விண்மீன் –

  • தவறாக வழி காட்டவில்லை
  • அவர்களை ஏரோதிடம் நிறுத்தியும் விட்டது (சோதனை!)
  • ஆனாலும் இறுதியில் இயேசுவிடம் கொண்டு சென்றது.
  • விசுவாசப் பயணத்தில் சோதனைகள் வரும்; ஆனால் இறைவன் ஒளி ஒருபோதும் ஏமாற்றாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இடம்பெறுகிறார்கள் :

ஏரோது:

  • அரசன்
  • அதிகாரம் உண்டு
  • மறைநூல் அறிவு அருகிலே கிடைக்கிறது

ஆனால்…
👉 அவனுக்கு இதயம் திறக்கவில்லை.

ஞானிகள்:

  • வெளிநாட்டினர்
  • வேறு கலாச்சாரம்
  • வேறு மத பின்னணி

ஆனால்…
👉 தேடல் இருந்தது. பணிவு இருந்தது. பயணம் செய்யத் துணிந்தார்கள்.

இங்கே பவுல் சொல்கிற மறைபொருள் நினைவுக்கு வருகிறது:

“பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர்கள்.”

👉 இயேசு ஒரு இனத்துக்காக அல்ல,
உலகமெங்கும் உள்ள அனைவருக்காக.

காணிக்கை – பொருளல்ல, மனம்

ஞானிகள் கொண்டு வந்தது:

  • பொன்
  • சாம்பிராணி
  • வெள்ளைப் போளம்

இன்றைக்கு நாம் என்ன கொண்டு வருகிறோம்?

😄 சில நேரங்களில்:

  • திருப்பலிக்கு நேரம் இல்லை
  • ஜெபத்திற்கு மனசில்லை
  • சேவைக்கு ஆர்வமில்லை

ஆனால் இயேசு கேட்பது:

  • உன் நேரம்
  • உன் மன மாற்றம்
  • உன் கருணை
  • உன் மன்னிப்பு

“எழு! ஒளிவீசு!”

  • உன் குடும்பத்தில்
  • உன் பணியிடத்தில்
  • உன் சமூகத்தில்

கிறிஸ்துவின் ஒளியை மறைக்காதே – பகிர்!

அப்பொழுது,

“பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்…”

ஆமென் 🙏

திங்கள், 20 அக்டோபர், 2025

ஒருவரால் அழிவு - ஒருவரால் வாழ்வு (21.10.2025)

அன்புள்ள  சகோதரர் சகோதரிகளே,

இன்றைய வாசகங்களில் திருத்தூதர் பவுலும், நம் ஆண்டவராகிய இயேசுவும்,  ஒரே மையக்கருத்தை நமக்குக் கூறுகின்றனர் — ஒருவர் வழியாக வந்த அழிவு, மற்றொருவர் வழியாக வந்த வாழ்வு.

ஒருவரின் குற்றம் – அனைவருக்கும் சாவு

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதும்போது, ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக பாவமும் சாவும் மனித இனத்தில் புகுந்ததாக நினைவுபடுத்துகிறார்.
ஒரு மனிதனின் தவறால் உலகமே அழிந்தது. அதே போல, ஒரு மனிதனின் (இயேசுவின்) கீழ்ப்படிதலால் உலகமே மீட்கப்பட்டது.
இவரே “புதிய ஆதாம்” என்ற நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் மையத்தை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.

பாவம் நம்மை கடவுளிடமிருந்து பிரித்தது. ஆனால் இயேசுவின் சிலுவை நம்மை மீண்டும் கடவுளோடு இணைத்தது.
பாவம் நம் வாழ்வில் இருளை கொண்டு வந்தது; அருள் அந்த இருளை வென்றது.
“பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது” — இதுவே நம் நம்பிக்கையின் அடித்தளம்.

விழிப்புடன் இருப்பது – நம் கடமை

“உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள்; விளக்குகள் எரிந்துகொண்டிருக்கட்டும்.”
அதாவது, விழிப்புணர்வுடன் வாழுங்கள் — கடவுள் எப்போது வருவார் என்று தெரியாது.

அவர் திரும்பி வரும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள் என்று ஆண்டவர் கூறுகிறார்.
இது வெறும் உடல் விழிப்பல்ல, மன விழிப்பும், ஆன்ம விழிப்பும் ஆகும்.
நம் வாழ்க்கையில் பாவம், சோம்பல், கவனக்குறைவு ஆகியவை நம்மை விழிப்பிலிருந்து தள்ளி வைக்கும்.

ஒரு பணியாளர் எப்போதும் தன் தலைவரின் வருகைக்காக தயாராய் இருப்பதைப் போல,
ஒரு கிறிஸ்துவர் எப்போதும் இயேசுவின்  வருகைக்காக தயாராய் இருக்க வேண்டும்.

விழிப்பு = விடுதலைக்கான வழி

ஆதாம் விழிப்பின்றி சோதனையில் விழுந்தார்.
ஆனால் இயேசு கெத்சிமானியில் விழிப்புடன் ஜெபித்தார் .
ஒருவர் வழியாக பாவம் நுழைந்தது; மற்றொருவர் வழியாக அருள் நுழைந்தது.

எனவே  நாம் 
அருளின் வாழ்க்கையில் விழிப்புடன் இருங்க்க அழைக்கப்படுகின்றோம் ....
பாவத்தின் தூக்கத்தில் அல்ல, ஜெபத்தின்  விழிப்பில் நாம் இருக்க வேண்டும் .
வாழ்க்கையின் சோதனைகளிலும் கடவுளின் திட்டம் நிறைவேற நம்பிக்கையுடன் நாம் பயணிக்க வேண்டும் .

எனவே அன்பானவர்களே,
கிறிஸ்துவின் கீழ்ப்படிதலால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களானோம்.
அவரின் அருள் நம்மை விடுவித்தது.
இப்போது நம் செய்ய வேண்டியது  விழிப்பாகவும், நம்பிக்கையுடனும், அருளுடனும் வாழ்வது மட்டுமே ....

அந்த விழிப்போடு அனுதினமும் பயணிக்க இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம் ...


அன்புடன் 

அருள் பணி. ஜே. சகாயராஜ் 

திருச்சி மறை மாவட்டம் 

புதன், 8 அக்டோபர், 2025

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

 “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்”


அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் தருகிறார்:

  1. இறைவனுக்கு அஞ்சித் நடக்கும் நம்பிக்கையாளர் ஒருபோதும் மறக்கப்படமாட்டார் (மலாக்கி)
  2. விண்ணகத் தந்தை நமக்குத் தூய ஆவியைக் கொடுப்பதில் தாமதமோ, குறைவோ இல்லை (லூக்கா). இந்த இரு சிந்தனைகளையும் இதயத்தில் இருத்தி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்...

கடவுளுக்கு ஊழியம் வீண் அல்ல

மலாக்கி இறைவாக்கினரின்  காலத்தில் மக்கள் மனம் தளர்ந்து, “கடவுளுக்குச் சேவை செய்வது வீண் என எண்ணினார்கள். ஆனால்  தீயோர் வளமுடன் வாழ்கிறார்கள்” என்று முறையிட்டனர். ஆனால் இறைவன் சொல்கிறார்:
👉 “என் பெயருக்கு அஞ்சிப் பணிவிடை செய்பவர்கள் எனக்கு விலை உயர்ந்த சொத்து.” என்றும் 
👉 நீதியின் கதிரவன் எழுந்து அவர்களுக்கு நலம் தருவான்.என்றும் குறிப்பிடுகிறார் .

நாம் வாழ்க்கையில் பல நேரங்களில் கேட்பது கிடைக்கவில்லை என்று தோன்றலாம். ஆனால் இறைவன் அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். மனிதர்களின் பார்வையில் நம்முடைய நல்ல செயல்கள் மறக்கப்பட்டாலும், இறைவனின் நினைவு நூலில் அது எழுதப்பட்டிருக்கிறது. என்பதை இதயத்தில் நிறுத்தி நாளும் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம் .

 விடாமுயற்சியுடன் கேளுங்கள்

நற்செய்தியில் இயேசு கூறும் உவமை மிக எளிமையானது:
ஒரு நண்பர் நள்ளிரவில் கதவைத் தட்டுகிறான். நண்பன் என்பதற்காக இல்லாவிட்டாலும், அவன் விடாமுயற்சியின் காரணமாக அவன் தேவையை நிறைவேற்றப்படுகிறது .

👉 அதேபோல் நாம் தொடர்ந்து ஜெபித்தால் இறைவன் நிச்சயம் நம் ஜெபத்தைக் கேட்கிறார் என்ற உறுதிபாடு நம் உள்ளத்தில் உதயமாக வேண்டும்.
👉 “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் – நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் – உங்களுக்குத் திறக்கப்படும்.” என்ற வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக நாம் நமது செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் .

இயேசு இன்றைய இறை வார்த்தை வழியாக  எளிய எடுத்துக்காட்டைக் கூறுகிறார்:

  • பிள்ளை மீனைக் கேட்டால் தந்தை பாம்பைக் கொடுப்பாரா?
  • முட்டையைக் கேட்டால் தேளைக் கொடுப்பாரா?

👉 தீயோர்களாகிய நாம் கூட பிள்ளைகளுக்கு நல்லதை அளிக்கிறோம் என்றால், நம்முடைய விண்ணகத் தந்தை எத்துணை நன்மைகளைத் தருவார்!
👉 அவர் தருகின்ற விலை உயர்ந்த பரிசு – தூய ஆவி.

எனவே அன்பானவர்களே,
இன்று இறைவார்த்தை நமக்குச் சொல்லும் மூன்று உண்மைகள்:

  1. கடவுளுக்கு ஊழியம் செய்வது  ஒருபோதும் வீண் வீண் போகாது.
  2. விடாமுயற்சியுடன் ஜெபித்தால் இறைவன் நிச்சயம் நம் வேண்டுதலை கேட்பார்.
  3. நமக்கு நன்மை செய்வதில் தாமதமோ, தவறோ செய்யாத அன்புத் தந்தை நம் விண்ணகத் தந்தை அவரைப் போல நாமும் இயன்ற நன்மைகளை செய்து வாழ்வோம் 

ஆகையால் நாம் மனம் தளராமல், நம்பிக்கையோடும் தொடர்  ஜெபத்தோடும் இறைவனின் அருளை இன்றைய நாளில் வேண்டுவோம் ...

செவ்வாய், 7 அக்டோபர், 2025

மன்னிப்பில் நிலைத்திருப்போம்...(8.10.2025)

அன்பான சகோதர சகோதரிகளே,


இன்றைய வாசகங்களில் கடவுள் இரக்கம் மிகுந்தவர்; அவர் மன்னிப்பு அளிக்க விரும்புபவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

யோனாவின் மனநிலை

யோனா  நினிவே மக்களுக்கு கடவுளின் தண்டனை அறிவிக்க அனுப்பப்பட்டார். ஆனால், மக்கள் மனந்திரும்பியதால் கடவுள் அவர்களை மன்னித்தார். இதைக் கண்டு யோனா சினம் கொண்டார்.

  • “நான் சொன்னதே இதுதான்! நீர் இரக்கமுள்ள கடவுள். அழிக்க நினைப்பீர்; பிறகு மனம் மாறுவீர்” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
  • யோனா மனித பார்வையில் நீதி வேண்டுகிறார்; ஆனால் கடவுள் தமது அன்பு, கருணை, பொறுமை என்பதை வெளிப்படுத்துகிறார்.

ஆமணக்கு செடியின் பாடம்

ஆண்டவர் யோனாவுக்கு ஒரு ஆமணக்கு செடியை வளரச் செய்து நிழல் தந்தார். அதனால் யோனா மகிழ்ந்தார். மறுநாள் அந்தச் செடி காய்ந்து போனபோது, யோனா உயிரே போய்விடும் அளவுக்கு சினம் கொண்டார்.

  • அந்தச் செடியை வளர்க்க அவர் எதுவும் செய்யவில்லை; ஆனால் அதை இழந்ததால் வருந்தினார்.
  • கடவுள் அதைக் கொண்டு யோனாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்தார்:
    • “செடிக்காக நீ இவ்வளவு இரக்கப்படுகிறாயானால், என் கைகளால் படைக்கப்பட்ட, தவறுதலாக வாழும் ஆயிரக்கணக்கான மனிதர்களையும் கால்நடைகளையும் நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?”

இதில் வெளிப்படும் உண்மை: கடவுளின் இரக்கம் எல்லையற்றது.

இன்றைய நற்செய்தியில் சீடர்கள், “ஆண்டவரே, எங்களுக்கும் ஜெபிக்க  கற்றுக்கொடும்” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்ற ஜெபத்தை கொடுத்தார்.

இந்த ஜெபம் முழுவதும் ஒரு மைய சிந்தனையை  வெளிப்படுத்துகிறது: அது கடவுள் நம் தந்தை; அவர் இரக்கம் மிகுந்தவர். இதனை மனதில் நிறுத்தி நமது வாழ்வுக்கான பாடங்களை இன்றைய இறை வார்த்தை வழியாக பெற்றுக்கொள்வோம் ...

  • யோனாவைப் போல நாமும் பல நேரங்களில் நீதியைக் காட்டிலும் பழி வாங்குதல் என்ற மனநிலையோடு இருப்போம்.
  • ஆனால் ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்: “நீங்கள் மன்னிப்பது போல, நான் உன்னை மன்னிப்பேன்”. என்று தன் ஜெபத்தின் வழியாக நமக்கு கற்பிக்கிறார். 
  • கிறிஸ்தவ வாழ்வு என்பது பழிவாங்கும் மனதை விடுத்து, மன்னிப்பில் நிலைத்திருப்பது. 

அன்பானவர்களே,

  • கடவுள் நினிவே மக்களை இரக்கத்துடன் காப்பாற்றினார்.
  • அதேபோல் இன்று நம்மையும் இரக்கத்துடன் நடத்துகிறார்.
  • நாமும் பிறரை மன்னித்து, கருணையுடன் நடந்துகொள்ளும்போது, கடவுளின் உண்மையான பிள்ளைகளாக வாழ்கிறோம்.

இறைவனின் வார்த்தைகளின் படி வாழ இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்...

திங்கள், 6 அக்டோபர், 2025

ஜெபமாலை – மரியாளோடு இணைந்து இயேசுவின் வாழ்வை தியானிக்கும் வழி...(7.10.2025)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே,


இன்று நாம் தூய ஜெபமாலை அன்னையின் விழாவை கொண்டாடிட திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த விழா, ஜெபத்தின் வல்லமையையும், அன்னை மரியாளின் துணையையும் நமக்கு நினைவூட்டுகிறது.

  • திருத்தூதர் பணிகள் 1:12-14 இல், இயேசு விண்ணேற்றம் அடைந்தபின், திருத்தூதர்கள் தாய் மரியாளோடும், பெண்களோடும், இயேசுவின் உறவினரோடும் சேர்ந்து ஒரே மனத்தோடு ஜெபித்தார்கள் என்று வாசிக்கிறோம். இதனால் தொடக்க கால திருஅவை  ஜெபத்தின் மேல், மரியாவின் துணையின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தது தெரியவருகிறது.
  • லூக்கா 1:26-38 இல், மரியாவிற்கு வானதூதர் கபிரியேல் அளித்த அறிவிப்பில், “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று மரியா முழுமையாக இறைவனுக்குச் அர்ப்பணிக்கின்றார்.

இந்த இரண்டு வாசகங்களும் நமக்கு தரும் பாடம்: மரியாள் எப்போதும் ஜெபத்தில் இறைவனோடு இணைந்து வாழ்ந்தார்; அதனால் அவர் ஜெபத்தின் அன்னையாகத் திகழ்கிறார்.

ஜெபமாலை – மரியாளோடு இணைந்து  இயேசுவின் வாழ்வை தியானிக்கும் வழி

ஜெபமாலை என்பது வெறும் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வது அல்ல. அது:

  • இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை மரியாளின் கண்களால் தியானிப்பதாகும்.
  • நம் மனமும், ஐம்புலன்களும் சேர்ந்து இறைவனில் கவனம் செலுத்தும் ஒரு ஆழ்ந்த ஜெபமுறையே ஜெபமாலை ஜெபிப்பது .

அதனால்தான் வீரமாமுனிவர் ஜெபமாலையை “மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடம்” என்று அழைக்கிறார்.

ஜெபமாலை குறித்து வரலாறு நமக்கு தரும் சாட்சி

1571 ஆம் ஆண்டு லெபந்தோ யுத்தத்தில், கிறிஸ்தவர்கள் ஜெபமாலை கொண்டு அன்னை மரியாளிடம் வேண்டியபோது, அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
அதேபோல், 1917 ஆம் ஆண்டு பாத்திமாவில், மரியா மூன்று சிறுமிகளுக்கு தோன்றி, “ஜெபமாலை ஜெபியுங்கள், அதுவே உலகிற்கு அமைதி தரும் வழி” என்று கூறினார்.

இதனால், ஜெபமாலை என்பது வரலாறே சாட்சி சொல்லும் ஒரு வல்லமைமிக்க ஜெபமுறை என்று நாம் உணர்ந்து கொள்ள இன்று அழைக்கப்படுகிறோம்.

எனவே அன்புக்கு உரியவர்களே ,

  • நாம் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் ஜெபமாலை சொல்லுகிறோமா?
  • எதிர்பாராத சிரமங்களில், நோய்களில், சோதனைகளில், அன்னை மரியாவின் துணையோடு நம் ஜெபிக்கின்றோமா? இன்று நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம் ...

ஜெபமாலை ஜெபிப்பவர்களுக்கு அன்னை மரியா அளித்த வாக்குறுதிகளை இன்று நாம் நினைவு கூறுவது சாலச் சிறந்தது:

  • ஜெபமாலை சொல்வோர் என் மகனின் சகோதர சகோதரிகளாக இருப்பர்...
  • அவர்களுக்கு பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்...
  • அவர்களின் வாழ்வு தூய்மையிலும் நற்செயல்களிலும் வளர்ச்சி பெறும்...
  • இறக்கும் வேளையில் அவர்கள்  விண்ணக மகிமை அடைவார்கள்....

எனவே அன்பான சகோதர சகோதரிகளே,
இன்று ஜெபமாலை அன்னையின் விழாவில்  இனிவரும் நாட்களில் 
“ஜெபமாலை சொல்வோம் – வெற்றி  பெறுவோம்.” என உறுதி ஏற்போம் ...

நம் குடும்பத்தில் தினமும் ஜெபமாலை ஜெபிக்கும் ஒரு பழக்கத்தை உருவாக்குவோம். அன்னை மரியாளின் துணையோடு இயேசுவின் வாழ்வை தியானித்து, அவரது மீட்பை பெறுவோம்.

சனி, 4 அக்டோபர், 2025

கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம் எது தெரியுமா...? (06.10.2025)

“அஞ்சாமை, கீழ்ப்படிதல், அன்பு – நம் கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம்”


 சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் நம் வாழ்வின் மூன்று முக்கிய உண்மைகளை நினைவூட்டுகின்றன:

  • கடவுளிடமிருந்து யாரும்  தப்பிச் செல்ல முடியாது உதாரணம் யோனா.
  • உண்மையான அடுத்திருப்பவர் இரக்கத்தோடும் அன்போடும் வாழ்பவர் உதாரணம் நல்ல சமாரியர்.
  • உண்மைக்காக அஞ்சாமல் வாழ வேண்டும் உதாரணம் இன்றைய புனித  புருனோவின் வாழ்க்கை.

1. யோனாவின் ஓட்டமும் கடவுளின் திட்டமும் (யோனா 1:1-17)

யோனாவிடம் கடவுள் நினிவே மக்களை நோக்கி அறிவிக்கச் சொன்னார். ஆனால் யோனா தப்பிச் செல்ல நினைத்தார்.

  • கடவுளிடமிருந்து ஓட முடியாது; அவர் எங்கு சென்றாலும் நம்முடன் இருக்கிறார் என்பதை யோனாவின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது .
  • யோனாவின் கீழ்ப்படியாமையால் அவர் மட்டுமல்ல, அவருடன் கப்பலில்  இருந்த  மக்கள் கூட ஆபத்தில் சிக்கினர்கள்.
  • ஆனால் யோனாவை கடவுள் கைவிடவில்லை; மீன் வயிற்றுக்குள் மூன்று நாள் வைத்துப் பின் மீண்டும் பணி செய்யச் அனுப்பி வைத்தார்.
    இந்த முதல் வாசகம் நமக்குத் தரும் வாழ்வுக்கான பாடம்: கடவுள் நம்மை அழைக்கும் பணியில் இருந்து நாம்  விலகிட விரும்பினாலும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு அவர் நமக்கு உறுதுணையாக இருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்...

2. நல்ல சமாரியர் – உண்மையான அடுத்திருப்பவர் (லூக்கா 10:25-37)

  • திருச்சட்ட அறிஞர் “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேட்கிறார்.
  • இயேசு நல்ல சமாரியரின் உவமையால், உண்மையான அடுத்திருப்பவர்  பிறருக்கு இரக்கம் காட்டுபவர் என்பதை வெளிப்படுத்தினார்.
  • குருவும், லேவியரும் தேவையில் இருப்பவரை பார்த்தும்  புறந்தள்ளினர்; ஆனால் அந்நியராக கருதப்பட்ட  சமாரியர் உயிரோடும் மனமோடும் உதவினார்.
    இந்த உவமையை நமக்குத் தரும் வாழ்வுக்கான பாடம்: அடுத்திருப்பவர் என்பது என் இரத்த உறவினர் மட்டுமல்ல; தேவையில் இருப்பவர்   யாராயினும் அவர்கள் நமக்கு  அடுத்திருப்பவர். கிறிஸ்தவ அன்பு எல்லைக்குட்பட்டதல்ல எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்வோம்...

3. தூய புருனோவின் சாட்சியம்

  • அதிகாரம், எதிர்ப்பு, அழுத்தம் ஆகியவற்றுக்கு அஞ்சாமல், திரு அவைக்காக நின்றவர்.
  • உண்மையை உரக்கச் சொன்ன துணிவாளர்.
  • துறவற சபையை நிறுவி, இறை வார்த்தையை  பாதுகாத்து, வருங்கால சந்ததிக்காக ஒளி விட்டுச் சென்றார்.
    இவரது வாழ்வு நமக்குத் தரும் வாழ்க்கை பாடம்: கிறிஸ்துவுக்காக அஞ்சாமல், துணிவோடும் நேர்மையோடும் வாழ்ந்திட வேண்டும்.

இன்றைய இறை வார்த்தைகள் நம் வாழ்வுக்குத் தரும் அழைப்பு

  • யோனா போல் ஓடாமல், கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிவோம்.
  • நல்ல சமாரியர் போல், மதம், இனம், மொழி என பாகுபாடு  பார்க்காமல் அன்போடும் இரக்கத்தோடும் வாழ்வோம்.
  • புனித புருனோ போல், உண்மைக்காக அஞ்சாமல் துணிவோடு நிற்போம்.

நம்பிக்கையால் வாழ்வோம்...(5.10.2025)

“நம்பிக்கையால் வாழ்வோம்”


அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்பிக்கை என்ற  ஒரே செய்தியை நமக்கு வழங்குகின்றன:
👉 நம்முடைய நம்பிக்கைதான் நம்மை உயிர்ப்பிக்கிறது,
👉 நம்முடைய நம்பிக்கைதான் நம்மை வல்லவர்களாக ஆக்குகிறது,
👉 நம்முடைய நம்பிக்கைதான் கடவுளுக்கு உண்மையான பணியாளர்களாக வாழ வழிநடத்துகிறது.

1. அபக்கூக்கு தீர்க்கதரிசி – நம்பிக்கையினால் வாழ்வோர்

முதல் வாசகத்தில் (அபக் 1:2-3; 2:2-4) தீர்க்கதரிசி கேட்கிறார்:
“ஆண்டவரே! எத்தனை நாள்கள் அழுகிறோம், கூப்பிடுகிறோம்? ஏன் நீர் அமைதியாக இருக்கிறீர்?” என்கிறார். 

👉 இது நம் வாழ்க்கையிலும் உண்மைதான்.
நாம் பல நேரங்களில் — நோய், பிரச்சனை, அநியாயம், வன்முறை, வேலைவாய்ப்பு குறைவு, குடும்ப சிக்கல் — என்று பல சோதனைகளில், “ஏன் ஆண்டவர் மௌனமாக இருக்கிறார்?” என்று கேட்கிறோம்.

இக்கேள்விக்கு இறைவன் தரும் பதில்:
நேர்மையுடையவர் தம் நம்பிக்கையினால் வாழ்வார்.
இதன் அர்த்தம் — பிரச்சனைகள் இருந்தாலும், சிரமங்கள் இருந்தாலும், இறுதி வெற்றி நம்பிக்கையுடையவருக்கே என்பதாகும் ...

2. திருத்தூதர் பவுல் – துணிவின் ஆவி

இரண்டாம் வாசகத்தில் (2 திமொ 1:6-14), பவுல் திமொத்தேயுவை ஊக்குவிக்கிறார்:
“நமக்குக் கொடுக்கப்பட்டது கோழைத்தனத்தின் ஆவி அல்ல; வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட ஆவியே.”

👉 கிறிஸ்தவர்களாக வாழ்வது எளிதல்ல. பவுல் சொல்வது போல, சான்று சொல்லும் போது துன்பம் வரும். நம்முடைய நம்பிக்கைக்காக சில சமயம் பழிச்சொல், துன்பம், ஒதுக்கல் கூட வரலாம். ஆனால் அனைத்திற்கும் மத்தியிலும்  ஆண்டவருக்காகச் சான்று சொல்ல நம்மை பவுல் தம் வார்த்தைகளின் வழியாக  அழைக்கிறார்.

இன்று நாம் கிறிஸ்தவர்களாகத் திறந்த மனதோடு நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோமா?
அல்லது உலகம் சிரிக்குமோ என்று வெட்கப்படுகிறோமா? கேள்வியை உங்கள் முன்வைக்கிறேன். அவரவர் மனதின் அடிப்படையில்  நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் ...

3. கடுகளவு நம்பிக்கை

லூக்கா 17:5-10-ல் திருத்தூதர்கள் கேட்கிறார்கள்:
“ஆண்டவரே, எங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்.”

👉 இயேசு கூறுகிறார்: “கடுகளவு நம்பிக்கை இருந்தால் போதும்.”
அந்தச் சிறிய நம்பிக்கையும் மலையை அசைக்கும் வல்லமை பெறுகிறது.

👉 அதே சமயம் இயேசு நினைவுறுத்துகிறார்:
நம்பிக்கையில் வல்லவர்களாயினும், நாம் அடிமைத்தனத்தோடு கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்.
“நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையை செய்தோம்” எனச் சொல்லும் பணிவு வேண்டும். நம்பிக்கை இருக்கிறது  என்பதால் கடவுள் என் தலையை செழிப்பதில் அலட்சியம் இருக்கலாகாது ...இரக்கத்தின் கடவுள் தான் எனவே அவர் நம்மை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார் என்ற மனநிலையோடு நாம் பயணித்தாலும் கூடாது ...என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது ...

இன்றைய இறைவா வார்த்தை வாழ்வுக்குத் தரும் வாழ்க்கை பாடம் 

  1. நம்பிக்கை = இருள் சூழ்ந்தாலும், ஒளியை நம்புவதை குறிக்கும். 
  2. நம்பிக்கை = கடவுள் மௌனமாக இருந்தாலும், அவர் செயலில் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்வதை குறிக்கும். 
  3. நம்பிக்கை = நம்முடைய சிறிய ‘கடுகு’ அளவு நம்பிக்கையையும் கடவுளிடம் வைத்தால், அவர் அதிசயங்களைச் செய்வார் என்பதை இதயத்தில் இருத்த அழைப்பு விடுகிறது. 

அன்பானவர்களே,

  • அபக்கூக்கு தீர்க்கதரிசி சொல்வது போல, நம்பிக்கையினால் வாழ்வோம்....
  • பவுல் சொல்வது போல, வல்லமையும் அன்பும் நிறைந்த ஆவியோடு நம்பிக்கையோடு சான்று சொல்லுவோம்...
  • இயேசு சொல்வது போல, சிறிய நம்பிக்கையைக் கூட பெரிதாக வாழ்வில் வெளிப்படுத்துவோம்...

ஆகையால், நம் வாழ்வு முழுவதும்: 👉 நம்பிக்கையில் வாழ,
👉 நம்பிக்கையில் வல்லவர்களாகிட,
👉 நம்பிக்கையில் பணிவுடன் கடவுளுக்குச் சேவை செய்ய  நம்மை ஆண்டவரிடம் ஒப்படைப்போம்.

இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...


வெள்ளி, 3 அக்டோபர், 2025

என் பெயர் எழுதப்பட்டிருக்குமா? (4.10.2025)

அன்புடைய சகோதரர் சகோதரிகளே,


இன்றைய முதல் வாசகத்தில் (பாரூக்கு 4:5-12, 27-29) இறைவன் நமக்கு ஒரு ஆறுதல் செய்தி தருகிறார். இஸ்ரவேல் மக்கள் தங்கள் பாவங்களினால் அடிமைப்பட்டனர், துன்பங்கள் பலவற்றை  அனுபவித்தனர், ஆனாலும் கடவுள் அவர்களை விட்டுவிடவில்லை. “நீங்கள் என்னை விட்டுப் போவதற்கு முன்பாக  ஆர்வமாய் இருந்தது; இப்போது அதைவிடப் பெரும் ஆர்வத்துடன் என்னைத் தேடுங்கள்; நான் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் தருவேன்” என்று ஆண்டவர் வாக்குத்தருகிறார்.

அதேபோல் நற்செய்தியில் (லூக்கா 10:17-24) சீடர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்களும் எங்களுக்கு அடிபணிகின்றன” என்று சொல்கின்றனர். ஆனால் இயேசு அவர்கள் மகிழ்ச்சியை வேறு திசைக்கு திருப்புகிறார்:
“அதற்காக மகிழ வேண்டாம்; மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதற்காகவே மகிழுங்கள்” என்று.

1. நமக்கான முக்கியமான மகிழ்ச்சி

நாம் உலகத்தில் பல சாதனைகளை அடையலாம் – நல்ல வேலை, பணம், நிலம், அதிகாரம், புகழ். ஆனால் இயேசு சொல்லுகிறார்: இவை எல்லாம் தற்காலிகம். உண்மையான மகிழ்ச்சி – நம் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறதே என்பதில்தான். அதாவது, கடவுள் நம்மைத் தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்; நம் வாழ்வு அவருடைய அன்பில் நிலைபெற்றிருக்கிறது என்பதே பெரிய மகிழ்ச்சி.

2. தூய பிரான்சிஸ் அசிசியாரின் சாட்சியம்

இன்றைய தினம் நாம் நினைவுகூரும் தூய பிரான்சிஸ் அசிசியார் (1182–1226) இதற்கான அழகிய எடுத்துக்காட்டு.
அவர் செல்வச் செழிப்பில் வளர்ந்தவர். ஆனால், அவர் செல்வம், புகழ், அதிகாரம் – இவை எல்லாம் மறைந்து போகும். உண்மையான மகிழ்ச்சி, கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கையில் இருக்கிறது என்பதை  உணர்ந்தவர்....

அவர் தந்தையின் செல்வத்தையும், ஆடைகளையும் துறந்து, நிர்வாணமாக ஆயரின் முன் நின்றார். “இனி எனக்கு ஒரே தந்தை – வானத் தந்தை” என்றார்.
அவர் ஏழைகளுக்காக வாழ்ந்தார், இயற்கையை நேசித்தார், பறவைகளிடம் கூட “சகோதர சகோதரிகள்” என்று பேசியார்.

அவர் வாழ்வு நமக்கு நினைவூட்டுகிறது: உலகப் பெருமையல்ல, விண்ணகத்தில் எழுதப்பட்ட பெயர்தான் முக்கியம்.

3. கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • ஏழைகளிடத்தில் அன்பு: பிரான்சிஸ் சொன்னார்: “நம்மை விட வறியவரைக் கண்டால், அவருக்கு நம்மிடம் இருப்பதை கொடுக்காவிட்டால் அது பெரிய பாவம்.”
  • எளிமையான வாழ்க்கை: நமக்கு எவ்வளவு கிடைத்தாலும், சிக்கனமாக வாழ்ந்து, பிறருடன் பகிர்ந்துகொள்வது.
  • இயற்கையை நேசித்தல்: பூமி, சூரியன், நிலா, காற்று – அனைத்தையும் கடவுளின் வரமாக ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பது.
  • நற்செய்தியை அறிவித்தல்: பிரான்சிஸ் தனது வாழ்வின் சாட்சியத்தால் நற்செய்தியை அறிவித்தார்.

ஒரு சிறுவன் தந்தையிடம் கேட்டான்: “என் வாழ்க்கையில் யாருக்காக அக்கறை கொள்ளவேண்டும்?” தந்தை பாலை காட்டி, அதில் சக்கரையை கலந்து, “சமூக அக்கறை என்னும் சக்கரை இல்லாமல் வாழ்க்கை இனிக்காது” என்றார். அதேபோல், அடுத்தவருக்கு அன்பும் அக்கறையும் இல்லாமல் நம் வாழ்க்கை இனிப்பில்லை என்றார்...

இன்று நம் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டுமெனில்:

  • கடவுளை நோக்கி திரும்ப வேண்டும்.
  • பாவத்திலிருந்து விலகி, அன்பில் நிலைநிற்க வேண்டும்.
  • ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும்.
  • இயற்கையை நேசிக்க வேண்டும்.

இவ்வாறு வாழ்ந்தால், நம் பெயர்கள் நிச்சயம் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கும்.

அன்புடைய சகோதரர் சகோதரிகளே,
தூய பிரான்சிஸ் அசிசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், நாமும் அவரைப் போல எளிமையில் வாழ்ந்து, அடுத்தவருக்காக தியாகம் செய்து, இயற்கையை நேசித்து வாழ்வோம்.

அப்பொழுது ஆண்டவர் இயேசு சொல்லுவார்:
“உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன” என்று.
இதுவே நமக்கு உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும்...


எழு! ஒளிவீசு!... 4.1.2026

 “எழு! ஒளிவீசு!” – காணிக்கைத் திருநாளின் மறையுரை.... அன்பான சகோதரர் சகோதரிகளே, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஒரு சக்திவாய்ந்...