வெள்ளி, 28 அக்டோபர், 2022

சுயநலம் கடந்து கடவுளின் பாதையில் நடந்து செல்ல! ( 30-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகமானது, மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்தில் உள்ள பலவற்றின் மீது தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற மனநிலையோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்தின் மீதும் அதிகாரம் அற்றவர்களாகவே நாம் இருக்கிறோம் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள யோபுவின் வாழ்வு நமக்கு பாடம் கற்பிக்கிறது. 

இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நற்செய்தி வாசகத்திற்கு நகர்ந்து செல்லுகிற போது, இன்றைய நற்செய்தி வாசகமானது நமது வாழ்வை குறித்தும் ஆழமாக சிந்திப்பதற்கு அழைப்பு தருகிறது. அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கின்ற நாம், அந்த வார்த்தைகளுக்கு செவி கொடுக்கக் கூடிய மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற ஆழமான கருத்தை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. 
      கடவுள் நம்மை இந்த மண்ணில் படைத்ததன் நோக்கம், அவர் படைத்த இந்த உலகத்தை பாதுகாக்கவும் பண்படுத்தவுமே. ஆனால் இன்று நமது சுயநலத்தால் இந்த உலகத்தை அழிக்கக் கூடிய மனிதர்களாக, தன்னுடைய வார்த்தைகள் மட்டுமே, தன்னுடைய நலன் மட்டுமே, என்ற எண்ணம் கொண்டு தன்னலம் சார்ந்த மனிதர்களாகவே நாளும் வளர்கிறோம். ஆனால் நாம் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுத்து நமது வாழ்வை நெறிப்படுத்துகிற போது, நமது வாழ்வு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக இருக்கிறது. கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ நீங்களும் நானும் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 
 
        இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்தவர்களாக, நாளும் கடவுளின் பாதையில் நடந்து செல்ல, இறைவனின் அருள் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

செவ்வாய், 25 அக்டோபர், 2022

புனித மிக்கேல், கபிரியேல், ரஃபேல் திருவிழா! (29-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

இன்று தாய்த்திரு அவையானது, வான தூதர்களான கபிரியேலையும், ரஃபேலையும், மிக்கேலையும் நினைவு கூருவதற்கு நமக்கு அழைப்பு தருகின்றது.

இவர்களின் மூவரின் வாழ்வையும் நாம் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

 கபரியேல் வான தூதர் கடவுளின் நற்செய்தியை மண்ணில் வாழுகிற மனிதர்களுக்கு சுமந்து வரக்கூடிய நபராக இருந்தார். கடவுளின் நற்செய்தியை அறிவித்து, அந்த நற்செய்தியின் பொருட்டு அனைவரும் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்பதை இவரிடமிருந்து நாம் உணர்ந்து கொண்டோம். நமது வார்த்தைகளும் இந்த மண்ணில் மகிழ்ச்சியை தருகிறதா? நல்லதை விதைக்கிறதா? என்பதை சிந்திப்பதற்கு இவரின் வாழ்வு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இன்றைய நாளில் நாம் நினைவு கூருகின்ற மிக்கேல் அதிதூதரின் வாழ்வை உற்று நோக்குகிற போது,  கடவுளுக்கு நிகர் யார் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப கடவுளின் தூதராக இருந்து, தீய ஆவிகளிடமிருந்து போராடி நம்மை மீட்கக் கூடியவராக இந்த மிக்கேல் அதிதூதர் இருப்பதை நாம் விவிலியத்தின் துணை கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. இந்த மிக்கேல் அதிதூதரின் வாழ்வோடு நமது வாழ்வையும் ஒப்பிடுகிற போது, அனுதின மனித வாழ்வில் நாம் பல நேரங்களில், பலவிதமான தீய நாட்டங்களுக்கு அடிமையாகிறோம். ஆனால் இந்த தீய நாட்டங்களோடு எதிர்த்து போர் புரிந்து 
வெற்றி பெறக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை இந்த வானதூதரின் வாழ்வில் இருந்து நாம் உள்வாங்கிக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.

 மூன்றாவதாக இன்றைய நாளில் நினைவு கூரப்படக்கூடிய வான தூதர் ரஃபேலின் வாழ்வை ஒப்பிட்டு பார்க்கின்ற போது, தோபித்துக்கும் சாராவிற்கும் இடையே தோன்றி அவர்களிடம் இருந்த பிணிகளை எல்லாம் நீக்கி அவர்களுக்கு சுகம் தரக்கூடிய நபராக, இந்த ரஃபேல் என்ற வான தூதர் இருந்தார் என்பதை விவிலியத்தின் துணை கொண்டு நாம் அறிகிறோம். 

இந்த ரஃபேல் அவர்களின் வாழ்வோடு நமது வாழ்வையும் ஒப்பிட்டு பார்க்கிற போது, துன்புறக்கூடிய நபர்களையும், வேதனையில் வாடுகின்றவர்களுக்கும், நாம் துணை நிற்கின்றோமா? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி பார்க்க இந்த வான தூதரின் வாழ்வானது நமக்கு அழைப்பு தருகிறது. 

இன்றைய நாளில் திரு அவை வலியுறுத்துகின்ற இந்த மூன்று வான தூதர்களின் வாழ்வோடு நமது வாழ்வையும் ஒப்பிட்டு பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை, சாட்சிய வாழ்வை வாழ்வதற்கான அருளை, இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
 

  

வெள்ளி, 14 அக்டோபர், 2022

கடவுளின் வல்லமையை உணர்ந்து கொள்வோம்! (28-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதருமே நம் வாழ்வில் ஏற்படுகிற துன்பங்களுக்கான அடிப்படை காரணம் என்ன என்ற கேள்விக்கு பல நேரங்களில் பதில் தேடக்கூடியவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். 

ஆனால் நமது வாழ்வில் ஏற்படுகின்ற இழப்புகளாக இருக்கட்டும், துன்பங்களாக இருக்கட்டும், அனைத்துமே கடவுளின் வல்லமையை நாம் இன்னும் ஆழமாக அதிகமாக உணர்ந்து கொள்வதற்காக தரப்படுகிறது என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். ஒருவர் உடல் நலமற்று இருப்பதற்கு காரணம் அவர் செய்த பாவம் அல்ல. மாறாக, கடவுளின் மாட்சி அவர் வழியாக வெளிப்படுகிறது என்பதை இன்றைய முதல் வாசகமானது தெளிவாக எடுத்துரைக்கிறது. 

        இந்த இறை வார்த்தையின் பின்னணியோடு நற்செய்தி வாசகத்திற்கு நாம் நகர்ந்து செல்லுகிற போது, கடவுளை பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிற நாம் ஒவ்வொருவருமே, அவரைப் பின்பற்றுவதிலும் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவதிலும் நிலைத்திருப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் இந்த கடவுளை பின்பற்றக்கூடிய நாம், பின்பற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு, பலவிதமான காரணங்களை சொல்லிச் சொல்லி, தவறிப் போகின்றவர்களாக, கடவுளை விட்டு விலகிப் போகின்றவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கலப்பையில் கை வைத்தவன் திரும்பி பார்க்கலாகாது  என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப, நாம் ஒவ்வொருவரும் அவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாளும் வாழ்வதற்கான அருள் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
  

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...