இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகமானது, மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்தில் உள்ள பலவற்றின் மீது தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற மனநிலையோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்தின் மீதும் அதிகாரம் அற்றவர்களாகவே நாம் இருக்கிறோம் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள யோபுவின் வாழ்வு நமக்கு பாடம் கற்பிக்கிறது.
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நற்செய்தி வாசகத்திற்கு நகர்ந்து செல்லுகிற போது, இன்றைய நற்செய்தி வாசகமானது நமது வாழ்வை குறித்தும் ஆழமாக சிந்திப்பதற்கு அழைப்பு தருகிறது. அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கின்ற நாம், அந்த வார்த்தைகளுக்கு செவி கொடுக்கக் கூடிய மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற ஆழமான கருத்தை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.
கடவுள் நம்மை இந்த மண்ணில் படைத்ததன் நோக்கம், அவர் படைத்த இந்த உலகத்தை பாதுகாக்கவும் பண்படுத்தவுமே. ஆனால் இன்று நமது சுயநலத்தால் இந்த உலகத்தை அழிக்கக் கூடிய மனிதர்களாக, தன்னுடைய வார்த்தைகள் மட்டுமே, தன்னுடைய நலன் மட்டுமே, என்ற எண்ணம் கொண்டு தன்னலம் சார்ந்த மனிதர்களாகவே நாளும் வளர்கிறோம். ஆனால் நாம் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுத்து நமது வாழ்வை நெறிப்படுத்துகிற போது, நமது வாழ்வு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக இருக்கிறது. கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ நீங்களும் நானும் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்தவர்களாக, நாளும் கடவுளின் பாதையில் நடந்து செல்ல, இறைவனின் அருள் வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக