இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதருமே நம் வாழ்வில் ஏற்படுகிற துன்பங்களுக்கான அடிப்படை காரணம் என்ன என்ற கேள்விக்கு பல நேரங்களில் பதில் தேடக்கூடியவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நமது வாழ்வில் ஏற்படுகின்ற இழப்புகளாக இருக்கட்டும், துன்பங்களாக இருக்கட்டும், அனைத்துமே கடவுளின் வல்லமையை நாம் இன்னும் ஆழமாக அதிகமாக உணர்ந்து கொள்வதற்காக தரப்படுகிறது என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். ஒருவர் உடல் நலமற்று இருப்பதற்கு காரணம் அவர் செய்த பாவம் அல்ல. மாறாக, கடவுளின் மாட்சி அவர் வழியாக வெளிப்படுகிறது என்பதை இன்றைய முதல் வாசகமானது தெளிவாக எடுத்துரைக்கிறது.
இந்த இறை வார்த்தையின் பின்னணியோடு நற்செய்தி வாசகத்திற்கு நாம் நகர்ந்து செல்லுகிற போது, கடவுளை பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிற நாம் ஒவ்வொருவருமே, அவரைப் பின்பற்றுவதிலும் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவதிலும் நிலைத்திருப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறோம். பல நேரங்களில் இந்த கடவுளை பின்பற்றக்கூடிய நாம், பின்பற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு, பலவிதமான காரணங்களை சொல்லிச் சொல்லி, தவறிப் போகின்றவர்களாக, கடவுளை விட்டு விலகிப் போகின்றவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கலப்பையில் கை வைத்தவன் திரும்பி பார்க்கலாகாது என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப, நாம் ஒவ்வொருவரும் அவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாளும் வாழ்வதற்கான அருள் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக