இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையானது, வான தூதர்களான கபிரியேலையும், ரஃபேலையும், மிக்கேலையும் நினைவு கூருவதற்கு நமக்கு அழைப்பு தருகின்றது.
இவர்களின் மூவரின் வாழ்வையும் நாம் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
கபரியேல் வான தூதர் கடவுளின் நற்செய்தியை மண்ணில் வாழுகிற மனிதர்களுக்கு சுமந்து வரக்கூடிய நபராக இருந்தார். கடவுளின் நற்செய்தியை அறிவித்து, அந்த நற்செய்தியின் பொருட்டு அனைவரும் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்பதை இவரிடமிருந்து நாம் உணர்ந்து கொண்டோம். நமது வார்த்தைகளும் இந்த மண்ணில் மகிழ்ச்சியை தருகிறதா? நல்லதை விதைக்கிறதா? என்பதை சிந்திப்பதற்கு இவரின் வாழ்வு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இன்றைய நாளில் நாம் நினைவு கூருகின்ற மிக்கேல் அதிதூதரின் வாழ்வை உற்று நோக்குகிற போது, கடவுளுக்கு நிகர் யார் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப கடவுளின் தூதராக இருந்து, தீய ஆவிகளிடமிருந்து போராடி நம்மை மீட்கக் கூடியவராக இந்த மிக்கேல் அதிதூதர் இருப்பதை நாம் விவிலியத்தின் துணை கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. இந்த மிக்கேல் அதிதூதரின் வாழ்வோடு நமது வாழ்வையும் ஒப்பிடுகிற போது, அனுதின மனித வாழ்வில் நாம் பல நேரங்களில், பலவிதமான தீய நாட்டங்களுக்கு அடிமையாகிறோம். ஆனால் இந்த தீய நாட்டங்களோடு எதிர்த்து போர் புரிந்து
வெற்றி பெறக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை இந்த வானதூதரின் வாழ்வில் இருந்து நாம் உள்வாங்கிக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.
மூன்றாவதாக இன்றைய நாளில் நினைவு கூரப்படக்கூடிய வான தூதர் ரஃபேலின் வாழ்வை ஒப்பிட்டு பார்க்கின்ற போது, தோபித்துக்கும் சாராவிற்கும் இடையே தோன்றி அவர்களிடம் இருந்த பிணிகளை எல்லாம் நீக்கி அவர்களுக்கு சுகம் தரக்கூடிய நபராக, இந்த ரஃபேல் என்ற வான தூதர் இருந்தார் என்பதை விவிலியத்தின் துணை கொண்டு நாம் அறிகிறோம்.
இந்த ரஃபேல் அவர்களின் வாழ்வோடு நமது வாழ்வையும் ஒப்பிட்டு பார்க்கிற போது, துன்புறக்கூடிய நபர்களையும், வேதனையில் வாடுகின்றவர்களுக்கும், நாம் துணை நிற்கின்றோமா? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி பார்க்க இந்த வான தூதரின் வாழ்வானது நமக்கு அழைப்பு தருகிறது.
இன்றைய நாளில் திரு அவை வலியுறுத்துகின்ற இந்த மூன்று வான தூதர்களின் வாழ்வோடு நமது வாழ்வையும் ஒப்பிட்டு பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை, சாட்சிய வாழ்வை வாழ்வதற்கான அருளை, இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக