அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்றைய இறைவார்த்தை நம்மை இரண்டு முக்கியமான செய்திகளை இதயத்தில் நிறுத்திக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது ...
முதலாவது, எஸ்ரா நூலில் நாம் கேட்பது போல, யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்தபோது, அவர்கள் முதன்மையாகக் கவனம் செலுத்தியது என்னவென்றால் இறைவனின் கோவிலை மீண்டும் கட்டி முடித்து, பாஸ்கா திருவிழாவை கொண்டாடுவது. இது இறைவனின் மக்களாக வாழ்வதற்கு, எப்போதும் கடவுளுக்கு உரிய இடத்தை நம் வாழ்வில் முதன்மை அளிக்க வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது... கோவில் இல்லா நகரில் குடியிருத்தல் ஆகாது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப அடிமைத்தனத்திலிருந்து வந்த மக்கள் ஆண்டவரின் ஆலயத்தை முதலில் கட்டி எழுப்ப வேண்டும் என முன்னுரிமை கொடுத்தது கடவுளுக்கு அவர்கள் கொடுக்கின்ற முன்னுரிமையின் அடையாளமாக காண்பிக்கப்படுகிறது .
இரண்டாவது, லூக்கா நற்செய்தியில் இயேசு சொல்வதை கேட்கிறோம்:
“இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்.”
இயேசுவின் வார்த்தைகளால் இன்று நமக்குத் தெளிவான வாழ்க்கை பாடத்தை சுட்டிக் காட்டுகிறது இயேசுவின் குடும்பத்தில் இருக்கிறவர் (அவரது சகோதர சகோதரிகள் அல்லது அவரை அறிந்தவர்கள்) என்பது இரத்தத்தால் மட்டும் அல்ல; இறைவார்த்தையை வாழ்வாக்குவதால் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்கான ஒரு மிகச் சிறந்த முன் உதாரணமாக நம் முன் நிற்கிறார் இன்று நாம் நினைவு கூறுகிற புனித பியோ.
புனிதர் பியோ அவர்கள் தனது வாழ்நாளை முழுவதும் இறைவார்த்தையை கேட்டு அதன்படி வாழ்ந்தவர்.
- அவர் தியானம், ஜெபம், ஒப்புரவு அருட்சாதனம் ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை கடவுளின் அருளுக்கு நெருங்கச் செய்தார்.
- இயேசுவின் துன்பங்களை தனது உடலில் பெற்றுக் கொண்டு ஐந்துகாயங்களை சுமந்து, இயேசுவின் சிலுவைப்பாதையில் ஒன்றித்து வாழ்ந்தவர்.
- மக்கள் துன்பங்களை அறிந்து, ஆறுதல் கூறி, கடவுளை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றவர்.
புனித பியோ அவர்களின் வாழ்வு நமக்கு நமக்குத் தரும் பாடம்
இறைவார்த்தையை கேட்பது மட்டும் போதாது; அதை வாழ்வாக்க வேண்டும்.
இன்று நம் வாழ்வில் இறை வார்த்தைகள்...
சகோதர சகோதரிகளே,
நாம் அனைவரும் இயேசுவின் குடும்பத்தில் இடம்பிடிக்க விரும்புகிறோம். அவரின் உறவினர்களாக அவரை அறிந்தவராக அவரது சகோதர சகோதரிகளாக நாம் இருக்க விரும்புகிறோம் என்றால் அதற்கான வழி:
- நம் வீட்டை, குடும்பத்தை, இறைவனின் ஆலயமாகமாற்றுவது.
- தினசரி ஜெபத்திலும்,இறை வார்த்தை மற்றும் புனிதர்களை பற்றிய வாசிப்பிலும் ஈடுபடுவது.
- நமக்கு அருகிலுள்ளவர்களுக்கு ஆறுதல், உதவி, அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை நம் செயல்களால் வெளிப்படுத்துவது ...
இவ்வாறு வாழும்போது தான் நாம் இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்குகிறோம்... அப்போதுதான்
“இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.” என்ற வார்த்தை நிறைவு பெறும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக