வெள்ளி, 9 ஏப்ரல், 2021

எதை செய்வது? (10.4.2021)

எதை செய்வது?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் கல்வியறிவற்ற இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றி அறிவிப்பதை கண்டு அச்சமுற்ற பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடி அவர்களை கைது செய்து, இனிமேல் இயேசுவைப் பற்றி பேசவோ கற்பிக்கவோ கூடாது என ஆணை பிறப்பிக்கிறார்கள். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில்,  இயேசு தன்னுடைய உயிர்ப்புச் செய்தியை தன் சீடர்களுக்கு அறிவித்து, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என நற்செய்தியின் பணியாளர்களாக வாழ அழைப்பு தருகின்றார். இயேசுவின் அழைப்பு ஒன்றாக இருக்க,  இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய சட்டதிட்டங்களும், அதனை6 தங்கள் கையில் வைத்திருக்கக் கூடிய அதிகாரிகளின் அச்சுறுத்தலும் ஒரு புறம் இருக்க, இயேசுவின் சீடர்கள் இரண்டில் எதை தேர்வு செய்வது என்ற எண்ணத்தோடு பயணித்தாலும், தெளிவு கொண்டவர்களாக துணிச்சலோடு இறைவன் பணியை செய்வதே எங்களது நோக்கம் எனக் கருதி ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.  இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் நாமும் இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். நமது முன்பாக ஒரு அநீதி இழைக்கப்படும் போது நடப்பது அநீதி என்பதை எடுத்துரைத்து அந்த அநீதியை நடக்காமல் தடுப்பதா? அல்லது தன்னைத் தீண்டவில்லை இது, யாரோ ஒருவரின் வாழ்வில் தானே அரங்கேறுகிறது என்று கூறிவிட்டு,  கண்டும் காணாமல் இருந்து போவதா? என்ற  இரண்டு விதமான பார்வைகளையும் அன்றாடம் நமது வாழ்வில் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் எதை நாம் முன்னிறுத்துவது? எந்தப் பணியை செய்வது?  எதை செய்வது? என சிந்திக்கவும் செயல்படவும் இன்று நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் சீடர்கள் இவ்வுலக சட்டதிட்டங்களுக்கும் அதிகாரங்களைத் தன் கையில் வைத்திருக்கக் கூடிய அதிகாரிகளுக்கும் அஞ்சவில்லை. அவர்கள் ஆண்டவருக்கே அஞ்சினார்கள். எனவே தான் ஆண்டவர் பணியை செய்வோம். அதனால் துன்பங்கள் கிடைக்குமானால் இன்பதோடு அதனை ஏற்றுக் கொள்வோம். உயிரையும் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகுமானால், அதையும் துணிவோடு எதிர் கொள்வோம் என்ற எதிர்நோக்கோடு இயேசுவின் பணியை முன்னெடுத்துச் சென்றார்கள். 
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் இத்தகைய சீடத்துவ மனப்பான்மை நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். நம் கண் முன்பாக நடப்பது அநீதி எனத் தெரியும் பொழுது, அது நமக்கு நடந்தாலும் சரி, அடுத்தவருக்கு நடந்தாலும் சரி, அது அநீதி என்பதை சுட்டிக்காட்டவும், அங்கு நீதியை நிலைநாட்டக் கூடிய இயேசுவின் சீடத்துவ பணியைச் செய்வதற்கு இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். இப்பணியைச் செய்வதால் பலவிதமான இன்னல்களையும் துன்பங்களையும் சந்திக்க நேரலாம். மனம் துவண்டு விட வேண்டாம். நாம் செய்கின்ற சிறுசிறு நன்மையும் மிகப்பெரிய மாற்றத்தை இச்சமூகத்தில் உருவாக்கும்.  எப்படி இயேசுவின் சீடர்களுடைய துணிச்சல் மிக்க போதனை பலரின் உள்ளங்களைக் கவர்ந்ததோ, பலரின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அதுபோல நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு செயல்களும்  சின்னஞ்சிறிய நீதிக்கான செயல்களும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதை மனதில் கொண்டவர்களாக நாமும் இயேசுவின் சீடர்களைப் போல சீடத்துவ பணியை மேற்கொள்ள இன்றைய நாளில் இறையருளை வேண்டி பயணிப்போம்.

வியாழன், 8 ஏப்ரல், 2021

இறைவன் துணை நிற்பார்...? (9.4.2021)

இறைவன் துணை நிற்பார்...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இயேசுவின் பெயரால் நல்லது செய்ததற்காக பலராலும் இயேசுவின் சீடர்கள் வெறுக்கப்படுகிறார்கள். இதையே இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.  உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அவர்களோடு மீன்பிடிக்கச் செல்கிறார். அவர்களோடு உணவருந்துகிறார் என்பதனை இன்றைய நற்செய்தி  வாசகத்தின் வழியாக அறிகிறோம்.

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் நலமான நல்ல பணிகளை நாம் முன்னெடுக்கும் போது பலவிதமான தடைகளையும் தடங்கல்களையும் சந்திக்க நேரலாம்.  உடன் இருப்பவர்களே நம்மை விட்டு ஒதுங்கி இருக்கக் கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம். ஆனால் எந்த நேரத்திலும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை நாம் இழக்காது தொடர்ந்து நற்செயல்கள் செய்து கொண்டே இருக்க இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன. இயேசுவின் பெயரால் ஒருவரை குணப்படுத்திய போதும், ஒருவரை குணப்படுத்தியதற்காக  பலவிதமான இன்னல்களை பேதுருவும் உடனிருந்த சீடர்கள் பலரும் அனுபவித்தார்களோ,  அவர்களைப் போலவே நாமும் நலமான பணிகளை முன்னெடுக்கும் போது பலருடைய எதிர்ப்புகளை சந்திக்கும் போது, மனம் தளராது தொடர்ந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம். நமது  நம்பிக்கை உறுதியோடு இருக்கும் போது இறைவன் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துவார். இதையே தான் இன்று ஆண்டவர் இயேசு  தன்னுடைய உயிர்ப்பிற்கு பிறகு தன்னுடைய உடனிருப்பை தன் சீடர்களோடு பகிர்ந்து கொள்வதை புரிந்து கொள்ளலாம். நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு பயணிக்கும் போது இறைவன் நம்மோடு இருந்து நலமான நல்ல பணிகளை செய்வதற்கு துணை நிற்பார். அவர் மீது அதீத ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக தொடர்ந்து நல்ல செயல்களை முன்னெடுக்க கூடியவர்களாக இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

புதன், 7 ஏப்ரல், 2021

எவரை முன்னிறுத்துவது? (8.4.2021)

எவரை முன்னிறுத்துவது?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்று தாய்த் திருஅவையாக நாம் அனைவரும் இணைந்து ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு தன்னால் குணம் பெற்ற ஒருவனைப் பார்த்து,  இவர் என்னால் குணம் பெறவில்லை.  இயேசு என்ற வார்த்தையினால் குணம் பெற்றார். நாங்கள் பெரிதாக எதையும் செய்யவில்லை. இயேசு என்ற வல்லமை தான் அனைத்தையும் செய்தது என இயேசுவை முன்னிறுத்தி தனது பணியை செய்கின்ற செயலை இன்று நாம் காணுகின்றோம்.

 நாம் வாழும் இந்த உலகத்தில் வெறுமனவே வெற்று தம்பட்டம் அடிக்கக் கூடிய மனிதர்களுக்கு மத்தியில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதனை மிகவும் அழகாக தெளிவாக பேதுரு தன் வாழ்வு மூலம் வெளிப்படுத்துகிறார்.  இதையே இன்றைய வாசகங்களில் நாம் வாசிக்க கேட்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும்  கூட இயேசு  தன் உயிர்ப்பை சீடர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்களின் கலக்கத்தை போக்குகிறார். அவர்களின் அச்சத்தை நீக்குகிறார்.  கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் மனம் மாறுகிறார்கள்.

 இன்று நாமும் மனமாரத் தான் அழைக்கப்படுகிறோம். மனமாற்றம் பொதுவாகவே எல்லோரும் பல நேரங்களில் பேசக் கூடிய ஒன்றுதான். எத்தகைய மன மாற்றம் தேவை என்பதைத் தான் இன்றைய முதல் வாசகம் விளக்குகிறது. எதை செய்தாலும் தனக்கே பெருமை என பெருமையைத் தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, பெயரைம் புகழையும் தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு,  ஆண்டவரை முன்னுரிமைப்படுத்தி, முதன்மைப்படுத்தி, நலமான நல்ல பணிகளைச் செய்யவும் அப்பணிகள் வழியாக நாம் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் என்பதையும் வெளிக்காட்டக் கூடியவர்களாக வாழ புத்துணர்வு பெற்று மனமாற்றம் அடையக் கூடியவர்களாக இருக்க இன்று அழைக்கப்படுகிறோம். நமது மனமாற்றம் வார்த்தை அல்ல அது செயலாக்கப்பட வேண்டும். பேதுருவைப் போல எதை செய்தாலும், இயேசு கிறிஸ்துவை முன்னிறுத்திச் செய்ய நாம் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய்  தொடர்ந்து பயணிப்போம்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

வார்த்தைகள் வாழ்வாகட்டும் வாழ்வு அளிக்கட்டும்... (7.4.2021)

வார்த்தைகள் வாழ்வாகட்டும் வாழ்வு அளிக்கட்டும்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்று முதல் வாசகத்தில் பேதுரு தன்னிடம் கையேந்தி பிச்சை கேட்கும் ஒரு நபரிடம், என்னிடம் பொன்னும் இல்லை, பொருளும் இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன் என கூறி, தான் கொண்டிருந்த ஆண்டவர் இயேசுவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில், என்னிடம் இருப்பது இயேசுவே. அந்த இயேசுவின் பெயரால் சொல்கிறேன் என்று கூறி, முடக்கு வாதமுற்ற அந்த நபரை குணப்படுத்துகிறார்.

 நற்செய்தி வாசகத்திலும் கிளயோப்பா என்ற நபர் இயேசுவின் உயிர்ப்பை பற்றி அறியாதவராக இருக்கிறார். அவர் எப்படி நிகழ்ந்தது? என்ன ஆனது? என்ற கேள்விகளை எழுப்பும் போது இயேசுவின் உயிர்ப்பை அவருக்கு சீடர்கள் அறிவித்தார்கள். இன்று நாம் வாழும் இந்த உலகில் நாமும் ஒவ்வொரு நாளும் திருப்பலியில்,  "இது விசுவாசத்தின் மறைபொருள்" என்று கூறப்படும்போது, "ஆண்டவரே! நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி செபிக்கின்றோம். ஆனால் நமது செபங்கள் வெறும் சொல்லாக இருக்கிறதா? செயல் வடிவம் பெறுகிறதா? என்பதை சிந்திக்க இன்று அழைக்கப்படுகிறோம்.  அன்று இயேசுவின் சீடர்கள் தாங்களும் இயேசுவைப் போலவே சொல்லில் மட்டுமே இருப்பதை விட்டுவிட்டு செயலில் காட்டினார்கள். இயேசுவும் மண்ணில் வாழ்ந்த போது சொல்லியதை விட அதையெல்லாம் தன் செயலில் காட்டினார் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.  நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் சொல்லுவதை குறைத்துக்கொண்டு சொல்லுவதை செய்யக் கூடியவர்களாக இருக்க இறையருள் வேண்டி,  இன்றைய நாளில் இறைவனிடம் மன்றாடுவோம். வெறும் செபங்களாக நமது வார்த்தைகள் இல்லாமல்,  வார்த்தைகள் வாழ்வாகட்டும். பிறருக்கு வாழ்வை அளிக்கட்டும்.  வார்த்தைகள் நமது வாழ்வாக மாறட்டும். அவ்வார்த்தைகள் அடுத்தவருக்கு வாழ்வளிக்கட்டும். அதற்கான இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம் இன்றைய நாளில்.

திங்கள், 5 ஏப்ரல், 2021

நாம் என்ன செய்ய வேண்டும்? (6.4.2021)

நாம் என்ன செய்ய வேண்டும்? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் உயிர்ப்பை பேதுரு மற்றவர்களுக்கு அறிவிக்கின்றார். பேதுருவின் வார்த்தைகளை கேட்டவர்கள் உள்ளம் குத்துண்டவர்களாக நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார்கள். அவர்களை  மனம் மாறி திருமுழுக்கு பெறுவதற்கு பேதுரு அழைப்பு தருகின்றார். அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் மகதலா மரியாவும் இயேசுவை தேடிச் செல்கிறார். இயேசுவை காணாததால் திகைப்புறுகிறார். அப்போது அவரிடம் யாரை தேடுகிறீர்கள்? என்ற குரல் ஒலியோடு இயேசுவின் உயிர்ப்பு செய்தியானது அந்த பெண்மணிக்கு வழங்கப்படுகிறது. 

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில், "உங்கள் ஓட்டு எனக்கே! என்னை ஆதரியுங்கள்! நான் உங்களுக்காகவே என் இரத்தத்தை சிந்துவேன்! உங்களுக்காக நான் அனைத்தையும் செய்து கொடுப்பேன் என்று  நம்மை தேடி வந்தவர்கள் எல்லாம் பிரச்சாரம் ஓய்ந்ததனால் அமைதியாகி விட்டார்கள். இவர்கள் எல்லோரும் நம்மை தேடி வந்ததன் நோக்கம் நன்மை செய்யவேண்டும் என சொல்லுவார்கள். ஆனால் சொல்லும் செயலும் ஒத்துப் போகிறதா? என்பதை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இன்றைய நாளில் இருக்கிறோம். மகதலா மரியா இயேசுவை தேடிச் சென்றார். எந்தவித முன் சார்பு எண்ணமும் இல்லாமல் இறந்தவரின் உடலை சென்று பார்க்க வேண்டும். அவருக்கு நறுமண தைலம் பூச வேண்டும் என்று சேவை மனப்பான்மையோடு தேடிச் சென்றாள்.  நம்மை தேடி வந்தவர்கள் பலருள் சிலர் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.  அவர்களை கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது. அவர்களை கண்டு கொண்டு அவர்களுக்கு நமது வாக்குகளை கொடுத்து  அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவர்களை தெரிவு செய்யவேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது.  எப்படி ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை பேதுரு  அறிவித்தபோது அதை கேட்பவர்கள் உள்ளம் குத்துண்டவர்களாக, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என கேட்பார்களோ! அது போல இன்று நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை  எழுப்புவோம். நம்மைத் தேடி வந்த பலருள் சேவை மனப்பான்மை கொண்ட நல்ல உள்ளங்களையும் நல்லவர்கள் யார் என்பதையும் கேள்வி கேட்டு இனம் கண்டு கொண்டு, அவர்களுக்கு நமது வாக்குகளை செலுத்தி அவர்கள் நேர்மையான உள்ளத்தோடு சேவையாற்ற நாம் வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். சேவை செய்ய வேண்டும்  என்ற எண்ணத்தோடு வருபவர்கள் எல்லாம் பதவிக்கு வந்த பிறகு சேவை  செய்யாமல் இருந்து கொண்டிருக்கக் கூடிய சூழலில், இவர்களில் யாரை நாம் தெரிவு செய்வது என்ற குழப்பமும் கேள்வியும் நம்மிடத்தில் ஆழமாக உண்டு. ஆனால் இன்று நாட்டுக்கு தேவையான நலமான பணிகளை முன்னெடுக்கும் சிலரை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  எனவே  தேர்தல் நாளாகிய இன்றைய நாளில், நாம் தவறாது நமது கடமையைச் செய்ய முன்வருவோம்.  சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இன்றைய சூழலில் நமக்கு நன்மைகளை புரிந்திட யார் தேவையானவர்களோ,  அதை சிந்தித்து  அவர்களுக்கு நமது வாக்குகளை செலுத்தி அவர்கள் சேவையாற்ற வாய்ப்புகளை உருவாக்குவோம்.  

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இம்மண்ணில் வாழ்ந்த போது பல நலமான பணிகளை போதனைகளை முன்னெடுத்துக் கொண்டே சென்றார்.  அவரை எதிர்க்கக் கூடியவர்கள் பலர், அவர் மீது குற்றம் கூடியவர்கள் பலர். இயேசுவின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரைப் பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள்.  ஆனால் தடைகளை கடந்து அவர் சாதனை புரிந்தார். வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார். இறையாட்சி  இம்மண்ணில் மலர ஒரு உந்து சக்தியாகவும் முக்கியமான காரணமாகவும் இருந்தார். அவரின் இறப்பு இந்த உலகத்திற்கு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழ்வதற்கான அழைப்பை தந்துச் சென்றது.
  

இன்று அவர் உயிர்த்தார் என்ற மகிழ்ச்சியில் நாம் அனைவரும் திளைத்திருக்கிறோம்.  இந்த உயிர்ப்புச் செய்தியானது, தீமை எல்லா நாளும் தலை தூக்காது    என்பதை வெளிக்காட்டும் விதத்தில் அமைந்ததாக நாம் பொருள் கொள்ளலாம். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை கேட்டவர்கள் எல்லாம் அச்செய்தியின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக,  உள்ளம் குத்துண்டவர்களாக, தம்மையே கையளித்தார்கள். இன்றுள்ள சூழலில் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய  பணியை சிறப்பாக செய்திட நாம் அழைக்கப்படுகிறோம்.  நாமும் சுயமாக சிந்தித்து செயல்படவும், இயேசுவின் உயிர்ப்பில் மகிழவும், அந்த உயிர்ப்புச் செய்தியை பிறரோடு பகிரவும்,  அதன் வழி நலமான பல பணிகளை முன்னெடுக்கவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதியேற்போம்.

விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்! (5.4.2021)

விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் புனித பேதுரு இயேசுவின் உயிர்த்தெழுந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். தந்தையாம் கடவுள் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் வழியாக பல்வேறு வல்ல செயல்களையும் அரும் செயல்களையும் மக்களுக்கு ஆற்றி அவர்களுக்கு வாழ்வின் வழியை  திறந்து விடுகின்றார். ஆனால் மற்றவரின் வாழ்வை கண்டு பொறுக்காத தலைமை குருக்களும் பரிசேயர்களும் தாம் மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றவரின் நல்வாழ்வை தடை செய்யும் விதமாக, இயேசுவின் பணிகளை தடை செய்யும் விதமாக, தனது அகங்காரமும் ஆணவமும் மட்டுமே தழைத்தோங்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியவர்களாக திருச்சட்டத்தை அறியாதவர்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால் தந்தையாம் கடவுள் தன் மகன் இயேசுவை உயிர்த்தெழச் செய்து தலைமைக் குருக்களாலும் பரிசேயர்களாலும் அடைக்கப்பட்ட வாழ்வின் வழியை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பின் மூலம் மீண்டும் திறந்து விடுகின்றார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் இயேசு மகதலா மரியாவுக்கும் அவருடன் இருந்த பெண்களுக்கும் காட்சி தருகின்றார். இயேசுவின் சீடர்களை கலிலேயாவை நோக்கிச் செல்லுமாறு அப்பெண்கள் வழியாக கூறுகின்றார். இயேசுவின் கல்லறை தோட்டத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்கள் அவர் அங்கே இல்லாததைக் கண்டு தலைமை குருக்களிடம் வந்து அறிவிக்கின்றார்கள். நன்மையை விரும்பாத தலைமை குருக்கள் காவலர்களுக்கு மிகுதியான பணத்தை கொடுத்து இயேசுவின் உடலை தூக்கிச் சென்று விட்டார்கள் என்று கூறச் சொல்கிறார்கள். பணத்தால் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை மறைத்துவிட எண்ணுகிறார்கள்.

               பணம் பாதாளம் வரை பாயும் என்று
பழமொழி ஒன்று கூறுவார்கள். அன்று தலைமை குருக்களிடம் இருந்த பணம் கல்லறையின் காவல் வீரர்கள் வரை பாய்ந்தது. இன்றும் கூட நம் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பணம் கொடுத்து ஓட்டுக் கேட்டு வந்திருக்கலாம். அவ்வாறே பணமும் கொடுத்து இருக்கலாம். பொதுவாக இவ்வுலகில் எவ்வளவு உழைக்கிறார்களோ அவ்வளவுக்கு ஊதியம் பெறுகிறார்கள் என்பது மரபு. ஆனால் இத்தேர்தல் காலகட்டத்தில் பணத்தை கொடுத்து உண்மையையே விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார்கள். இச்சூழலில் பணத்தைப் பெற்றுக் கொண்டால் அந்த பணத்திற்கு ஊழியம் செய்ய வேண்டுமா அல்லது உண்மைக்கு ஊழியம் செய்ய வேண்டுமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டிய நேரம் இது. பணமா? உண்மையா? என்று சிந்திக்கின்ற பொழுது நம்முடைய வாக்கை செலுத்த வேண்டியது நமது உரிமையும் கடமையும் ஆகும் என்பதை உணர்வோம். நமது வாக்கை நமது மனசாட்சியின்படி யார் சரி என நமது உள்ளத்தில் தோன்றுகிறதோ அவருக்கு செலுத்தலாம். பணத்தைப் பெற்று விட்டோம் என்ற காரணத்தினால் மட்டுமே நான் பணத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பது அல்ல. ஜனநாயகம் தழைக்க, மக்கள் அனைவரின் வாழ்வு சிறக்க, எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ, நமது வாக்குகளை நேர்மையாக செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம். அன்று பணத்தை பெற்றுக் கொண்ட படை வீரர்கள் பணத்திற்கு ஊழியம் செய்தார்கள். இன்று நாம் என்ன செய்யப் போகிறோம்? பல நேரங்களில் தீமை செய்வதற்காக பலர் நமக்கு பணத்தை தந்தாலும் நாம் பணத்தை கொண்டு எத்தகைய நல்ல காரியங்களை செய்யவிருக்கிறோம் என்று சிந்திப்போம். உணவும் உடையும் அற்றவர்களை இவ்வேளையில் நம் கண்முன் கொள்வோம். அவர்கள் வாழ்வு பெற பணத்தின் வழியாகவோ அல்லது பொருள்கள் வழங்குவதின் வழியாகவோ நாம் உதவி செய்வோம். பணத்தைப் பெற்றுக்கொண்டு பணத்திற்கு ஊழியம் செய்த படை வீரர்களைப் போல அல்லாமல், உண்மைக்கு ஊழியம் செய்ய உள்ளத்தில் உறுதி கொள்வோம். 

ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்ட மகதலா மரியா அவருக்கு சான்று பகர்ந்தார். நமது கண்முன் நிற்கும் பணத்திற்கு சான்று பகருவதை விடுத்து மகதலா மரியாவைப் போல உண்மைக்கு சான்று பகர நம்மையே ஒப்புக் கொடுப்போம். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமது வாழ்வில் மட்டுமல்ல நமது தேசத்திற்கும் புதிய விடியலை கொடுக்கட்டும்.

சனி, 3 ஏப்ரல், 2021

அறிவோம் உயிர்ப்பு பற்றி .... (4.4.2021)

அறிவோம் உயிர்ப்பு பற்றி ....
 கிறிஸ்தவ மக்கள் நேற்றய தினத்தை பெரிய வெள்ளியாக கொண்ட்டினர் புனித சனி என்ற இன்று அவர்கள் மரித்த இயேசுவின் உயிர்ப்புக்காக காத்திருப்பர் . இயேசு , தான் வாழ்ந்துக்காட்ட வந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்தவே தன்னுயிர் துறந்து சிலுவையில் மரித்தார் ஒரு கவிஞன் தன் கற்பனையில் எழுந்த ஒரு காட்சியை இப்படி எழுதுகிறார் இறைவனிடத்தில் , நீர் என்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று கேட்டேன் அவர் இரண்டு கைகளையும் அகல விரித்து , இவ்வளவு அன்பு செய்கிறேன் என்று காட்டி சிலுவையில் கைகளை விரித்து மரித்தார் தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும் முன்பே தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்ந்து தன் அன்பை வெளிப்படுத்த முற்பட்டார் விருந்தாடலையே தன் நினைவுச் சின்னமாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணித்தார் . இதனையே இன்றும் கிறிஸ்த்தவர்கள் நற்கருணைப் பலியாக கொண்டாடிவருகின்றனர் . அந்த அதோடு அவர் நில்லாமல் , நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள் , என்று ஒரு புதிய கட்டளையைப் பிறப்பிக்கிறார் இவ்வாறு தன்னுடைய அன்பையே பிறரன்புக்கு இலக்கணமாகத் தருகிறார் அவருடைய அன்பு எத்தன்மை கொண்டதாக இருந்தது ? அந்த விருந்தின்போது நடந்த ஒரு நிகழ்வே நமக்கு அதனை தெளிவுப்படுத்துகிறது அந்த பந்தியிலிருந்து அவர் எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார் அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு , அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர் அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம் . அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார் . அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும் தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார்.

அன்பு என்பது ஆண்டான் அடிமை , உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற சூழலில் மலரும் . ஒன்றல்ல என்றாலும் , போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும் போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும் ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும் சகிப்புத்தன்மையும் அறுபதோ முப்பதோ நாட்களோடு மங்கிப்போவிடுவன என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும் அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும் ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த , தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான மலர்கிறது அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும் , பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும் என் வசதி , என் நிறைவு . என் மகிழ்ச்சி , என் விருப்பம் என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும் பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும் உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல . என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்பட்டுள்ளனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படவேண்டிய ஒன்று பணிவிடைப் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா ?

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா - மறையுரை (04.04.2021)

 

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா - மறையுரை



    இயேசு புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார். எனவே அவர் உயிர்ப்பெற்றெழுந்தார்   


    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்று நாம் திருஅவையோடு இணைந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். எனவே உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாக்கி மகிழ்கிறேன்.


    ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திலே மிகவும் கொடூரமான ஒரு மனிதன் இருந்தான்.  உலகத்தில் சொல்லக்கூடிய அத்தனை தீய பழக்கங்களையும் கொண்டிருந்தவன். அவன் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அதே காட்டுப்பாதையில் எதிர்முனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் நடந்து வந்தாள். நடுக் காட்டை அடைந்தபோது அவளுக்கு பேறுகால வலி வந்தது. துடிதுடித்தவளாய், என்ன செய்வது? என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமைதியின்றி நிலை தடுமாறி விழுந்தாள். பிரசவ வலி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். யாராவது வந்து நம்மை காக்க மாட்டார்களா? என்ற நினைப்போடு வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்ணில் பட்டது,  இந்த சமூகத்தால் அயோக்கியன் என கருதப்பட்ட அந்த  கொடூர மனிதன் மட்டுமே. இவனையா நான் பார்க்கவேண்டும்!  இவன் எப்படி எனக்கு உதவி செய்வான் என்று அந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஒருபுறம். மறுபுறமோ வலியும் வேதனையும். துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.  அவ்வழியே வந்த அந்த கொடூர குணம் கொண்டவன் அந்தப்பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் துடிப்பதை சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய கைலியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இதற்கு முன்பு வரை அவன் அவ்வாறு செய்ததே கிடையாது. இவனுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. இருந்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான்.  குழந்தையை கையில் எடுத்தான். தான் கையில் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய கூரிய கத்தியை எடுத்து, தொப்புள் கொடியை வெட்டினான்.  இதற்கு முன்பு வரை இவன் அப்படி செய்ததே கிடையாது.  ஆனால் அதை அன்று அவன் செய்தான். அதன் பிறகு தாய் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருக்கும் போது, ஓடிச்சென்று அருகிலிருந்த ஒரு குட்டையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தான். அந்த தாயின் வாயில் அந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தான். அவளது கை சட்டையை சற்று விலக்கி குழந்தைக்கு உணவருந்தும் வகையில் அந்த குழந்தையை அப்பெண்ணின் மார்பகம் பக்கம் வைத்தான். இத்தகைய கதையை எழுதிய வால்ட் விட்மன் என்ற ஆசிரியர், இந்த கதைக்கு மனிதன் பிறந்தான் எனப் பெயரிட்டார்.   இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே மரணம் என்ற ஒன்றை சந்தித்தே தீர வேண்டும். மரணத்தை சந்திக்கின்றன தருணம் நமது வாழ்வு முடிந்து விடுவது அல்ல. மாறாக வாழ்வு துவங்குகிறது. மரணம் விண்ணகத்தின் திறவுகோல் என்று கூறுவார்கள். இந்த உலகம் என்பது ஒரு மாயை. நாமெல்லாம் பயணிகள் போல இங்கு வந்தோம். நாம்  வந்ததன் நோக்கம் என்னவென்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறோம்.  ஒருநாள் இந்த மண்ணகத்தை விட்டு நமது உயிரானது பிரிந்து செல்லும். அப்போது நாம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்வோம் என்ற வகையில், இறைவனிடம் சென்று சேருவோம் என்று இலக்கியங்கள் கூறுவார்கள். 


    நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இறப்பு என்பது ஒரு மனிதனுக்கு பலவிதமான பாடங்களை கற்றுத் தருகிறது. ஞானியரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவேயிருக்கும் என சபை உரையாளர் 7: 4 புத்தகம் கூறுகிறது.  இறப்பு நடந்த  வீட்டிற்கு செல்பவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கையில் தாங்களும் சந்திக்க வேண்டிய நிகழ்வு இது என்ற பாடத்தினை உள்வாங்கிக் கொள்கிறார்கள். கருவறையில் பிறந்த மனிதன் மீண்டும் கல்லறையில் தான் புதுப் பிறப்பு அடைகிறான்.  தான் காணும் ஒருவரின் இறப்பில் தான் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டவனாய் புதுப்பிறப்பு அடைகிறான். அங்கு தான் ஒரு மனிதன் மீண்டும் பிறக்கிறான்.  இறந்த மனிதர்களை எல்லாம் அடக்கம் செய்வார்கள். அவர்கள் எல்லாம் புதைக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக விதைக்கப்பட்டவர்கள். 

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து 33 ஆண்டு காலமாக இம்மண்ணில் வாழ்ந்த போது, இச் சமூகத்தில் நிலவிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். தவறுகளை கண்டித்தார். இயேசுவைக் கொன்று விட்டால் போதும்,  இந்த உலகத்தில் புரட்சி என்பது இருக்காது என்ற சிந்தனையோடு,  தங்களின் வாழ்வை அழிக்க வந்தவன் என்ற எண்ணத்தோடு, பரிசேயர்களும், சதுசேயர்களும்,  உரோமை ஆட்சியாளர்களும்,  தங்களின் சூழ்ச்சியால் இயேசுவுக்கு மரணதண்டனையை பரிசாகக் கொடுத்தனர்,  ஒரு கள்வனைப் போல, கொடூரமான சிலுவை மரத் தண்டனையை கொடுத்து, இயேசுவை வானுக்கும் பூமிக்கும் நடுவே சிலுவையில் தொங்கவிட்டுக் கொனள்றனர். இயேசு நமக்காக சிலுவையில் தன் இன்னுயிரை இழந்தார்.  இயேசுவின் உயிரைப் பறித்தவர்கள் எல்லாம் நினைத்தார்கள், நம்மை சுட்டிக்காட்டியவனை சுவடு இல்லாமல் செய்து விட்டோம்;. ஆனால் இயேசு அன்று புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார்.


    விதைக்கப்பட்ட விதையானது எப்படி மண்ணுக்குள் இருந்து அந்த மண்ணை முட்டிக் கொண்டு மேலெழுந்து வந்து விருட்சமாக நிற்கிறதோ அதுபோல  கல்லறையில் அடக்கப்பட்ட இயேசுவும், கல்லறைகளை பிளந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அதன் விளைவே இன்று நாம் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

    ஆண்டவரின் உயிர்ப்பு நமக்கு எதை சொல்லித் தருகிறது? ஏன சிந்திப்போமாயின். ஆண்டவரின் உயிர்ப்பு இன்று நமக்கு அச்சத்திலிருந்து வெளிவருவதற்கான ஆற்றலை தரக்கூடியதாக அமைகிறது. இயேசு இறந்த பிறகு சீடர்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாது, அஞ்சி நடுங்கி மாடி வீட்டின் அறையிலேயே முடங்கிக் கிடந்தார்கள். தூய ஆவியானவரின் தூண்டுதலால் துணிச்சல் பெற்றவர்களாக, ஆண்டவர் இயேசு உயிர்த்தார், அவரைக் கொன்றது இந்த பரிசேயர்களும் சதுசேயர்களும். அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார், என்ற நற்செய்தியை துணிச்சலோடு மேடைக்கு மேடை,  வீதிக்கு வீதி, தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் ஆண்டவர் இயேசுவைப் பற்றி துணிச்சலோடு அறிக்கையிட்டார்கள் அவரின் சீடர்கள்.

    உங்களிடத்தில் ஒரு கோள்வி எழுப்பலாம் என எண்ணுகிறேன். நாம் வாழும் இந்த உலகத்தில் நெடுங்காலமாகவே தொடரக்; கூடியது எது? பிறப்பும் இறப்பும் மட்டுமே நெடுங்காலமாக நம்மை தொடர்ந்து வருகிறது. இதுதான் இவ்வுலகில் புதுமையானது. இது தான் இவ்வுலகில் பழமையானதும் எனலாம். எந்த காலத்தை திருப்பினாலும் அதில் பிறப்பும் இறப்பும் உண்டு. இனி வரக்கூடிய காலங்களிலும் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. இறப்பு என்பது முடிவல்ல. அது உயிர்ப்பின் தொடக்கம். இறைவனை அடைவதன் தொடக்கம்.

    எத்தனையோ மனிதர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு, பலவிதமான நல்ல செயல்களை இச்சமூகத்தில் செய்த போதும் கூட, அவர்களையெல்லாம் எப்படியாவது அடக்கி கொன்று குவித்து விட வேண்டும்.  இவர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று பல காரணங்கள் கூறி, பலரை இச்சமூகம் கொன்றொழித்தது. கொன்றொழித்து விட்டு மார்தட்டிக் கொண்டது, நம்மை எதிர்த்தவன் ஒழிந்து போனான் என்று. ஆனால் அவர்கள் யாரும் மறைந்து போகவில்லை. அவர்கள் யாரும் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டார்கள் இயேசுவைப்போல. அவர்களைப் பின்பற்றி இன்று பலரும் பெருக்கி இருக்கிறோம். இன்றும் சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்கள் இம்மண்ணில் நிற்கிறார்கள் என்றால், அதற்கான விதை ஏற்கனவே விதைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    அஞ்சி நடுங்கி வாழ்ந்த சீடர்கள் கூட, இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு, ஆண்டவர் இயேசு உயிர்த்தார் என்ற செய்தியை, மகிழ்ச்சியோடு அறிவித்தார்கள். இன்று நாம் வாழும் சமூகத்தில், நம்மிடையே இருக்கக்கூடிய அச்சங்களை களைந்து, நீதிக்காகவும் உண்மைக்காகவும், மரணமே பரிசாகக் கிடைத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டு நாம் பயணிக்கும் போது, ஆண்டவர் இயேசுவைப் போல உயிர்த்தவர்களாய், விதைக்கப்பட்டவர்களாய், பலருக்கும் பயன்தரக்கூடிய விருட்சமாக, மாறுவதற்கு நமது வாழ்வு நல்லதோர் எடுத்துக்காட்டான வாழ்வாக அமைய வேண்டும்.

    திருத்தூதர் பணிகள் 12: 31ஆம் இறை வசனத்தில் நாம் வாசிக்கின்றோம்.. இயேசு உயிர்த்தார் என்ற சீடர்களின் அருளுரைகளை கேட்டவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.  அவர்களிடத்தில் அன்று சீடர்கள் சொன்ன பதில், மனம் மாறுங்கள். திருமுழுக்கு வழியாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். இன்றும் இந்த உயிர்ப்பு பெருவிழா நமக்கும் அதே அழைப்பை தான் கொடுக்கிறது. நாம் நமது கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நம்மை நாம் சரி செய்து கொள்வோம். துணிச்சல் உள்ளவர்களாக நல்ல மனிதர்களாக இச்சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்கக் கூடியவர்களாக, இயேசுவைப் போல, மரணமே பரிசாகக் கிடைத்தாலும், இறுதிவரை நீதிக்காகவும் உண்மைக்காகவும், ஏழை எளியவர்களுக்காகவும், சட்டத்தால் நசுக்கப்படக்கூடிய மக்களுக்காகவும், உரிமை குரல் கொடுத்துக் கொண்டே பயணிக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைக்கின்றன.

    இவ்வாறு பயணிக்க வேண்டுமென்றால் நம் மனதில் இருக்கக்கூடிய அச்ச உணர்வு அடியோடு அழிக்க வேண்டும். அது அழிந்தால் மட்டுமே நாம் புதுப் பிறப்பு அடைய முடியும். இயேசுவில் உயிர்ப்பு பெற முடியும். ஒரு காலம் இருந்தது, அப்போது சிறு குழந்தைகளாக நாம் இருந்தோம். கீழே விழுவோம், வலிக்காது, ஆனால் வலித்தது போல நாம் அழுவோம். தாய் ஓடிவந்து அரவணைப்பாள். தந்தையோடு வந்து தூக்குவார். சகோதர சகோதரிகள் நம்மீது இரக்கம் கொண்டு அன்போடும் பாசத்தோடும், நான் விழுந்த இடத்தை அடித்துவிட்டு நம்மை தூக்கி கொஞ்சுவார்கள். ஆனால் இன்று சட்டங்களாலும், அநீதியாலும், உண்மைக்கு எதிரான செயல்களாலும் நாளுக்கு நாள் நாம் அனைவரும், அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிக்கப்படும் போது நமக்குள் வலியை உருவாக்குகிறது. ஆனால் இப்போதெல்லாம் வலித்தாலும் வலிக்காதது போல, காட்டிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம். நாம் இருக்கும் இடத்தில் எத்தனையோ அநீதிகள், எத்தனையோ இன்னல்கள், எத்தனையோ முரண்பாடான செயல்பாடுகள், நடைபெறும் போது நம் கண் முன்பாக நடக்கும் இந்நிகழ்வுகளை கண்டும் காணாதவர்களாக, கேட்டும் கேட்காதவர்களாக இருக்கிறோம்.

    நாம் வாழும் இவ்வுலகில் நம் அருகில் இருக்கக் கூடியவர்கள், தங்களுடைய வாழ்வின் இன்ப துன்ப நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்களா? அவர்களுக்கு நாம் ஒரு நம்பகத் தன்மையை உருவாக்கி கொடுத்திருக்கி;றோமா? செய்யாத ஒரு தவறுக்காக, நம்மில் ஒரு சகோதரர் துன்புறும் போது அவருக்கு நாம் துணை நின்று இருக்கின்றோமா? எங்கு நாம் அவருக்காக பேசினால், அவரோடு இணைந்து நின்றால், நமக்கு துன்பம் வந்து விடுமோ? என்ற அச்ச உணர்வின் காரணமாக கண்ணுக்கு முன்பாக இச்சமூகத்தில் நிகழக்கூடிய பலவிதமான அநீதிகளையும் கண்டும் காணாமல் எப்படியாவது, நமது வாழ்வை நகர்த்த வேண்டும்; என்ற நோக்கத்தோடு பயணிக்கக்கூடியவர்களா நீங்களும்? நானும்? கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிப் பார்ப்போம்.

    ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா இன்று அச்சம் தவிர்த்து நம்பிக்கை கொள்ள நம்மை அழைக்கிறது. 2 பேதுரு 5: 9 ஆம் வசனம் கூறுகிறது, அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள் என்று… நாம் வாழும் இச்சமூகத்தில் நாம் இருக்கும் தளத்தில், கண்ணுக்கு முன்பாக நடக்கக்கூடிய அநீதிகளை கண்டும் காணாதவர்களாய் இருக்காமல், அதனைக் தட்டிக்கேட்கவும், அதனை சரி செய்யவும், துணிச்சல் கொண்டவர்களாக, வாழ அழைக்கும் ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்க முயலுவோம்.  ஆண்டவர் இயேசுவை இந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை உயித்தெழச் செய்தார் என்று நற்செய்தி சீடர்கள்  தூய ஆவியின் தூண்டுதலால் துணிச்சலோடு அறிவித்தார்களோ அதுப்போல நாமும் தூய ஆவியால் துணிவு பெற்றவர்களாய்  நாம் இருக்கும் இடங்களில், நம் கண் முன்பாக காணக்கூடிய அநீதிகளை தட்டி கேட்கவும், நீதிக்காகக் குரல் கொடுக்கவும், உண்மையை சார்ந்து நிற்கும் உண்மை பணியாளர்களாய் உயிர்த்த இயேசுவின் பாதையில் உற்ச்சாகமாக பயணிப்போம்.’


அன்புடன்

சகோ. சகாய ராஜ் ஜே.

அறிவோம் புனித வெள்ளி பற்றி ....

 அறிவோம் புனித வெள்ளி பற்றி  ....

பெரிய வெள்ளி
இன்று இயேசு சிலுவையில் கொல்லப்பட்ட நான் இந்த நாள் புனித வாரத்தின் பெரிய வெள்ளி , நல்ல வெள்ளி  என்று அழைக்கப்படுகிறது சாவு ஒன்று நடந்தேறிய நாள் இது அதுவும் , அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்டு அவரது அறச்செயல்கள் அரசியல் ஆக்கப்பட்டு சுலகக்காரனாக ஜோடிக்கப்பட்டு , துறையை வளையவைத்து மதத்தலைவர்கள் திட்டமிட்டுச் செய்தக் கொலை இந்த சாவு நிகழ்ந்த நாளைத்தான் நல்ல வெள்ளி என்கின்றனர் கிறிஸ்தவர்கள் அந்த நாளில் அவருக்கு நடந்த ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டால் நல்லது என்று எதுவும் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும் எனவே , நல்ல வெள்ளி என்று சொல்வது சற்றும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கும் நமது வாழ்வில் நம்மைக் கேட்டுக்கொள்ளாமல் நமக்கு நடக்கின்றவைகளைக் கொண்டு மட்டுமே நமது நாட்களை நல்லது கெட்டது என்று பிரிப்போமென்றால் நல்லவைமீது நாம் கொண்டிருக்கும் அதிகாரத்தை கேள்வி குறியாக்குவோம் . இயேசு கொலை செய்யப்பட்ட நாளை நல்லதாக மாற்றியது என்ன ? அல்லது , அவர் தான் கொல்லப்பட்ட நாளை நல்லதாக ஆக்க என்ன செய்தார் முதன்முதலில் அவர்மேல் அவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதல் அவர் எதிர்பாராத ஒன்றல்ல அவர் நீதிக்காகவும் , நேர்மைக்காகவும் , உண்மைக்காகவும் அன்பிற்காகவும் எடுத்த தீர்க்கமான நிலைப்பாடு அவரை இந்த முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை நன்கு அறிந்து சாவதே என்றாலும் தன் பணியிலிருந்து விலகுவதில்லை என்று நீடித்து நிலைதிருந்தது இந்த வெள்ளியை நல்ல வெள்ளியாக்கிற்று வியர்வை இரத்தமாக கொட்டுமளவுக்கு அவர் கலக்கமுற்று இந்த துன்பக் கலம் தன்னைவிட்டு அகலாதா என்று மன்றாடினாலும் , அவர் வெறுப்புணர்ச்சியும் , கசப்பு உணர்வும் தன்னை மேற்கொள்ள விடவில்லை அவரது சாவு சம்பவத்தில் உடல் வலி மன வேதனை இருந்தன . ஆனால் மகிழ்ச்சிக்கே இடமில்லாமல் போகவில்லை அப்படி என்றால் அவர் சிரித்துக்கொண்டு பாடுகளை அனுபவித்தார் என்று சொல்வதன்று பல சமயங்களில் சிரிப்பொலிக்குப்பின்னும் கொண்டாட்டகங்களுக்குபின்னும் சொல்லில்வராத சோகங்கள் மறைந்திருப்பதையும் நாம் அறிவோம் வேதனை எப்போதும் சோகத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பதல்ல கடின உழைப்பில் அடங்கியிருக்கும் வேதனை வெற்றிப்பெற கொடுக்கும் விலை என்றிருக்கும்போது மகிழ்ச்சித்தான் மிஞ்சும் அன்றோ ! இயேசுவைப்பொறுத்தமட்டில் அவர் தனக்கு நேர்ந்த சாவை ஒரு சோக சம்பவமாகக் கொள்ளாமல் , இறையாட்சி விழுமியங்கள் வளர்ந்து பலன்தர தன் இன்னுயிர் உரமாகிறது என்ற தெளிந்த உணர்வோடு மேற்கொண்ட அனுபவமாகும் . இவ்வாறு இந்த சோகம் நிறைந்த வெள்ளியை அவர் நல்ல வெள்ளியாக மாற்றினார்.


அவருக்கு அன்று இழைக்கப்பட்ட வேதனையும் , அவமானமும் அதிகாரவர்க்கத்தினரால் பலநாட்களாக வெகு நுணுக்கமாக திட்டம் தீட்டி வேண்டுமென்றே தன்மேல் திணிக்கப்பட்டவை என்று அவர் நன்கு அறிந்திருந்தார் . இருப்பினும் , அதனை நம்ப விரும்பாமல் அவர் தனது துயரத்தின் உச்சக்கட்டதில் , விண்ணிற்கும் மண்ணிற்குமிடையே மூன்று ஆணிகளால் பிணைக்கப்பட்டு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது தன்னை வதைத்தவர்களுக்காக " பிதாவே இவர்களை மன்னியும் , இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்று மன்றாடி கோபமும் கசப்பும் நிறைந்த அந்த சூழலில் அன்பை பொழிந்து உலக வரலாற்றிய ஒரு அன்பு புரடச்சிக்கு வித்திட்டார் . இதனால் அந்த அக்கிரமம் நிறைந்த வெள்ளி நல்ல வௌளியாயிற்று தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற சான்றோரின் மொழியின்படி நமது வாழ்வையும் அதில் உள்ளவைகளையும் நிகழ்பவைகளையும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஆக்குவது நம்மைத் தவிர வேரொன்றுமில்லை என்று கற்றுக் கொள்வோமா ? 

வியாழன், 1 ஏப்ரல், 2021

தலைவனின் பாதையில் மௌனம் கலைக்கும் நேரமிது... (2.3.2021)

தலைவனின் பாதையில் மௌனம் கலைக்கும் நேரமிது...


இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மண்ணில் தோன்றிய பல தலைவர்கள் மறைந்து போனார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ...ஆனால் அவர்கள் இம்மண்ணில் வாழ்ந்த போது விதைத்த விதைகளான அவர்களது சிந்தனைகளும், கருத்துக்களும் என்றும் நீங்காது நம் மனதிலும், நாம் வாழும் சமூகத்திலும் வளர்ந்து மரமாக விளங்குகின்றன என்பதன் வெளிப்பாடுதான் இன்று இயேசு என்ற உயர்ந்த தலைவனின் இறப்பை நாம் நினைவு கூறுகிறோம்.

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் பல தலைமுறை என வாழும் மனிதர்களுக்கு மத்தியில்.... வாழ்வது ஒருமுறை வாழவைப்போம் பல தலைமுறைகளை என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் தான் இந்த இயேசு கிறிஸ்து.

இயேசுவின் இறப்பை பலரும் பல விதத்தில் புரிந்து கொள்கிறார்கள்...
இயேசுவின் இறப்பு ஒரு அரசியல் படுகொலையாக பார்க்கப்படுகிறது.
இயேசுவின் இறப்பு பிறருக்காக என்று பார்க்கப்படுகிறது. 
இயேசுவின் இறப்பு என்பது சட்டத்தால் செய்யப்பட்ட ஒரு படுகொலை என பார்க்கப்படுகிறது. 
இயேசுவின் இறப்பு அன்பின் உச்சக்கட்டம் என பலர் பார்க்கின்றனர்.

நமது பார்வைகள் பல வகையில் இருந்தாலும் இயேசு கொல்லப்பட்டார் என்பது உண்மையாகிறது. இந்த உண்மையையே இன்று நாம் நினைவு கூறுகின்றோம. இன்று நினைவு கூறும் இது உண்மையான இயேசுவின்  இறப்பானது நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன? என சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது அவரால்  பயன் பெற்றவர்கள் ஏராளமானோர்....

கண் பார்வை இழந்தவர்கள் கண்பார்வை பெற்றார்கள்.
கேட்கும் திறன் இழந்தவர்கள் கேட்கும் திறன் பெற்றார்கள்.
பேசும் ஆற்றல் இழந்தவர்கள் பேசும் ஆற்றல் பெற்றார்கள். 
இயேசு தான் சென்ற இடமெல்லாம் நன்மையைச் செய்து கொண்டே சென்றார் என பலவற்றை நாம் விவிலியத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இயேசுவால் பயன்பெற்றவர்கள் அச்சமூகத்தில் அதிகம் இருக்கும் பொழுது ஏன்   இயேசுவின் இறப்பு நிகழ்ந்தது? என்ற கேள்வி உள்ளத்தில் உண்டு.

நேர்மையற்ற முறையில் குற்றம் செய்யாத ஒருவர் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டபோது எங்கே போனார்கள்? இவர்கள் எல்லாம் என்ற கேள்விக்கணைகள் உள்ளத்தில் இந்த நாளில் எழுந்த வண்ணமாகவே உள்ளன. உள்ளத்தில் எழும் கேள்வி கணைகளை எல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு. இன்றைய நாளில் இயேசுவின் இறப்பு நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன? என்பதை சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
நல்லவர்களின் மௌனமே இயேசுவின் இறப்புக்கு காரணம் என்பது மறுக்கவியலாத உண்மை. இன்று நாம் வாழும் இச்சமூகத்தில் பல நேரங்களில் நேர்மையாளர்கள் நீதியற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாகப் படும் பொழுது நம்மில் பலர் கண்டும் காணாதவர்களாக தங்களது உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி அன்று ஓடிய  இயேசுவுடன் இருந்தவர்களை போலத் தான் இன்று இச்சமூகத்தில் நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ் இலக்கியங்கள் அழகாகக் கூறும்...

தன் பெண்டு 
தன் பிள்ளை 
சோறு 
வீடு 
சம்பாத்தியம் 
இவையுண்டு தானுண்டு...என வாழ்பவன் கடுகு உள்ளம் கொண்டவன் என்று...இன்று நம்மில் பலர் இவ்வாறு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அறிஞர் ஒருவர் கூறுவார்...  இவ்வுலகத்தில் என்னை அதிகம் காயப்படுத்தியது தீயவர்களின் செயல்பாடுகள் அல்ல, நல்லவர்களின் மவுனமே.... எனக் கூறுவார்.  இழைக்கப்பட கூடிய ஒரு அநீதிக்கு நமது மௌனம் காரணமாயின் நாமும் அதற்க்கு காரணமானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இன்று அழைக்கப்படுகிறோம்.


இதோ  இறந்து இன்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த இயேசு ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்பதை தன் வாழ்வால் வெளிக்காட்டி சென்றவர்.  

நான் தலைவனாக மாறினால் உங்களுக்கு என்னவெல்லாம் செய்வேன் என கூறி இன்று நம்மிடம் வந்து கொண்டிருக்கும் பல தலைவர்களுக்கு மத்தியில் அன்று ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை தன் வாழ்வால் வெளிகாட்டி சென்றவர்தான் இந்த இயேசு ...

காசா?...பணமா... யார் நம்மை கேட்க போகிறார்கள்? என்ற எண்ணத்தோடு வாக்குறுதிகளை மட்டும் அள்ளித் தெளித்துக் கொண்டே செல்லும் பல மனிதர்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் சொல்வதை  செயல்படுத்த வேண்டும் என்பதை தன் செயலால் செயல்படுத்திக் காட்டியவர் தான் இந்த இயேசு .... 

இவர் நல்லவர் என தெரிந்திருந்தும் இந்த நல்லவரின் பின்னால் நிற்காமல் இவருக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது ஓடி ஒளிந்து தம்மை தானே காத்துக் கொள்ள எண்ணிய பல நல்லவர்களின் மௌவுனம் இந்த  உன்னத தலைவன் கொலை செய்யப்பட்ட காரணமானது.

தன்னை கொலை செய்ய எண்ணக்கூடிய கூட்டத்தினருக்கும் மத்தியில் தன்னை தற்காத்துக்கொள்ள தெரியாத தலைவன் அல்ல இந்த இயேசு. தன்னை அவர்களின் விருப்பப்படி செய்யட்டும் என்று  தன்னையே முழுவதும் கையெழுத்தவர் இந்த இயேசு. 

ஏன் இவர் இவ்வாறு கையளிக்க வேண்டும்? ஒருவனின் இறப்பு இச்சமூகத்திற்கு ஒரு பாடத்தை கற்பிக்கும் என்றால் தன் இறப்பாக அது இருக்கட்டும் என்று  குற்றம் ஏதும் செய்யாத நிலையிலும் நடப்பவை அனைத்தும் சமூகத்திற்கு நல்லதை கற்பிக்கப்படும் என தன்னையே கையளித்து தியாகத்தின் உருவமாய் இதோ இன்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
இவரை போல் இன்னொரு நல்லவருக்கு இந்நிலை உருவாகி விடக்கூடாது என்பதை இயேசு நமக்கு கூறும் வகையில் இன்றைய நாளில் அவரின் இறப்பை நாம் நினைவு கூறுகிறோம். ஆனால் பல நேரங்களில் அன்றாடம்  பல நல்லவர்களின் இழப்புக்கு நமது மௌவுனம் காரணமாகிறது. மௌவுனம் கலைக்கும் நேரமிது மௌனம் கலைப்போம் நல்லவர்கள் எங்கேனும்  நீதியற்ற முறையில் திருப்பிடப்படுகிறார்கள் என்றால் நாம் நமது எதிர்ப்புக் குரலை அங்கு பதிய வைப்போம் ... இயேசுவைப் போல இன்னொரு நல்லவர் இறப்புக்கு நாம் மௌனம் காரணமாக அமைய விடாது காத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.

தலைவனாக இருக்க விரும்பும் பலருக்கு மத்தியில் இன்று நாம் இயேசு என்ற இந்த உயர்ந்த தலைவனின் பாதையில் பயணப்படுவோம் துன்பங்கள், துயரங்கள் சூழ்ந்தாலும் அஞ்சாது ஆண்டவரின் பணிகளை முன்னிறுத்தி நல்லதை செய்து கொண்டே  மனிதநேயப் பணிகளை செய்த  தலைவனாம் இயேசுவின் பாதையில் நாமும் தொடர்ந்து பயப்படுவோம் என்ற சிந்தனைகளை இன்றைய நாளில் உள்வாங்கிக்கொண்டு தலைவனின் பாதையில்... பயணிப்போம் 


அறிவோம் பெரிய வியாழன் பற்றி ...

அறிவோம் பெரிய வியாழன் பற்றி ...

புனித வாரம்
பெரிய வியாழன்
 கிறிஸ்தவ மக்கள் இந்த வாரத்தை புனித வாரமாக கொண்டாடுகின்றனர் அதிலும் சிறப்பாக வியாழன் , வெள்ளி , சனி ஞாயிறு நாட்களை சிறப்பான நாடகளாகக் கருதிய கடைப்பிடிக்கிறார்கள் அவர்கள் ஆண்டவராகவும் , அரசராகவும் , மீட்பராகவும் போற்றி வணங்கும் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முப்பெரும் நிகழ்ச்சிகளை இந்த மூன்று நாட்களும் நினைவுக்கூறுகின்றனர் இன்றைய நாளை பெரிய வியாழன் என்று அழைக்கின்றனர் . இயேசு , தான் வாழ்ந்துக்காட்டவந்த இறையன்பை முழு அளவில் வெளிப்படுத்த மேற்கொள்ளவிருக்கும் சிலுவைச் சாவிற்கு முன்னுரை எழுதிய நாள்தான் இந்த நாள் தான் சிலுவைச் சாவைநோக்கி செல்லும்முன் தாம் அன்புக்கூர்ந்த நண்பர்களை இறுதிவரை அன்புக்கூர்ந்து அவர்களோடு இறுதியாக பந்தி அமர்கிறார் தன் மரணத்திற்குபின் தன்னை மறந்துவிடாதவண்ணம் அந்த விருந்தாடலையே தன் நினைவாக அவர்களுக்கு கொடுத்து அதனை அவர் நினைவாக செய்யும்படி பணிக்கிறார் . பசியால் வாடுவோருக்கு இறைவன் தோன்றினால் உணவாகத்தான் தோன்ற வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்ன வாக்கை மெய்ப்பிப்பதைப்போல் உள்ளது அதோடு நில்லாமல் நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள் , என்று ஒரு புதிய கட்டளையாக பிரப்பிக்கிறார் இங்கு தான்னுடைய அன்பையே பிறரன்புக்கு ஒரு இலக்கணமாகத் தருகிறார் அவர் எப்படி அன்பு செய்தார் என்று பார்க்கும் போது . இந்த விருந்தின்போது நடந்த நிகழ்வே அதனை தெளிவுப்படுத்துகிறது . அந்த பந்தியிலிருந்து எழுந்து அடிமைகளேச் செய்யத்தகுந்த பாதம் கழுவும் பணியை செய்கிறார் அதற்கு காரணம் அவருடைய நண்பர்கள் தங்களுள் யார் பெரியவர் என்ற தர்க்கத்தில் ஈடுப்பட்டு , அதிகாரப் பகிர்விற்காக போட்டியும் பொறாமையும் கொண்டவர்களாக நடந்துக்கொண்டிருந்தனர் . அவர்களுள் ஒருவரும் முன்வந்து பிறருடைய பாதத்தைக் கழுவும் மனநிலையில் இருக்கவில்லை . மொத்தத்தில் அது ஒரு அன்பற்ற சூழலாக இருந்தது எனலாம் அந்த தருணத்தில்தான் இயேசு தாமாக முன்வந்து தன் நண்பர்களுடையப் பாதங்களை கழுவுகிறார் அதில் நல்லவர் கெட்டவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லோரையும் தன்னைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதத்தையும் கழுவி முத்தமிடுகிறார் அன்பு என்பது ஆண்டான் அடிமை , உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற உறவில் நிலைக்கொள்ளும் ஒன்றல்ல என்றாலும் , போட்டியும் பொறாமையும் அன்பர்கள் மத்தியில் தலைதூக்கும்போது அதற்கு ஒரே அருமருந்து தாழ்ச்சியாகும் ஆசையும் மோகமும் தூண்டும் மனதாராளமும் , சகிப்புத்தன்மையும் அறுபது கூட்டல் முப்பது மொத்தம் தொன்னூறு நாட்களோடு மங்கிப்போகிறது என்பது நமக்குத் தெரிந்த ஒரு வாழ்க்கை எதார்த்தமாகும் அத்தகைய வாழ்க்கை எதார்த்தத்தின்போது அன்பை இன்னும் வளரச்செய்வது அன்பர்கள் மத்தியில் முளைத்தெழும் தாழ்ச்சியாகும் . ஆசையையும் மோகத்தையும் கடந்து தாழ்ச்சிக்கலந்த , தியாகம் நிறைந்த பிறரைத் தன்னிலும் சிறந்தவராக கருதும் நேரம்தான் உண்மையான அன்பு மலர்கிறது அன்பு தாழ்ச்சியோடு கைகோர்க்கும்போதுதான் அது நிறைவு தருவதாகவும் , பிறரை வாழவைப்பதாகவும் இருக்கமுடியும் என் வசதி , என் நிறைவு , என் மகிழ்ச்சி . என் விருப்பம்என்றுமட்டும் வாழும் வாழ்க்கை வெறும் என்புதோல் போர்த்த உடம்பாகவே இருக்கும் பாதம் கழுவுதல் பிறரை உயர்வாக கருதிப்போற்றும் ஒரு செயலாகும் உயர்வு என்பது நமக்கு கீழ் எத்தனைப்பேர் இருக்கின்றனர் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் ஒன்றல்ல , என்னால் எத்தனைப்பேர் உயர்த்தப்படுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது பணிவிடைச் பெறுவதிலன்று பணிவிடைச் செய்வதிலேயே மேன்மை அடங்கியுள்ளதென்று உணர்வோமா ?

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...