திங்கள், 5 ஏப்ரல், 2021

நாம் என்ன செய்ய வேண்டும்? (6.4.2021)

நாம் என்ன செய்ய வேண்டும்? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் உயிர்ப்பை பேதுரு மற்றவர்களுக்கு அறிவிக்கின்றார். பேதுருவின் வார்த்தைகளை கேட்டவர்கள் உள்ளம் குத்துண்டவர்களாக நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார்கள். அவர்களை  மனம் மாறி திருமுழுக்கு பெறுவதற்கு பேதுரு அழைப்பு தருகின்றார். அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் மகதலா மரியாவும் இயேசுவை தேடிச் செல்கிறார். இயேசுவை காணாததால் திகைப்புறுகிறார். அப்போது அவரிடம் யாரை தேடுகிறீர்கள்? என்ற குரல் ஒலியோடு இயேசுவின் உயிர்ப்பு செய்தியானது அந்த பெண்மணிக்கு வழங்கப்படுகிறது. 

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில், "உங்கள் ஓட்டு எனக்கே! என்னை ஆதரியுங்கள்! நான் உங்களுக்காகவே என் இரத்தத்தை சிந்துவேன்! உங்களுக்காக நான் அனைத்தையும் செய்து கொடுப்பேன் என்று  நம்மை தேடி வந்தவர்கள் எல்லாம் பிரச்சாரம் ஓய்ந்ததனால் அமைதியாகி விட்டார்கள். இவர்கள் எல்லோரும் நம்மை தேடி வந்ததன் நோக்கம் நன்மை செய்யவேண்டும் என சொல்லுவார்கள். ஆனால் சொல்லும் செயலும் ஒத்துப் போகிறதா? என்பதை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இன்றைய நாளில் இருக்கிறோம். மகதலா மரியா இயேசுவை தேடிச் சென்றார். எந்தவித முன் சார்பு எண்ணமும் இல்லாமல் இறந்தவரின் உடலை சென்று பார்க்க வேண்டும். அவருக்கு நறுமண தைலம் பூச வேண்டும் என்று சேவை மனப்பான்மையோடு தேடிச் சென்றாள்.  நம்மை தேடி வந்தவர்கள் பலருள் சிலர் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.  அவர்களை கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது. அவர்களை கண்டு கொண்டு அவர்களுக்கு நமது வாக்குகளை கொடுத்து  அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவர்களை தெரிவு செய்யவேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது.  எப்படி ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை பேதுரு  அறிவித்தபோது அதை கேட்பவர்கள் உள்ளம் குத்துண்டவர்களாக, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என கேட்பார்களோ! அது போல இன்று நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை  எழுப்புவோம். நம்மைத் தேடி வந்த பலருள் சேவை மனப்பான்மை கொண்ட நல்ல உள்ளங்களையும் நல்லவர்கள் யார் என்பதையும் கேள்வி கேட்டு இனம் கண்டு கொண்டு, அவர்களுக்கு நமது வாக்குகளை செலுத்தி அவர்கள் நேர்மையான உள்ளத்தோடு சேவையாற்ற நாம் வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். சேவை செய்ய வேண்டும்  என்ற எண்ணத்தோடு வருபவர்கள் எல்லாம் பதவிக்கு வந்த பிறகு சேவை  செய்யாமல் இருந்து கொண்டிருக்கக் கூடிய சூழலில், இவர்களில் யாரை நாம் தெரிவு செய்வது என்ற குழப்பமும் கேள்வியும் நம்மிடத்தில் ஆழமாக உண்டு. ஆனால் இன்று நாட்டுக்கு தேவையான நலமான பணிகளை முன்னெடுக்கும் சிலரை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  எனவே  தேர்தல் நாளாகிய இன்றைய நாளில், நாம் தவறாது நமது கடமையைச் செய்ய முன்வருவோம்.  சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இன்றைய சூழலில் நமக்கு நன்மைகளை புரிந்திட யார் தேவையானவர்களோ,  அதை சிந்தித்து  அவர்களுக்கு நமது வாக்குகளை செலுத்தி அவர்கள் சேவையாற்ற வாய்ப்புகளை உருவாக்குவோம்.  

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இம்மண்ணில் வாழ்ந்த போது பல நலமான பணிகளை போதனைகளை முன்னெடுத்துக் கொண்டே சென்றார்.  அவரை எதிர்க்கக் கூடியவர்கள் பலர், அவர் மீது குற்றம் கூடியவர்கள் பலர். இயேசுவின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரைப் பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள்.  ஆனால் தடைகளை கடந்து அவர் சாதனை புரிந்தார். வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார். இறையாட்சி  இம்மண்ணில் மலர ஒரு உந்து சக்தியாகவும் முக்கியமான காரணமாகவும் இருந்தார். அவரின் இறப்பு இந்த உலகத்திற்கு இறையாட்சியின் விழுமியங்களின்படி வாழ்வதற்கான அழைப்பை தந்துச் சென்றது.
  

இன்று அவர் உயிர்த்தார் என்ற மகிழ்ச்சியில் நாம் அனைவரும் திளைத்திருக்கிறோம்.  இந்த உயிர்ப்புச் செய்தியானது, தீமை எல்லா நாளும் தலை தூக்காது    என்பதை வெளிக்காட்டும் விதத்தில் அமைந்ததாக நாம் பொருள் கொள்ளலாம். இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை கேட்டவர்கள் எல்லாம் அச்செய்தியின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக,  உள்ளம் குத்துண்டவர்களாக, தம்மையே கையளித்தார்கள். இன்றுள்ள சூழலில் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய  பணியை சிறப்பாக செய்திட நாம் அழைக்கப்படுகிறோம்.  நாமும் சுயமாக சிந்தித்து செயல்படவும், இயேசுவின் உயிர்ப்பில் மகிழவும், அந்த உயிர்ப்புச் செய்தியை பிறரோடு பகிரவும்,  அதன் வழி நலமான பல பணிகளை முன்னெடுக்கவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதியேற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...