சனி, 10 ஏப்ரல், 2021

நம்பிக்கையே வாழ்வாக... (11.4.2021)

நம்பிக்கையே வாழ்வாக...

இறைவன் இயேசுவில் நம்பிக்கையில் இணைந்த என் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் நற்செய்தி வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
 நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி, கை வைக்கலாம் என்று கூறுவார்கள்.

      ஒருமுறை ஒரு அறையில் நான்கு மெழுகு திரிகள் எரிந்து கொண்டிருந்தன. அதனை சிறுவன் ஒருவன் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறதா? என பார்த்துக் கொண்டிருந்தான். காற்று வீசுகின்ற பொழுதும் கூட கதவுகளை அடைத்து அந்த மெழுகு திரிகளை அணையாமல் பார்த்துக் கொள்ள முயற்சிகள் செய்தான். அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முதல் மெழுகு திரி அணைந்து விட்டது. உடனே அடுத்த மெழுகுதிரி பார்த்தான், அதுவும் அணைந்திருந்தது. சரி மூன்றாவது மற்றும் நான்காவது மெழுகு திரியையாவது காப்பாற்றுவோம் என்று நினைத்தவனாக மூன்றாவது மெழுகு திரியை நோக்கித் திரும்பினான். அதுவும் அணைந்திருந்தது. மனம் சோர்ந்தவனாக, அப்பா! என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் மெழுகுதிரி அணையாமல் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று கூறிய வண்ணம் அழத் துவங்கினான் அப்பொழுது அவனை நோக்கி அவனது தந்தை வந்து கொண்டிருந்த வேளையில் அந்த அறையிலிருந்த நான்காவது மெழுகுதிரி சற்று பிரகாசத்துடன் அவனை நோக்கிக் கூறியது, தம்பி! ஏன் அழுகிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்! நான் இன்னும் ஒளி விட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். என்னை எடுத்து மற்ற மெழுகு திரிகளையும் ஒளிரச் செய்! என்று கூறியது.
இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆறுதல் அடைந்த அச்சிறுவன் முகமலர்ச்சியோடு அந்த மெழுகு திரியை நோக்கி திரும்பி, உனது பெயர் என்ன? என்று கேட்டான். எனது பெயர் தான் நம்பிக்கை என்று கம்பீரமாக அந்த மெழுகுதிரி பதில் கூறியது.
இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய ஒளியை கொண்டு மற்றவர்களிடத்தில் ஒளியேற்றிய நான்காவது நம்பிக்கை ஒளியைப் போல திருத்தூதர்களோடு இணைந்து வாழ்ந்த மக்கள் நம்பிக்கையோடு உள்ளத்தால் உயர்ந்தவர்களாக தமது உடமைகளால்  அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றியதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் உலகை வெல்வது நம் நம்பிக்கையே! கடவுள் மீதும் அன்பு கொண்டுள்ள நாம், அவரது கட்டளைகளை கடைபிடிப்பதின் வழியாக அவரது அன்பிற்கு சாட்சிகளாகிறோம். நமது உள்ளத்தில் எதை நம்புகிறோமோ அதையே நமது கரங்கள் வழியாக கட்டளைகளின் செயல்பாடாக, அன்பின் செயல்பாடாக, வெளிப்படுத்துகிறோம் என்பதை புனித யோவான் எடுத்துரைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயிர்த்த ஆண்டவரை பல்வேறு இடங்களில் பல்வேறு விதங்களில் தோமா தேடிக் கொண்டு இருந்தபொழுது, அறைக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருந்த தன்னுடைய சீடர்களுக்கு மத்தியில் பிரசன்னமாகி இருந்த இயேசு உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று கூறுவதன் வழியாக, அவர்களின் அச்சத்தைப் போக்குகின்றார். தூய ஆவியின் வல்லமையைப் அவர்களுக்கு வழங்கிய இயேசு ஆண்டவர் அவர்களை திடப்படுத்துகின்றார். 
           காடு மேடுகளிலும் கூட கால்கடுக்க நடந்தவராக ஆண்டவர் இயேசுவை தேடிக்கொண்டிருந்த தோமா, ஆண்டவர் இயேசு நிச்சயமாக தனக்கு காட்சி கொடுப்பார் என்று நம்பியதன் வெளிப்பாடாக மீண்டும்  ஒரு முறையாக ஆண்டவர் இயேசு தோமாவிற்கும் சீடர்களுக்கும் காட்சி தருகின்றார். 
           மேலும் தன்னை கண்டதால் நம்புவோரை விட காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்று இயேசு ஆண்டவர், தோமாவின் நம்பிக்கை நிறைந்த தேடலை வலுப்படுத்தி மேன்மைப்படுத்தி ஆசீர்வதிக்கிறார்.

      ஆம்! அன்புக்குரியவர்களே! வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியமானது. அந்த நம்பிக்கை ஒன்று மட்டும் நலமாக நம்மில் இருந்தால் எந்த ஒரு காரியத்தையும் நம்பி கை வைக்கலாம். இன்றைய இறைவார்த்தை களும் நமக்கு நம்பிக்கையைப் பற்றி வெளிப்படுத்துவதன் வழியாக நம்மையும் திடப்படுத்துகின்றன.

நான் கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கை இன்று எந்த நிலையில் இருக்கிறது? வெறும் வார்த்தை அளவில் மட்டும் இருக்கிறதா! அல்லது அவை நமது செயல்களில் வெளிப்பட்டு மற்றவருக்கும் உண்மையை உரைக்கிறதா? என்ன சந்திக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நாம் பிறருக்கு தருகிறோம்.  ஆனால் நமது வாழ்வில் சோதனைகளும் இடர்களும் வருகின்ற பொழுது நாம் நம்பிக்கையோடு அதனை எதிர்கொள்ள செல்கிறோமா? அடுத்தவரை ஊக்கப்படுத்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் நாம் தருகிறோம். நமது வாழ்வில் தோல்விகளையும் அவமானங்களையும் சிக்கல்களை சந்திக்கின்ற பொழுது நாம் அதனை நம்பிக்கையோடு எதிர் கொள்கின்றோமா? அதனை சந்திக்க கூடிய துணிவு நம்மிடம் இருக்கிறதா?

நம்மிடம் இல்லாத ஒன்றை மற்றவர் இடத்தில் இருக்கவேண்டும் எனக் கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. நம்பிக்கையை நாம் முதலில் நமக்குள் வளர்த்துக் கொள்வோம். நம்பிக்கையின் ஒளிச்சுடர் ஆகுவோம். அதன் பிறகு அந்த ஒளியை மற்றவருக்கும் பகிர்வோம். நம்மிடம் இருக்கக்கூடிய நம்பிக்கை எனும் ஒளியை கொண்டு மற்ற அனைவரின் வாழ்விலும் நம்பிக்கை தீபங்களை ஏற்றுவதற்கு  வழிவகுக்க உள்ளத்தில் உறுதியை ஏற்று செயல்படுவோம்.

1 கருத்து:

  1. 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💝💝💝💝💝💝💝🛐🛐🛐🛐🛐🛐 நம்பிக்கையின் நல் விடியலை நமக்கு அழகாக வெளிப்படுத்திய அருட்சகோதரர் சகாய ராஜ் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...