வியாழன், 15 ஏப்ரல், 2021

இறைவனை நம்பி.... (16.4.2021)

இறைவனை நம்பி....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள்  வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதைக் கண்டு அஞ்சி பயந்து போன பரிசேயர்களும் சதுசேயர்களும் எப்படி இயேசுவின் சீடர்களை ஒழிக்கலாமெனத் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவரான கமாலியேல், இது இறை விருப்பமானால் அதை நம்மால் அழிக்க இயலாது.
அதுவே இது இறை விருப்பத்திற்கு எதிரானதாக இருந்தால் அதுவே அழிந்துவிடும் என்று கூறி அவர்களை சாந்தப்படுத்துகிறார். 

         இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் நாம் நன்மையை முன்னெடுக்கும் போது உடன் யாரும் இல்லையே என்ற அச்சமும் கலக்கமும் நம்மிடையே எழுகிறது. நாம் செய்த நன்மையை அடுத்தவர் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கமும் கேள்வியும் அடிக்கடி நமது உள்ளங்களில் வந்து போவதுண்டு. ஆனால் அந்நேரங்களில் எல்லாம் நாம் செய்வது சரியானது இறைவனுக்கு உகந்தது என்று எண்ணினோம் ஆனால் அது இறை விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்றால் எவருடைய துணையும் தேவையில்லை. அங்கு நாம் எதை செய்ய நினைக்கிறோமோ அதை முழுமையாக செய்ய முடியும் என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகம் நமக்கு வழங்குகிறது. இதையே தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாம் காண்கின்றோம். இயேசுவின் வார்த்தைகளை கேட்க ஓடி வந்த மக்கள் கூட்டம் தாங்கள் உண்பதற்குத் தேவையான உணவுகளை மறந்து போனார்கள்.  ஆனால் இயேசு அவர்களின் ஆன்மீக தாகத்தையும் உடல் சார்ந்த உணவின் தாகத்தையும் அறிந்தவராய் இருந்ததனால் அவர்களை பசியோடு அனுப்ப மறுத்து  அவர்களின் உடலுக்கு தேவையான உணவையும் வழங்கினார். உள்ளத் தேவையான ஆறுதலான வார்த்தைகளையும் வழங்கினார்.  இயேசு இச்செயலை செய்யும் போது யாரையும் சார்ந்து இருக்கவில்லை. தன்னிடம் இருப்பதைக் கொண்டு அவர்களுக்கு நிறைவு தர வேண்டும் என எண்ணினார். எனவே அதனை செய்தார்.

                  நாம் வாழும் இந்த உலகத்தில் பல நேரங்களில் நாம் நம்மால் முடிந்த நலமான பணிகளை முன்னெடுக்கும் போது நாம் முதலில் நம்மை நம்புவோம். நாம் செய்வது இறைவனுக்கு உகந்ததாக இருக்குமா என சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்போம். அது இறைவனுக்கு உகந்ததாக இருக்கும் எனத் தோன்றும்போது அதனை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். அவ்வாறு ஈடுபடும்போது,  எந்த மனிதனுடைய துணையும் நமக்கு தேவையில்லை. யாரேனும் ஒருவர் நாம் செய்யும் நன்மையை அளிக்க வேண்டும். நம்மை கட்டுப்படுத்த வேண்டும். நம்மை வளர விடக்கூடாது என்ற தீய எண்ணத்தோடு செயல்படக் கூடியவர்களாக இருந்தாலும், அவர்களை எல்லாம் இறைவன் பார்த்துக் கொள்வார். நாம் செய்வது இறைவனுக்கு உகந்ததாக இருந்தால் இறைவன் நம்மோடு இருப்பார். இறைவன் நம்மோடு இருக்க நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. கலங்க வேண்டியதில்லை. துணிவோடு தொடர்ந்து இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற எண்ணத்தோடு அன்று எப்படி இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றிய  நற்செய்தியைத் தாங்கியவர்களாக தொடர்ந்து பயணித்தார்களோ அதுபோல நாமும் இறைவனுக்கு உகந்த பணிகளை இறைவனை நம்பி முன்னெடுத்து பயணிப்போம். வாழ்வில் வெற்றி பெறுவோம். இதற்கான அருளை வேண்டி இணைந்து இன்றைய நாளில் தொடர்ந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...