திங்கள், 26 ஏப்ரல், 2021

செயல்களே எனக்கு சான்றாக அமையும்... (27.4.2021)

செயல்களே எனக்கு சான்றாக அமையும்... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே...

இன்றைய நாளில் இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்களை நீங்கள் கவனமாக கவனித்து இருந்தீர்கள் என்றால் என்னுடைய கேள்விக்கு எளிதாக உங்களால் பதில் சொல்ல இயலும்.
 எனது கேள்வி இதோ... 
கிறிஸ்தவர்கள் என்று முதன் முதலில் நாம் பெயர்பெற்றது எங்கே?

கீழே சென்று விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக நீங்களே யோசித்துப்பாருங்கள் விடை என்னவாக இருக்கும் என்று ....


அந்தியோக்கு நகரில் தான் நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயரை முதன்முதலில் பெற்றோம்.

கிறிஸ்தவர்கள் என்றால் இயேசு கிறிஸ்து கற்பித்த நெறிமுறைகளின்படி அவரைப் போல வாழக்கூடியவர்கள் என்பதுதான் உண்மை. 

கிறிஸ்தவர்கள் என்றாலே பொதுவாக எதற்கும் போராட மாட்டார்கள். மாறாக மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபிக்க கூடியவர்கள் என்ற பெயருண்டு.  ஏனென்றால் இயேசு தன்னை கொலை செய்தவர்களை கூட சிலுவையில் தொங்கும் போது அதாவது மரணிக்கும் தருணத்திலும் மன்னித்தார். அவரை பின்பற்றக் கூடியவர்கள். எனவே இவர்கள் அடுத்தவர்கள் செய்யக்கூடிய தவறுகளை மன்னிப்பார்கள்.அவர்களுக்காக ஜெபிப்பவர்கள் என்று பலர் கருதுகிறார்கள். இது முற்றிலும் உண்மை தான் ஆனால் கிறிஸ்தவர்கள் எப்போதும் ஜெபித்துக் கொண்டே இருப்பவர்கள் மட்டுமல்ல.... ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போலவே இச்சமூகத்தில் நடமாட கூடியவர்கள்... இயேசுவைப் போல  தேவைப்படும் பட்சத்தில்  சாட்டையைச் சுழற்ற அஞ்சாதவர்கள். 
நீதி மறுக்கப்படும் போது எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடியவர்கள். 
சமூக அவலங்கள் அரங்கேறும் போது அதைச் சுட்டிக்காட்டி மனிதத்தை முன்னிறுத்தும் மனிதநேய தொண்டர்கள் என்றால் அது மிகையாகாது. 
இப்படி பல விதமான பண்புகளை உள்ளடக்கிய கிறிஸ்தவர்களாகிய நாம் உண்மையில் கிறிஸ்துவின் நெறிமுறைகளின்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியை இன்று நம்முள் எழுப்பி பார்த்து நம்மை நாமே சுய ஆய்வு செய்து கொள்ள இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் நீர்தான் மெசியாவா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அதற்கு இயேசு நான் உங்களிடம் என்னைப் பற்றி கூறினேன். நீங்கள் நம்பவில்லை. நான் செய்கின்ற செயல்களே எனக்கு சான்றாக அமையும் என்கின்றார். இயேசுவின் செயல்கள் ஒவ்வொன்றும் அவர் மெசியா என்பதை இச் சமூகத்திற்கு வெளிக்காட்டியது. நாம் உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் நெறிமுறைகளின்படி வாழ்பவர்கள் என்பதை வார்த்தைகள் அல்ல நமது செயல்களை வெளிகாட்ட வேண்டும் ... உண்மையில் நமது செயல்கள் அதனை வெளிக்காட்டுகின்றனவா? என்று நம்மை நாம் சுய ஆய்வு செய்வோம்.

பெயருக்கு நாங்களெல்லாம் கிறிஸ்தவர்கள் என பெருமை பாராட்டுவதை விட்டுவிட்டு இயேசுவின் மீது உண்மையான அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாய்  இயேசுவைப்போல இச்சமூகத்தில் இறையாட்சி மலர இன்றைய நாள் முதல் நமது சொல்லையும் செயலையும் சீர்தூக்கிப் பார்த்து சொல்வதை நிறுத்தி நமது செயல்களால் நாம் இயேசுவைப் பின்பற்றும் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை வெளிகாட்ட முயல்வோம்...

இயேசுவை ஏற்றவர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்பது அல்ல.... மாறாக இயேசுவின் விழுமியங்களை பின்பற்றும் ஒவ்வொருவருமே கிறிஸ்தவர்கள் தான்.

எங்கு  அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கு நீதியை நிலை நாட்டுபவரும்  இயேசுவின் விழுமியங்களின் படி வாழும் கிறிஸ்தவரே...

எங்கு மக்கள் நசுக்கப்படுகிறார்களோ, அங்கு  அவர்கள் சார்பாக குரல் கொடுக்கக்கூடிய ஒவ்வொருவரும் இயேசுவின் விழுமியங்களின் படி வாழும் கிறிஸ்தவரே...

சமூகத்தில்  ஒரு மனிதன் தேவையில் இருக்கும்போது அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒவ்வொரு நபரும்  இயேசுவின் விழுமியங்களின் படி வாழும் கிறிஸ்தவரே...
பரபரப்பாகவும், அச்சத்திற்கு மத்தியிலும்  சுழன்று கொண்டிருக்க கூடிய இந்த பூமியில் நாம் உண்மை கிறிஸ்தவர்கள் என்பதை நமது சொல்லால் அல்ல செயலால் காட்டிட முயல்வோம்.அப்போது நாமும் இயேசுவைப் போலவே   இயேசுவின் சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்ததன் அடிப்படையில் இயேசு "நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் என்றார்(யோவான் 10: 30) .நமது சொல்லும் செயலும் இணையும் போதுதான் நாம் உண்மையாகவே இயேசுவோடு இணைந்து இருக்கிறோம் என சொல்ல முடியும்.
எப்போதும் இயேசுவோடு இணைந்திட சொல்லையும் செயலையும் ஒன்றாக்கி வாழ்ந்திட  இறையருளை தொடர்ந்து வேண்டுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...