செவ்வாய், 6 ஏப்ரல், 2021

வார்த்தைகள் வாழ்வாகட்டும் வாழ்வு அளிக்கட்டும்... (7.4.2021)

வார்த்தைகள் வாழ்வாகட்டும் வாழ்வு அளிக்கட்டும்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்று முதல் வாசகத்தில் பேதுரு தன்னிடம் கையேந்தி பிச்சை கேட்கும் ஒரு நபரிடம், என்னிடம் பொன்னும் இல்லை, பொருளும் இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன் என கூறி, தான் கொண்டிருந்த ஆண்டவர் இயேசுவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில், என்னிடம் இருப்பது இயேசுவே. அந்த இயேசுவின் பெயரால் சொல்கிறேன் என்று கூறி, முடக்கு வாதமுற்ற அந்த நபரை குணப்படுத்துகிறார்.

 நற்செய்தி வாசகத்திலும் கிளயோப்பா என்ற நபர் இயேசுவின் உயிர்ப்பை பற்றி அறியாதவராக இருக்கிறார். அவர் எப்படி நிகழ்ந்தது? என்ன ஆனது? என்ற கேள்விகளை எழுப்பும் போது இயேசுவின் உயிர்ப்பை அவருக்கு சீடர்கள் அறிவித்தார்கள். இன்று நாம் வாழும் இந்த உலகில் நாமும் ஒவ்வொரு நாளும் திருப்பலியில்,  "இது விசுவாசத்தின் மறைபொருள்" என்று கூறப்படும்போது, "ஆண்டவரே! நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி செபிக்கின்றோம். ஆனால் நமது செபங்கள் வெறும் சொல்லாக இருக்கிறதா? செயல் வடிவம் பெறுகிறதா? என்பதை சிந்திக்க இன்று அழைக்கப்படுகிறோம்.  அன்று இயேசுவின் சீடர்கள் தாங்களும் இயேசுவைப் போலவே சொல்லில் மட்டுமே இருப்பதை விட்டுவிட்டு செயலில் காட்டினார்கள். இயேசுவும் மண்ணில் வாழ்ந்த போது சொல்லியதை விட அதையெல்லாம் தன் செயலில் காட்டினார் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.  நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் சொல்லுவதை குறைத்துக்கொண்டு சொல்லுவதை செய்யக் கூடியவர்களாக இருக்க இறையருள் வேண்டி,  இன்றைய நாளில் இறைவனிடம் மன்றாடுவோம். வெறும் செபங்களாக நமது வார்த்தைகள் இல்லாமல்,  வார்த்தைகள் வாழ்வாகட்டும். பிறருக்கு வாழ்வை அளிக்கட்டும்.  வார்த்தைகள் நமது வாழ்வாக மாறட்டும். அவ்வார்த்தைகள் அடுத்தவருக்கு வாழ்வளிக்கட்டும். அதற்கான இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம் இன்றைய நாளில்.

1 கருத்து:

  1. சொற்களை விட செயல்களே அதிகம் பேசுகின்றன. எனவே நாம் வாய்ச்சொல் வீரர்களாக அல்லாமல் செயல்வீரர்களாக இருப்போம் என நம்மை நல்வாழ்வு வாழ அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது அன்பின் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...