தலைவனின் பாதையில் மௌனம் கலைக்கும் நேரமிது...
இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மண்ணில் தோன்றிய பல தலைவர்கள் மறைந்து போனார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ...ஆனால் அவர்கள் இம்மண்ணில் வாழ்ந்த போது விதைத்த விதைகளான அவர்களது சிந்தனைகளும், கருத்துக்களும் என்றும் நீங்காது நம் மனதிலும், நாம் வாழும் சமூகத்திலும் வளர்ந்து மரமாக விளங்குகின்றன என்பதன் வெளிப்பாடுதான் இன்று இயேசு என்ற உயர்ந்த தலைவனின் இறப்பை நாம் நினைவு கூறுகிறோம்.
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் பல தலைமுறை என வாழும் மனிதர்களுக்கு மத்தியில்.... வாழ்வது ஒருமுறை வாழவைப்போம் பல தலைமுறைகளை என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் தான் இந்த இயேசு கிறிஸ்து.
இயேசுவின் இறப்பை பலரும் பல விதத்தில் புரிந்து கொள்கிறார்கள்...
இயேசுவின் இறப்பு ஒரு அரசியல் படுகொலையாக பார்க்கப்படுகிறது.
இயேசுவின் இறப்பு பிறருக்காக என்று பார்க்கப்படுகிறது.
இயேசுவின் இறப்பு என்பது சட்டத்தால் செய்யப்பட்ட ஒரு படுகொலை என பார்க்கப்படுகிறது.
இயேசுவின் இறப்பு அன்பின் உச்சக்கட்டம் என பலர் பார்க்கின்றனர்.
நமது பார்வைகள் பல வகையில் இருந்தாலும் இயேசு கொல்லப்பட்டார் என்பது உண்மையாகிறது. இந்த உண்மையையே இன்று நாம் நினைவு கூறுகின்றோம. இன்று நினைவு கூறும் இது உண்மையான இயேசுவின் இறப்பானது நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன? என சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது அவரால் பயன் பெற்றவர்கள் ஏராளமானோர்....
கண் பார்வை இழந்தவர்கள் கண்பார்வை பெற்றார்கள்.
கேட்கும் திறன் இழந்தவர்கள் கேட்கும் திறன் பெற்றார்கள்.
பேசும் ஆற்றல் இழந்தவர்கள் பேசும் ஆற்றல் பெற்றார்கள்.
இயேசு தான் சென்ற இடமெல்லாம் நன்மையைச் செய்து கொண்டே சென்றார் என பலவற்றை நாம் விவிலியத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இயேசுவால் பயன்பெற்றவர்கள் அச்சமூகத்தில் அதிகம் இருக்கும் பொழுது ஏன் இயேசுவின் இறப்பு நிகழ்ந்தது? என்ற கேள்வி உள்ளத்தில் உண்டு.
நேர்மையற்ற முறையில் குற்றம் செய்யாத ஒருவர் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டபோது எங்கே போனார்கள்? இவர்கள் எல்லாம் என்ற கேள்விக்கணைகள் உள்ளத்தில் இந்த நாளில் எழுந்த வண்ணமாகவே உள்ளன. உள்ளத்தில் எழும் கேள்வி கணைகளை எல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு. இன்றைய நாளில் இயேசுவின் இறப்பு நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன? என்பதை சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
நல்லவர்களின் மௌனமே இயேசுவின் இறப்புக்கு காரணம் என்பது மறுக்கவியலாத உண்மை. இன்று நாம் வாழும் இச்சமூகத்தில் பல நேரங்களில் நேர்மையாளர்கள் நீதியற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாகப் படும் பொழுது நம்மில் பலர் கண்டும் காணாதவர்களாக தங்களது உயிரைக் காத்துக் கொள்ள வேண்டி அன்று ஓடிய இயேசுவுடன் இருந்தவர்களை போலத் தான் இன்று இச்சமூகத்தில் நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தமிழ் இலக்கியங்கள் அழகாகக் கூறும்...
தன் பெண்டு
தன் பிள்ளை
சோறு
வீடு
சம்பாத்தியம்
இவையுண்டு தானுண்டு...என வாழ்பவன் கடுகு உள்ளம் கொண்டவன் என்று...இன்று நம்மில் பலர் இவ்வாறு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அறிஞர் ஒருவர் கூறுவார்... இவ்வுலகத்தில் என்னை அதிகம் காயப்படுத்தியது தீயவர்களின் செயல்பாடுகள் அல்ல, நல்லவர்களின் மவுனமே.... எனக் கூறுவார். இழைக்கப்பட கூடிய ஒரு அநீதிக்கு நமது மௌனம் காரணமாயின் நாமும் அதற்க்கு காரணமானவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இன்று அழைக்கப்படுகிறோம்.
இதோ இறந்து இன்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த இயேசு ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்பதை தன் வாழ்வால் வெளிக்காட்டி சென்றவர்.
நான் தலைவனாக மாறினால் உங்களுக்கு என்னவெல்லாம் செய்வேன் என கூறி இன்று நம்மிடம் வந்து கொண்டிருக்கும் பல தலைவர்களுக்கு மத்தியில் அன்று ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை தன் வாழ்வால் வெளிகாட்டி சென்றவர்தான் இந்த இயேசு ...
காசா?...பணமா... யார் நம்மை கேட்க போகிறார்கள்? என்ற எண்ணத்தோடு வாக்குறுதிகளை மட்டும் அள்ளித் தெளித்துக் கொண்டே செல்லும் பல மனிதர்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் சொல்வதை செயல்படுத்த வேண்டும் என்பதை தன் செயலால் செயல்படுத்திக் காட்டியவர் தான் இந்த இயேசு ....
இவர் நல்லவர் என தெரிந்திருந்தும் இந்த நல்லவரின் பின்னால் நிற்காமல் இவருக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது ஓடி ஒளிந்து தம்மை தானே காத்துக் கொள்ள எண்ணிய பல நல்லவர்களின் மௌவுனம் இந்த உன்னத தலைவன் கொலை செய்யப்பட்ட காரணமானது.
தன்னை கொலை செய்ய எண்ணக்கூடிய கூட்டத்தினருக்கும் மத்தியில் தன்னை தற்காத்துக்கொள்ள தெரியாத தலைவன் அல்ல இந்த இயேசு. தன்னை அவர்களின் விருப்பப்படி செய்யட்டும் என்று தன்னையே முழுவதும் கையெழுத்தவர் இந்த இயேசு.
ஏன் இவர் இவ்வாறு கையளிக்க வேண்டும்? ஒருவனின் இறப்பு இச்சமூகத்திற்கு ஒரு பாடத்தை கற்பிக்கும் என்றால் தன் இறப்பாக அது இருக்கட்டும் என்று குற்றம் ஏதும் செய்யாத நிலையிலும் நடப்பவை அனைத்தும் சமூகத்திற்கு நல்லதை கற்பிக்கப்படும் என தன்னையே கையளித்து தியாகத்தின் உருவமாய் இதோ இன்று சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
இவரை போல் இன்னொரு நல்லவருக்கு இந்நிலை உருவாகி விடக்கூடாது என்பதை இயேசு நமக்கு கூறும் வகையில் இன்றைய நாளில் அவரின் இறப்பை நாம் நினைவு கூறுகிறோம். ஆனால் பல நேரங்களில் அன்றாடம் பல நல்லவர்களின் இழப்புக்கு நமது மௌவுனம் காரணமாகிறது. மௌவுனம் கலைக்கும் நேரமிது மௌனம் கலைப்போம் நல்லவர்கள் எங்கேனும் நீதியற்ற முறையில் திருப்பிடப்படுகிறார்கள் என்றால் நாம் நமது எதிர்ப்புக் குரலை அங்கு பதிய வைப்போம் ... இயேசுவைப் போல இன்னொரு நல்லவர் இறப்புக்கு நாம் மௌனம் காரணமாக அமைய விடாது காத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.
தலைவனாக இருக்க விரும்பும் பலருக்கு மத்தியில் இன்று நாம் இயேசு என்ற இந்த உயர்ந்த தலைவனின் பாதையில் பயணப்படுவோம் துன்பங்கள், துயரங்கள் சூழ்ந்தாலும் அஞ்சாது ஆண்டவரின் பணிகளை முன்னிறுத்தி நல்லதை செய்து கொண்டே மனிதநேயப் பணிகளை செய்த தலைவனாம் இயேசுவின் பாதையில் நாமும் தொடர்ந்து பயப்படுவோம் என்ற சிந்தனைகளை இன்றைய நாளில் உள்வாங்கிக்கொண்டு தலைவனின் பாதையில்... பயணிப்போம்
உண்மை... 👍
பதிலளிநீக்குஅருமை சகோ.. 🙏