வெள்ளி, 23 ஏப்ரல், 2021

வார்த்தைகளை நமதாக்கிக் கொள்வோம்... (24.4.2021)

வார்த்தைகளை நமதாக்கிக் கொள்வோம்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகம் தொடக்கத் திருச்சபை தூய ஆவியாரின் துணையுடன் அமைதியில் தழைத்து வளர்ச்சியுற்றது என்பதையும், பேதுரு தான் சென்ற இடங்களிலெல்லாம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் அற்புதங்கள் செய்ததையும் குறிப்பாக லித்தா என்னும் நகரில் ஐனேயா என்னும் ஒருவருக்கு முடக்குவாதத்தில் இருந்து விடுதலை கொடுத்ததையும் யோப்பா நகரில் மரித்துப் போயிருந்த தபித்தா என்னும் பெயருடைய நற்பண்புகள் மிகுந்த பெண்ணுக்கு மீண்டும் புத்துயிர் அளித்ததையும் எடுத்துக்கூறுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனக்கு எதிராக முணுமுணுத்த சீடர்களிடம்,  வாழ்வு தருவது தூய ஆவியே. 
எனது வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன என்று இயேசு கூறிய பொழுது, இயேசுவின் சீடர்கள் சிலர் அவரை விட்டு நீங்கியதையும், பேதுருவோ, இயேசு ஆண்டவரிடம், நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன! என்று அறிக்கையிடுவதையும் காண்கிறோம். 

நிறைகுடம் தளும்பாது! குறைகுடம் கூத்தாடும்! என்று நமது முன்னோர்கள் பழமொழிகள் கூறுவார்கள்.
உள்ளத்தில் அமைதியை உணர்ந்து எதிர்வருகின்ற சூழ்நிலைகளுக்கு அமைந்த மனதோடு  தம்மைக் கையளித்து தூய ஆவியானவரின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தூய பேதுருவின் வார்த்தைகளுக்கு காதுகளை மட்டுமல்ல தன்னுடைய இதயங்களையும் திறந்து செவிகொடுத்த மக்களின் ஒட்டுமொத்த சூழல், ஒட்டுமொத்த நம்பிக்கை, அங்கு இறை வல்லமையால் அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ வாய்ப்பாக அமைந்தது.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆண்டவரின் வார்த்தைகளை புரிந்துகொள்ளாத சீடர்கள்,  நிறைவைத் தேடாது, தமது சிந்தனையால் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொள்ளாது, அவருக்கு எதிராக முணுமுணுத்ததையும், கொஞ்சம் கொஞ்சமாக இறுதியில் அவரை விட்டு விலகிச் செல்வதையும் காண்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட புனித பேதுரு, ஆண்டவரது வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தவராக, அவை நிலை வாழ்வு தருகின்ற வார்த்தைகள் என்பதனை அறிக்கையிடுகின்றார். 

               இன்று பரபரப்பாகவும் அதிவேகமாகவும் உடனடி கலாச்சாரத்திற்கு மத்தியிலும் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்த உலகத்தில் உண்மையையும் நன்மையையும் கண்டுணர நமது உள்ளத்திற்கு அமைதி தேவை. நமது சிந்தனைக்கு அமைதி தேவை என்பதை உணர்ந்தவர்களாக, நமது வாழ்வில் நாம் இன்றைய நாளில் சந்திக்கும் எந்த ஒரு நிகழ்விலும் இறை திருவுளத்தை தேர்ந்து தெளிய, தூய ஆவியானவரின் தூண்டுதலுக்கு செவிகொடுக்க, நிலை வாழ்வை கண்டுகொள்ள, நமது உள்ளத்திற்கு தேவையான இறை அமைதியை அதிகமதிகமாக பெற்றுக்கொள்ள,  ஆண்டவர் இயேசுவின் நிலைவாழ்வு தரும் வார்த்தைகளை நமதாக்கிக் கொள்ள இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

1 கருத்து:

  1. ஆண்டவர் இயேசுவின் நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் நமது வாழ்க்கையில் செயலாற்ற நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்று நம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...