உழைப்பால் முன்மாதிரிகளாவோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் படிப்பில் மிகவும் பின்தங்கி இருந்தான். அவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அவனது தாய் தந்தையர் அவனை அடிக்கடி ஒழுங்காகப் படி, இல்லையேல் உன்னை நாங்கள் அருட்சகோதரிகள் நடத்தக்கூடிய அல்லது அருட்தந்தையர்கள் நடத்தக்கூடிய ஒரு பள்ளியில் கொண்டு போய் சேர்த்து விடுவோம். அப்படி நாங்கள் அங்கு சேர்த்தால் அவர்கள் உன்னை ஒழுங்காக படிக்கவில்லை என்றால், அடித்து உதைத்து தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள். எனவே, ஒழுங்காகப் படி. இல்லையேல் உன்னை நாங்கள் அந்த பள்ளிக்கு மாற்றி விடுவோம் என்று அவ்வப்போது அச்சுறுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் சிறுவனோ அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவன் தொடர்ந்து சேட்டைகள் பல செய்வதிலும் விளையாட்டுத்தனமுமாக இருந்தான். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெற்றோர், இனி சரிப்பட்டு வராது என்று கருதி, அவனை அரசு பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு போய் ஒரு அருட்சகோதரிகள் நடத்தக்கூடிய ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக முதல் மதிப்பெண் பெற்று வந்தான். பெற்றோருக்கு ஒரே ஆச்சரியம். எப்படி நமது மகன் திடீரென இப்படி மாறினான்? என்ற எண்ணம். அவர்களால் பொறுக்க இயலவில்லை. மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். அங்கிருந்த அருள் சகோதரியிடம் நடந்ததையெல்லாம் சொன்னார்கள். அவரும் அமைதியாக அனைத்தையும் கேட்டுவிட்டு, எல்லாம் அப்படித்தான்! படிக்க ஆரம்பிச்சுருவாங்க! என்று சொல்லி எதார்த்தமாக அனுப்பி வைத்தார். ஆனாலும் அச்சிறுவனின் தாய்க்கு ஐயம் நீங்கவில்லை. மீண்டும் தன் மகனிடம் எப்படி நீ இவ்வளவு மதிப்பெண் பெற்றாய்? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பிக் கொண்டே இருந்தார். உடனே அந்த சிறுவன் சொன்னான், அம்மா! நீங்கள் தானே சொன்னீர்கள்! ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் இந்த பள்ளியில் அடித்து உதைத்து தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள் என்று. பள்ளிக்குச் சென்றதும் முதல் நாள் முதல் வரிசையில் அமர்ந்தேன். நான் அமர்ந்து நேராக கண்களை நோக்கியபோது கரும்பலகையையும் அதற்கு மேல் ஒருவரையும் பார்த்தேன். அங்கு ஒருவனை அடித்து உதைத்து தோலை உரித்து சிலுவையில் அறைந்து தொங்க விட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் முடிவு செய்துகொண்டேன், நீங்கள் பொய் சொல்லவில்லை உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். நானும் படிக்கவில்லை என்றால் என்னையும் இப்படிதான் தொங்க விட்டுவிடுவார்கள் என்ற ஐயம் தோன்றியது. உடனே படிக்கத் தொடங்கி விட்டேன் என்று கூறினானாம்.
இயேசுவின் சிலுவையை குறித்து வேடிக்கையாகவும் யதார்த்தமாகவும் இவ்வாறு சில கற்பனைக் கதைகள் உண்டு.ஆனால் இதோ இங்கு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயேசு, ஏதோ குற்றம் செய்ததற்காக தொங்கவிடப்பட்டவரல்ல. சமூகத்தில் மாற்றத்தை நிலைநாட்ட விரும்பியதன் அடிப்படையில் இங்கு இவர் தொங்கவிடப்பட்டார். ஆம்! மனிதனை மனிதன் தொட மறுத்து, அச்ச உணர்வோடு வாழ்ந்த நேரத்தில் அவனைத் தேடிச் சென்று தொட்டு குணப்படுத்தியவர் இந்த இயேசு கிறிஸ்து. சட்டத்தால் ஒரு மனிதன் நசுக்கப்படும் பொழுது அது தவறு எனச் சுட்டிக் காட்டியவர் இந்த இயேசுகிறிஸ்து. ஆனால் மேலோட்டமான சட்டங்களை பிடித்துக் கொண்டு மனிதத்தை மறந்து வாழும் மனிதர்களிடத்தில் மனிதத்தை விதைத்தவர் இந்த இயேசு கிறிஸ்து. இது போன்ற செய்கைகளின் காரணமாக இவர் பலரின் சூழ்ச்சியால் இந்நிலைக்கு ஆளானார் என்பது தான் உண்மை.
இன்றைய நாளில் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் செயல்பாடுகளையும் உழைப்பாளர் தினம் ஆகிய இன்று உழைப்பாளர் அனைவருக்கும் தந்தையாகிய புனித யோசேப்பின் வாழ்வு நெறிமுறைகள் குறித்தும் சிந்தித்திட அழைக்கப்படுகிறோம்.
கடவுள் இந்த உலகைப் படைத்த போது ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மிகவும் அழகாகப் படைத்தார். அவர் படைத்த ஒவ்வொன்றும் மிகவும் அழகாயிருந்தது. அது நல்லது எனக் கண்டார் என்று விவிலியத்தில் நாம் வாசிக்கலாம்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு படைப்புமே இறைவன் இவ்வுலகை எவ்வளவு அதிகமாக அன்பு செய்தார் என்பதை நமக்கு வெளிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இவ்வுலகத்தில் ஒருவர் மற்றவரின் நலனுக்காக ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதற்காகவே இருக்கின்றோம். அடுத்தவரின் உதவியோடுதான் அனைத்தும் இங்கு நடக்கிறது. நாம் குழந்தையாக பிறந்த போது மருத்துவரின் உதவி தேவைப்பட்டது. குழந்தையாக பிறந்தபின் நாம் வளர்ந்த போது நம்மை வளர்க்க நமது தாய் தந்தையரின் உதவி தேவைப்பட்டது. நாம் ஆன்மீக காரியங்களில் வளர்வதற்கு அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், ஞானப் பெற்றோர்கள் என பலரின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது. கல்வி அறிவைப் பெற்றுக்கொள்ள ஆசிரியரின் உதவி தேவைப்பட்டது. தனக்கென சொல்லிக் கொள்ள நமக்கு காலம் செல்லச் செல்ல செல்ல நமக்கென ஒரு வேளை தேவைப்படும். அந்த வேளையும் அடுத்தவரிடம் இருந்து வரும். காலம் செல்லச்செல்ல நமக்கு என்று சொல்லிக் கொள்ள ஒரு குடும்பம் தேவைப்படுகிறது. எனவே குடும்பத்திற்கு செல்வோம்.ஒரு குழந்தை பிறந்தபிறகு நமக்கு எனச் சொல்லிக்கொள்ள நம்மை பராமரித்துக் கொள்ள குடும்பம் தேவைப்படுகிறது. மரணத்தை நாம் சந்திக்க நேர்ந்தால் கூட நமது உடலை எடுத்து இறுதிச்சடங்கை செய்வதற்கும் அடுத்தவர் உதவி தேவைப்படுகிறது. அடுத்தவருக்கு உதவி செய்வதே வாழ்வின் நோக்கம். இயேசு இந்த உலகில் இருந்த போது அதைச் செய்தார். அதையே நாமும் செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசுவுக்கு அவரிடத்தில் காணப்பட்ட அத்தனை நற்பண்புகளையும் உழைப்பதற்கான ஆர்வத்தையும் அவருக்கு ஊட்டியவர் அவரது வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பும் அன்னை மரியாளும் ஆவார். தாயைப் போல பிள்ளை என்று பழமொழி கூறுவார்கள். அவ்வாறே ஆண்டவர் இயேசுவின் பெற்றோர்கள் தங்களிடத்தில் தாம் வளர்த்துக்கொண்ட உழைப்பின் முக்கியத்துவத்தையும் பிறரன்பு செயல்களின் தாராள மனதையும் அனைவரையும் மதிக்கக்கூடிய மனித மாண்பையும், தமக்காக மட்டுமல்லாது இந்த சமுதாய மாற்றத்திற்காக ஏற்றத்திற்காக தன்னை ஒரு கருவியாக்கும் பணியார்வத்தை ஆண்டவர் இயேசுவின் இதயத்தில் சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்த்தார்கள்.
இன்றைய இரண்டாம் வாசகம் சொல்லுகிறது நீங்கள் எதை சொன்னாலும் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவை மையப்படுத்திச்
செய்யுங்கள் என்று. எனவே, இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொன்றிலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்பட வேண்டும் என்பதை மனதில் இருத்துங்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது நல்லதைச் செய்யுங்கள் என சொல்லுவதை விட, அதைத் தான் செய்தார். செய்ததையும் சொல்லிக்கொண்டே சென்றார். இயேசு தான் சென்ற இடங்களில் எல்லாம் நன்மையே செய்து செய்தார் என விவிலியத்தில் வாசிக்கிறோம். அவர் நன்மைகளை செய்தார். செய்ததைச் சொன்னார். ஆண்டவர் இயேசுவின் பெற்றோரான புனித யோசேப்பு மற்றும் அன்னை மரியாளைப் போல நாமும் நமது குழந்தைகளுக்கு முன்மாதிரிகளான வாழ்வை காண்பிக்கும் போது தான் நம்மிடம் இருந்து அவர்கள் அதனை உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதை உணர்ந்தவர்களாய், நம்மிடம் இருக்கும் உழைப்பின் ஆர்வத்தையும் மேன்மையையும் நாம் வளர்த்துக் கொள்ளவும் அதன் வழியாக ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக வாழ்ந்து அவரது சாட்சிகளாகிட இறையருள் வேண்டி இத்திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.
உண்மையான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் சூசை தந்தையிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.இந்த மே மாதத்தில் அன்னை மரியாவையும் சூசை தந்தையையும் பின்பற்றி நமது வாழ்வை மேன்மையான உழைப்பின் வழியில் அமைத்துக் கொள்வோம்! என்று நம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது அன்பின் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு