சனி, 1 மே, 2021

ஆண்டவரில் இணைந்திட.... (2.5.2021)

ஆண்டவரில் இணைந்திட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

ஆண்டவரின் அருள் நாடும் உங்கள் அனைவருக்கும் இன்றைய இறைவார்த்தையின் வழியாக என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

தூய ஆவியாரின் துணையோடு தொடக்க திருஅவை வளர்ந்து வந்ததை இன்றைய முதல் வாசகம் வெளிப்படுத்துகிறது. இன்றைய நாளின் இரண்டாம் வாசகமும் தூய ஆவியாரின் செயல்பாடுகளையும் அவை நம்மிடம் நமது செயல்பாடுகளின் வழியாக வெளிப்படும் விதம் பற்றியும் வெளிப்படுத்துகிறது. தூய ஆவியார் நமது துணையாளர். நம்மை வழி நடத்தக்கூடிய பணியை செய்பவர். இந்தத் தூய ஆவியார் நம்முள் எழுந்து நமக்கு நன்மை தீமைகளை எடுத்துரைக்கக் கூடியவர். இந்தத் தூய ஆவியானவரின் குரலுக்கு நாம் செவி கொடுத்து நடக்கும் பொழுது இயேசுவோடு இணைந்துள்ளவர்களாக நாம் வாழ முடியும்.இந்த தூய ஆவியானவரை விட்டுவிட்டு அவரது குரலுக்கு செவி கொடுக்காமல் வாழ்வோமாயின், நாம் பெயரளவில் இறைவனோடு இணைந்து இருக்கிறோம் என சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனால் நாம் ஆண்டவரோடு இணைந்தவர்களாக இருக்க மாட்டோம். எனவே இன்றைய நாளில் தூய ஆவியானவரைக் குறித்து சிந்திக்கவும் இறைவனோடு இணைந்து வாழவும் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். 

             ஒருமுறை ஆபிரகாம் லிங்கனை அவருடைய நண்பர் ஒருவர் அவரை சந்திக்க வந்தார். அந்த நண்பர் ஆபிரகாம் லிங்கனை பார்த்து, உங்களது வாழ்க்கையில் நீங்கள் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்து இருக்கிறீர்கள். நீங்கள் தொடங்குகின்ற அனைத்து காரியங்களையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்துகின்றார். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களும் வெற்றி அடைகின்றன. இறைவன் உங்களோடு இருக்கின்றார். உங்களை ஆசீர்வதிக்கிறார் என்றார். அப்போது ஆபிரகாம் லிங்கன் இவ்வாறு கூறினாராம். நண்பரே! எனது வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் என்னோடு இருக்கின்றார். எனது ஒவ்வொரு செயலிலும் உன்னை வழி நடத்துகின்றார். எனது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கின்றார் என்பது எனக்கு நன்றாக தெரியும். என்னோடு உடன் இருக்கும் ஆண்டவர் என்னோடு இணைந்து என்னுடைய பணிகளில் துணை நிற்கின்றார். நானும் என்னுடைய தேசத்திற்கான பணிகளை தொடர்ந்து ஆற்றுகின்ற இவ்வேளையில் நான் ஆண்டவருடன் இருக்கின்றேனா? என்பதை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பேன்.  என்னோடு உடன் இருக்கும் ஆண்டவரோடு என்னை இணைத்துக் கொள்ள நான் முயற்சி எடுக்க வேண்டும் அல்லவா! இறைவனில் என்னை இணைத்துக் கொள்ளும் முயற்சி தான் எனது ஜெபம். என்னை நோக்கி தன்னுடைய கரத்தை நீட்டி அழைக்கும் ஆண்டவரின் கரங்களோடு என்னுடைய கரங்களை இணைத்து கரம் கொடுத்து இறை மனிதனாக நான் வாழ்ந்திட என்னுடைய ஜெபம் என்னை ஆண்டவரில் இணைக்கிறது என்று கூறினாராம். இன்று நமது ஜெபம் நம்மை ஆண்டவரோடு இணைக்க வேண்டும் .அதற்கு தூய ஆவியானவர் தான் நமக்குத் துணையாக இருந்து நம்மை ஆண்டவரோடு இணைந்து வாழ வழி நடத்திச் செல்கிறார் என்பதை உணர்ந்தவளாய் நாம் சொல்லிலும் செயலிலும் ஆண்டவரோடு இணைந்து வாழக்கூடியவர்களாக அவரது சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரது சாயலாக இச்சமூகத்தில் வலம் வந்திட இறையருளை வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...