வியாழன், 20 மே, 2021

நீங்கள் விசாரிக்கப் பட்டதுண்டா? ... (21.5.2021)

நீங்கள் விசாரிக்கப் பட்டதுண்டா? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 விசாரணை என்றதுமே தமிழில் விசாரணை என்ற ஒரு படம் வந்தது. அது உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் இன்றைய வாசகங்கள் இரண்டிலும் இரண்டு விசாரணைகளை நாம் காணலாம். 

முதல் வாசகத்தில்  பவுல் விசாரிக்கப்படுகிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவை விசாரிக்கிறார். இந்த விசாரணைகள் இரண்டுமே அன்பை அடிப்படையாகக் கொண்டது. பவுல் இயேசுவின் மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். அதன் விளைவாக அவருடைய கருத்துக்களை போதித்தார். அதை ஏற்றுக்கொள்ள இயலாத சிலர் அவரை குற்றவாளி என தீர்ப்பிட்டு அதிகாரிகளின் முன்பாக அழைத்து வந்தார்கள். அந்த அதிகாரிகளைக் கண்டு அஞ்சாமல் தான் அன்பு செய்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மனதில் உறுதியாக பற்றிக் கொண்டிருந்த காரணத்தினால், உயர் அதிகாரிகளும் என்னை விசாரிக்கலாம். நான் காத்திருக்கிறேன் எனக் கூறி, சிறைவாசத்தை இன்முகத்தோடும், தைரியத்தோடும், ஏற்றுக் கொண்டவர் இந்த பவுல். 


நற்செய்தி வாசகத்திலும் இயேசு தன்னுடைய சீடரான பேதுருவிடம் நீ என்னை அன்பு செய்கிறாயா? என்று விசாரிக்கிறார். மூன்று முறை இதே கேள்வியை எழுப்ப, இரண்டு முறை ஆம் என்று கூறிய பேதுரு, மூன்றாம் முறை நான் உம்மை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்பது உமக்குத் தெரியுமே என்று கூறி தன்னை முழுவதுமாக கையளிக்கின்றார்.  


இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், பேதுருவை போலவும், பவுலைப் போலவும் பல நேரங்களில் அன்பை அடிப்படையாகக் கொண்டு நாமும் விசாரிக்கப்படுகிறோம். ஒருவரை அளவுக்கு அதிகமாக அன்பு செய்கிறோம். ஆனால் ஏதோ ஒரு சின்ன கருத்து வேறுபாடு. உடனே அன்பில் சந்தேகம் எழுகிறது. உண்மையாலுமே இவர் நம்மை முழுவதுமாக அன்பு செய்கிறாரா? என்ற கேள்வியானது உள்ளத்தில் எழுகிறது.  

குடும்பத்திலும் ஒருவருக்கு ஒருவர் அனைத்தையும் விட்டுக்கொடு பகிர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும், திடீரென நடக்கக்கூடிய சின்னஞ்சிறு மனக்கசப்புகள், அன்பில் கேள்விகளை உருவாக்குகிறது.  இந்த அன்பில் எழக்கூடிய கேள்விகள் அன்றோடு நின்றுவிடாமல் அது தொடரும் பொழுது, சந்தேகங்களாக மாறுகிறது. 
நாம் ஏதோ ஒரு நிகழ்வின் காரணமாக மன வருத்தத்தோடு வீட்டிற்கு வரலாம்.  வரும் போது நமது அன்புக்குரியவர் நம்மிடம் அந்த ஏதேனும் ஒன்றை கேட்கும் பொழுது, யாரோ ஒருவர் மீது இருக்கக்கூடிய கோபத்தை நமது அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்துகிறோம். உடனே அன்புக்குரியவர்களாள் அதை ஏற்க இயலவில்லை. அங்கு உறவில் சிக்கல் இருப்பதாகவும், அன்பு குறைவுபடுகிறது என்று எண்ணிக் கொண்டு ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள துவங்குகிறோம். சந்தேகப்பட துவங்கினாலோ, உறவு வளராது.

உண்மையான அன்பு என்பது ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தான் அடங்கி இருக்கிறது.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அவர் பலவிதமான மனிதர்களை சந்தித்தார். சந்தித்த ஒவ்வொரு மனிதரையும் அன்பு செய்தார். அவர்கள் இருப்பது போல அவர்களை ஏற்றுக் கொண்டார்.  ஆனால் இன்று நாம் கருதுகின்ற அன்பு என்பது நமது விருப்பம் போல் ஒருவர் செயல்படுவது தான் உண்மையான அன்பு என எண்ணுகிறோம். எனவே நமது விருப்பப்படி ஒருவர் செயல்படவில்லை என்றால்,  அவர்  நம்மீது முழுமையாக அன்பு கொள்ளாதவர் என எண்ணி, சந்தேகிக்க கூடியவர்களாக இருக்கிறோம். இயேசு பேதுருவிடம் நீ என்னை அன்பு செய்கிறாயா? என்ற கேள்வியானது, பேதுருவிடம் இயேசு ஐயப்பட்டு கேட்ட கேள்வி அல்ல. அவரிடம் மூன்றாம் முறையாக பேதுரு உமக்குத் தெரியுமே என்று  தன்னையே கையளித்தது போல,  நாம் அடுத்தவரை அன்பு செய்வது என்பது வெறுமனே வார்த்தைகளால் அல்லாமல் சொல்லிலும் செயலிலும் வெளிப்படவேண்டும்.  அடுத்தவர்களின் உணர்வுகளையும், உள்ளத்து எண்ணங்களையும் உணர்ந்து கொண்டவர்களாய், அடுத்தவர்கள் இருப்பது போல அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களோடு இச்சமூகத்தில் பயணிப்பது தான் உண்மையான அன்பாக இருக்க முடியும். நமது விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதுதான் அன்பு என நினைத்தால், அது அன்பிற்கு நாம் கொடுக்கும் தவறான விளக்கமாக இருக்கும். இன்றைய நாளில் இயேசுவின் மீது அதீத அன்பு கொண்டிருந்த காரணத்தினால் தான், பேதுரு இயேசுவிடம் தன்னையே முழுமையாக கையளித்தார். அதேபோலத்தான் பவுலும்,  தன்னுடைய வாழ்வில் இயேசுவை அன்பு செய்வதால்  துன்பமே நேர்ந்தாலும், துணிவோடு அதனை ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், இவர்கள் ஒவ்வொருவருமே இயேசுவை இருப்பது போல இயேசுவை  கண்டார்கள், நம்பினார்கள், அன்பு செய்தார்கள். நாமும் சக மனிதர்கள் மீது  நாம் கொண்டுள்ள அன்பு குறித்து விசாரிக்கப்படும் போது பவுலைப் போலவும் பேதுருவை போலவும் நம்மை நாம் முழுமையாக கையளிக்க துணிவு கொள்வோம்.மேலும்   நாமும் நம் ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமாயின் சக மனிதர்களுடன் கூடிய அன்பில், உறவில் நிலைத்திருக்க வேண்டும். அதற்கு நாம் நமது விருப்பப்படி அவர்கள் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு அடுத்தவர் இருப்பது போல அவர்களை ஏற்றுக்கொண்டு இச்சமூகத்தில் வலம்வர இறையருளை வேண்டுவோம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...