எங்களுக்கு என்ன கிடைக்கும்?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே எதையாவது செய்தால் அதிலிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு செய்கிறார்கள். எதிர்பார்ப்போடு செயல்படும் போது, நாம் எதிர்பார்த்தது நமக்கு கிடைக்காத போது அதை மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. எனவே மனதில் போராட்ட குணமானது உதிக்கிறது. அடைய எண்ணியதை எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம். எப்படியாவது எதிர்பார்த்ததைப் பெற்று விட வேண்டும் என்று தூண்டுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் எதையோ எதிர்பார்த்து இயேசுவின் பின் வந்தவர்கள் போல, சீடர்களுடைய கேள்விகள் அமைகின்றன. உம்மைப் பின் தொடர்வதால், அனைத்தையும் விட்டுவிட்டு வருவதால், எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வியை பேதுரு எழுப்புகிறார். பேதுருவின் கேள்வியை அமைதியாக கேட்டுவிட்டு இயேசு கூறுகிறார், உங்களுக்கு எல்லாவற்றையும் பல மடங்காக திருப்பித் தருவேன் என்கிறார். ஒருவிதத்தில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, எப்படி இவர், நாம் இழந்ததை பல மடங்காகத் திருப்பித் தருவார் என்று? அன்று தம்முடைய தந்தையையும் தாயையும் விட்டு விட்டு சீடர்கள் இயேசுவைப் பின்பற்றி வந்தார்கள் என்பதை நாம் விவிலியத்திலிருந்து அறியலாம். இயேசு தன்னை பின்தொடர சீடர்களை அழைத்த போது அவர்கள் தங்களிடம் இருந்ததை எல்லாம் விட்டு விட்டு வந்தார்கள்.
அவர்கள் தங்களிடம் இருந்ததை எல்லாம் விட்டு விட்டு வந்தார்கள் என்ற வார்த்தையினை நாம் ஒவ்வொரு சீடரின் அழைத்தல் நிகழ்விலும் காண முடியும். மறைமாவட்டங்களிலோ அல்லது குருத்துவ பயிற்சிக்கான இடங்களிலோ, அல்லது துறவற பயிற்சிக்கான இடங்களுக்கோ செல்லும் போதெல்லாம் அங்கு முன்னிறுத்தப்படுவதும் இதுபோன்ற இறை வார்த்தைகள் தான். ஆண்டவர் அழைத்தார், எனவே இருப்பதை எல்லாம் விட்டு விட்டு வந்தார்கள் என்று. விட்டு விட்டு வந்தவர்கள் எல்லாம் எல்லாவற்றையும் இழந்தவர்களாக மாறினார்கள், என்ன நாம் எண்ணுகிறோம். ஆனால் அவர்கள்தான் பன்மடங்கு பெற்றவர்களாக மாறினார்கள்.
அன்று இயேசுவின் சீடர்கள் தனது தாயுடனும் தந்தையுடனும் குடும்பத்தினருடனும் வீட்டோடு இருந்திருந்தால், அவரை அவரதுஃ வீட்டார் மட்டுமே அறிந்திருப்பர். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பணிக்காக அவர்கள் முன் வந்தபோது, அகிலமே அவர்களை அறியக்கூடிய நிலை உருவானது.
பொதுவாகவே குருக்களும் கன்னியர்களும் சொல்வது உண்டு, எங்களை பெற்றெடுத்தது ஒரு தாய் தந்தை. ஆனால், எங்களுக்கு உலகில் பல தாய் தந்தையர்கள் உண்டு என்று. செல்லும் இடங்களில் எல்லாம் அனைவரையும் அம்மா அப்பா என அழைக்கக்கூடிய பண்பானது அவர்களிடம் காணப்படுகின்றது. இத்தகைய யதார்த்தமான நிகழ்விலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம், அவர்கள் விட்டு விட்டு வந்தது ஒரு பெற்றோரை, ஆனால் அவர்களுக்குக் கிடைத்ததோ ஓராயிரம் பெற்றோர். இயேசுவின் வார்த்தைகளும் அப்படித்தான். நாம் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் எதையாவது ஒன்றை இழக்கும் பொழுது, நாம் பன்மடங்காக அவற்றைப் பெறுகிறோம். ஆனால் எதிர்பார்ப்போடு ஒன்றை இழக்கும் பொழுது, நாம் எதிர்பார்த்தது நிறைவேறாமல் ஏமாற்றத்தை தழுவும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் வேதனை அடைகிறது. அந்த வேதனை எப்படியாவது எதிர்பார்த்ததை அடைந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட வைத்து பலவிதமான துன்பத்தையும் துயரத்தையும் நமது வாழ்வில் உருவாக்குகிறது. எனவே நாம் இழக்க வேண்டும். பலனை எதிர்பார்த்து அல்ல. எதையும் எதிர்பார்க்காமல் இழக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை நாம் உள் வாங்கிக் கொள்வதற்காக பேதுரு எழுப்பிய கேள்வியாகத்தான், எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.
முதல் வாசகத்தில்,
1.திருச்சட்டத்தை கடைபிடித்தல்- காணிக்கைகள் செலுத்துதல்,
2.கட்டளைகளை கருத்தில் கொள்ளுதல் -
நல்லுறவு பலி செலுத்துதல்,
3. அன்புக்கு கைமாறு-
மாவு படையல் செலுத்துதல்.
4. தருமம் செய்தல்-
நன்றி பலி செலுத்துதல்.
5. தீச் செயலை விட்டு விடுதல்-
ஆண்டவருக்கு விருப்பமானது.
6. அநீதியைக் கைவிடுதல்-
பாவ கழுவாய் பலிக்கு
இணையாகும் என்று சீராக்கின் ஞான நூலாசிரியர் ஒவ்வொரு காரியத்திற்கும் இணையானது எது என்று குறிப்பிடுகின்றார்.
நமது தியாகத்திற்கு இணை எது என்ற கேள்வியை நாம் எழுப்பாமல், நாம் செய்வது தியாகம் என்பதை உணர்ந்து தியாகம் செய்வோம். அந்த தியாகத்தில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத போது, நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அபரிமிதமாக, பலனை இறைவன் தருவார் என்ற நம்பிக்கையோடு தியாகங்கள் பல செய்ய முன்வருவோம். ஆனால் செய்யும் தியாகம், பலனை எதிர்பார்த்ததாக இருக்கக் கூடாது என்பதை உள்ளத்தில் இருத்தி கொண்டு, வாழ்வில் வெற்றிபெற இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.
👌👍
பதிலளிநீக்கு