செவ்வாய், 18 மே, 2021

பெற்றதைக் கொடுப்பது சிறந்தது. (19.5.2021)

பெற்றதைக்  கொடுப்பது சிறந்தது. 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
     இரு கை நீட்டி உதவி கேட்பவனுக்கு ஒரு கை நீட்டி உதவினால் அந்த இரு கைகள் உன்னை கடவுளாக பார்க்கும் ....

வாங்கி பழகிய பலருக்கு கொடுப்பதில் நிறைவுல்லை என்பது நிதர்சனமான உண்மையாகிவிட்ட இந்த உலகத்தில் பெற்றதை கொடுக்க உங்களை இன்றைய நாளில் அழைக்கின்றேன் ....

பெற்றதை கொடுப்பது கடினம் தான் ஆனால் கொடுப்பது எளிது ....பெற்றததை கொடுக்க வேண்டும் என்றதும் இருப்பதையெல்லாம் இழந்து விடுவோம் என எண்ண வேண்டியதில்லை.... சிலவற்றை நாம் கொடுக்கும் போது அது நமது வாழ்வில் இரட்டிப்பாக மாறும் ...

அன்பை பகிரும் போது நம்மில் அன்பு அதிகரிக்கும்....
உணவின்றி தவிப்போருக்கு (தேவையில் தவிப்போருக்கு)  நம்மிடம் இருக்கும் உணவை பகிரும் போது (தேவையை நிறைவு செய்யும் போது ) நமக்குள் மன மகிழ்ச்சி அதிகமாகும் ....
அறிவை பகிரும்போது இன்னும் அறிவில் வளர்வோம் ...
இந்த சிந்தனையோடு இன்றைய வாசகத்தில் நுழைவோம் .. பெற்ற எதை கொடுத்தார்கள் என சிந்திப்போம்...நாமும் பெற்றதை கொடுக்க முயல்வோம் ...

இன்றைய முதல் வாசகத்தில் பவுலுக்கு பிரியாவிடை கொடுக்கின்றார்கள்.  பவுல்  இயேசுவிடமிருந்து தான் கண்டதையும் கேட்டதையும் தான் சென்ற இடங்களில் எல்லாம் அறிவித்தார். இயேசுவின் வார்த்தைகளை கூறி, பலரை, பலரது உள்ளங்களை இயேசுவின் பால் திருப்பினார்.  அவர் பெற்றுக் கொண்ட ஆண்டவர் இயேசுவின் அழைப்பை அடுத்தவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் முன்முனைப்போடு செயல்பட்டு அப்பணியில் நிறைவு கண்டவர் இந்த பவுல். 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் இவ்வுலகிற்கு எதற்கு அனுப்பப்பட்டேன் என்பதை உணர்ந்தவராய், தன்னையும் இறைவனுக்கு அர்ப்பணம் ஆக்குகிறார்.(தன்னையே நமக்காக கொடுத்தார்). 

இன்று இந்த ஆண்டவரின் வார்த்தைகளின் படி வாழக்கூடிய நாம் ஒவ்வொருவரும் நாம் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழ வேண்டும்.(எபேசியர்4:1)
நாம் பெற்றதை அடுத்தவருக்கு கொடுத்து வாழ வேண்டும் நாமம் அறிந்தவற்றையும், நாம் கேட்டவற்றையும் நாம் புரிந்து கொண்டதையும் இச்சமூகத்தில் நமக்கு பின் வருகின்ற தலைமுறையினருக்கும், நம் தோளுக்கு இணையான சகோதர சகோதரிகளுக்கும் அறிவிக்கவும் கற்பிக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

 ஞானி என்பவன் அனைவரிடமிருந்தும் கற்பவன் என்பார்கள். "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற மமதையோடு இந்த உலகத்தில் நாம் பயணத்தை மேற்கொள்ளாமல், நான் கற்றுக்கொள்ள வேண்டியது, நான் அறியாதது இவ்வுலகத்தில் இன்னும் பல உண்டு என பயணிப்பவர்களாக மாறி அடுத்தவர்களிடம் இருந்து அவர்கள் காட்டக்கூடிய, அவர்களிடம் இருக்கக்கூடிய நல்லவிதமான பண்புகளை நாம் நம்முடைய பண்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். எப்படி இயேசுவிடம் காணப்பட்ட பண்புகள் ஒவ்வொன்றையும் தன்னுடைய வாழ்வில் பவுல் பிரதிபலித்தாரோ, அதுபோல நாமும் இச்சமூகத்தில் பிரதிபலிக்க அழைக்கப்படுகின்றோம்.  

இன்றைய முதல் வாசகத்தில் கேட்டது போல உண்மையைத் திரித்துக் கூறுவார்கள் இன்று அதிகம்.... நாம் அறிந்த ஒன்றே அடுத்தவர் அறிந்து விடுவாரோ என்ற எண்ணத்தில் நாம் அறிந்ததை நமக்குள்ள வைத்துக்கொள்ளும் பழக்கம் பள்ளியில் இருந்தே துவங்குகிறது என்பது நிதர்சனம் ...ஆனால் நாம் அவ்வாறு  செயல்படாதிருக்க  இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம் .... நாம் அறிந்ததை அடுத்தவருக்கு அறிவிக்கும் போதும், நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிரும்போது நாம் ஒன்றானவர்களாக மாறுகிறோம் ...இத்தகைய பண்புகளோடு இம் மண்ணில் வாழும் மனிதர்கள் பலர் உண்டு ...எனவே நாமும்  பவுலைப் போல பிறரிடம் (இயேசுவிடம்) காணப்படக்கூடிய நற்பண்புகளை நம்மில் ஏற்றுக்கொண்டு அந்த நற்பண்புகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது நம்மையே நாம் முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்க கூடியவர்களாக மாறுகிறோம். 
இறைவனுக்கு நம்மை நாம் அர்ப்பணிப்பது என்பது வார்த்தைகளால் சொல்லக்கூடியது அல்ல. மாறாக செயலால் வெளிக்காட்டப்பட வேண்டியது. நமது சொல்லிலும் செயலிலும் நாம் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப் பட்டவர்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டும். அதற்கு பவுலைப் போல ஆண்டவர் இயேசுவின் பணிகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு இடையூறுகளுக்கு மத்தியிலும் அந்தப் பணியை செய்வதற்கு முன்னோக்கி செல்லவேண்டும். அந்தப் பணியைச் செய்வதால் நமக்குத் துன்பம் நேரும் என தெரிந்திருந்தாலும் எப்படி அந்தத் துன்பத்தை எதிர் கொண்டு போய் இயேசுவிடம் இருந்து கற்றுக் கொண்ட பணிகளை பிறருக்கு அறிவிக்க பயணத்தை மேற்கொண்டு எருசலேம் நோக்கி பவுல் நகர்ந்தாரோ, அதுபோல நாமும் நகர வேண்டும். துன்பமே நமக்கு பரிசாக கிடைத்தாலும் நாம் இறைவனுக்கு அர்ப்பணம் ஆனவர்கள் அவருக்கு நம்மை நாம் அர்ப்பணித்தவர்கள் என்பதை மனதில் கொண்டு நாம் பெற்றதை பிறருக்கு கொடுத்து  சக மனிதனுக்கு தேவையானவற்றை செய்யக்கூடிய சகமனிதனின் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளக்கூடிய நபர்களாக நாம் மாறும்போது நமது சொல்லிலும் செயலிலும் நாம் இறைவனுக்கு அர்ப்பணம் ஆனவர்கள் என்பது வெள்ளிடை மலையாக புலப்படும். எனவே வார்த்தைகளால் நாம் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறுவதை விட, நாம் பெற்றுக்கொண்ட  ஒவ்வொன்றையும் அடுத்தவருக்கு வழங்க இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...