சனி, 8 மே, 2021

இயேசுவின் நண்பர்கள் நாம்... (9.5.2021)

இயேசுவின் நண்பர்கள் நாம், 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் வாசகங்களின்  அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
அன்பின் உருவம் என்றால் நம் கண் முன் வருவது அம்மா. ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தாளர். அவர் தன்னுடைய குழந்தையை அன்போடும் பாசத்தோடும் அக்கறையோடும் நன்றாக வளர்த்து வந்தாள். ஒருநாள் அந்தக் குழந்தை தன்னுடைய இரண்டு கைகளிலும் ஒரு ஒரு ஆப்பிளை வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது அக்குழந்தையின் அருகில் வந்த அந்த அம்மா, என் செல்லமே! நீ எனக்கு ஒரு ஆப்பிள் கொடுப்பாயா? என்று கேட்டாள். உடனே அந்தக் குழந்தை தனது வலது கையில் இருந்த ஆப்பிளை கடித்தது. உடனே தாயின் மனம் சற்று ஏமாற்றம் அடைந்தது. தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவளாக மீண்டும் அந்த குழந்தையை நோக்கி மற்றொரு ஆப்பிளை அம்மாவுக்கு நீ தருவாயா? என்று கேட்டாள். உடனே அந்தக் குழந்தை தன்னுடைய இடது கையில் இருந்த ஆப்பிளையும் கடித்தது. இதனைக் கண்ட தாயின் மனம் மிகவும் வருந்தியது. தன்னுடைய குழந்தையை தான் நன்றாக வளர்க்க வில்லையோ என்று நினைத்து வேதனைப்பட்டாள். அந்த நிமிடம் குழந்தை தாயை பார்த்து, அம்மா! இந்த ஆப்பிள் தான் நன்றாக இருக்கிறது. இதனை சாப்பிடுங்கள் என்று கூறி ஒரு ஆப்பிளை தாயின் கையில் கொடுத்தது. 

நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். ஒரு குழந்தையை ஒரு தாய் எப்படி வளர்கிறாளோ, அப்படித்தான் அந்த குழந்தை வளரும்.  நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் ஒவ்வொருவரையும் எப்படி நோக்குகிறோமோ அப்படித்தான் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் பிரதிபலிக்கிறார்கள். இயேசு நம் அனைவரையும் நண்பர்கள் என நோக்கினார். எனவே நம்மை நண்பர்கள் என அழைத்தார்.இயேசு நம் நண்பரானதால் நாம் அனைவரும் வேறுபாடுகள் களைந்து நண்பர்களாகிறோம்.  நாம் ஒவ்வொருவரையும் நண்பர்களாக கருதி வாழ அழைக்கப்படுகிறோம். 

இன்றைய முதல் வாசகத்தின் வழியாக கடவுளின் பார்வையில் அனைவரும் சமமானவர்கள் நம்மிடையே உயர்வு தாழ்வு என்பது கிடையாது. அனைவரும் ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழவே இச்சமூகத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம். படைக்கப்பட்ட ஒவ்வொருவருமே அடுத்தவர்களின்  தேவைகளை அறிந்து அடுத்தவரை நமது நண்பர்களாக பாவித்து அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுக்ககா கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் களையும் இடம் நட்பு என்றால் அது மிகையாகாது. இன்பத்தில் மட்டும் பங்கெடுப்பவன் நண்பன் அல்ல. துன்பத்தில் பங்கெடுப்பவனே நல்ல  நண்பனாகவும் இருக்க முடியும்.  நட்பில் மட்டுமே இன்ப துன்பம் என எதையும் பாராமல் அனைத்திலும் நண்பர்களுடன் இருப்பதை நாம் உணர முடியும்.  எனவே தான் இறைவன் நம்மை நண்பர்கள் என்கிறார். 


 இவ்வுலகில் நாம் காணக்கூடிய ஒவ்வொரு மனிதனுமே இறைவனின் சாயல். தொடக்கநூல் 1 ஆம் அதிகாரம் 28 வசனம் கூறுகிறது, கடவுள் மனிதனை தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் என்று. கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் எந்தவித வேறுபாடும் பாகுபாடும் இன்றி ஏற்றுக் கொண்டு அவர்களை கடவுளாக காண நாம் அழைக்கப்படுகிறோம். 

மனிதர்களை இன்று பெரும்பாலும் ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகிறோம்.  இன்று நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலையானது, ஒருபுறம் அச்சத்தை உருவாக்கி கொண்டு இருந்தாலும் மறுபுறம் நாம் நமக்குள் இருக்கக்கூடிய மனிதத்தன்மையை மனிதநேயத்தை சீர்தூக்கி பார்க்க அழைப்புத் தருகின்றது.  இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைப்படுவது அன்பான இதயங்கள் மட்டுமே.  அன்பான இதயங்களால் அனைவரையும் அரவணைக்கும்.அது நட்பில் நிகழும்.பலவகையான நண்பர்கள் குறித்து சீராக்கின் ஞானம் ஆகமம் 6 அதிகாரம் கூறுகிறது.  தன்னலம்  கொண்ட நண்பர்கள், பகைவர்களாமாறும் நண்பர்கள், விருந்தில் மட்டும் பங்கேற்கும்  நண்பர்கள், நம்பிக்கைக்குரிய நண்பர்கள் ,என நான்கு வகை நண்பர்கள் பற்றி கூறுகிறது.  இந்த நான்கு வகை நண்பர்களுளோள் இயேசு நம்பிக்கைக்குரிய நல்ல  நண்பராக திகழ்ந்தார்.எனவே தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அன்று சமூகத்தில் தேவையில் இருந்த பலரை தேடிச் சென்று அவர்களின் இன்ப துன்பங்களில் துணை நின்றார். இன்று நாமும் அவரைப் போலவே நம்பிக்கைக்குரிய நல்ல நண்பர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். உலகில் எங்கே யாரெல்லாம்  நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ    அவர்களுக்கு நம்மாலான சின்னஞ்சிறு உதவிகளை செய்வதற்கு உள்ளத்தில் உறுதி ஏற்போம். ஏனென்றால் கடவுள் அவர்களுக்கு நண்பராய் இருப்பதால் அவர்கள் நம்முடைய நண்பர்களாக மாறுகிறார்கள்.  கடவுள் தன் நண்பருக்காகத்  தன் இன்னுயிரையும் கொடுத்தார்.  அன்பின் உச்சகட்டமாக தனது இரு கைகளையும் சிலுவையில் விரித்த வண்ணம் தனது உயிரை கொடுத்த அந்த இறைவனை பின்பற்றி நடக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, இவ்வுலகத்தில் அன்பை விதைக்கக் கூடியவர்களாகவும்,விதைத்த அந்த அன்பையே அறுவடை செய்பவர்களாகவும் இருக்க  இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம்.  

நம் அனைவரும் அறிந்த புனித அன்னை தெரசா அவர்கள் கூறுவார்,  இந்த சமூகத்தில் ஒரு மனிதன் பசியால் இறக்கிறான் என்றால் அது கடவுள் அவனை பராமரிக்கவில்லை என்பதால் நிகழவில்லை.  மாறாக, உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனை பராமரிக்காததால் தான் நிகழ்ந்தது எனக் குறிப்பிடுவார்.


இன்று நாம் வாழும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இயேசுவின் நண்பராகிய நாம்,   மற்றவர்களுடைய தேவைகளை அறியவும் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கவும்,  அவர்களுக்கு நம்மாலான சின்னஞ்சிறு நற்செயல்களைச் செய்யவும் அவர்களை இன்முகத்தோடு விருப்பு வெறுப்பு இன்றி ஏற்றுக் கொள்ளவும் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 
ஏற்றுக் கொள்கிறேன் என சொல்வதில் அல்ல, ஏற்றுக்கொள்வதை நமது செயலால் நாம் வெளிக்காட்டும் போது தான் இறைவனின் அன்புக்கு உரியவர்களாக இருக்க முடியும். இறைவனின் அன்புக்கு உரியவராக நாம் மாறும்போது தான் இறைவன் தருகின்ற மகிழ்ச்சியை நம்மால் அனுபவிக்க முடியும்.  அவரது கட்டளையைப் பின்பற்றி நடக்கும் உண்மைச் சீடராக இச்சமூகத்தில் திகழ முடியும். எனவே இயேசுவைப் பின்பற்ற கூடிய நாம் அனைவரையும் இயேசுவின் நண்பர்கள் என்பதை உணர்ந்த வண்ணம் அவர்களைஇன்பதோடு ஏற்று நம்மாலான சின்னஞ் சிறு உதவிகள் மூலம், எப்போதும் அனைவரோடும் இணைந்திருக்க இறையருளை வேண்டி இந்த திருப்பலியில் இணைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...