திங்கள், 17 மே, 2021

கேட்டது போதும் செய்யுங்கள்! (18.5.2021)

கேட்டது போதும் செய்யுங்கள்! 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
அன்பு நண்பர்களே!
திரும்பும் திசையெங்கும் மரண ஓலங்கள். எரிப்பதற்கு விறகு இல்லை என்பதற்காக இறந்த உடல்களை தண்ணீரில் வீசக் கூடிய நிலை.   24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்க கூடிய மயானங்கள்.  படிப்பதற்கான இடங்கள் அனைத்தும் இன்று படுப்பதற்கு தேவையான கட்டிலோடு நிரப்பப்பட கூடிய அவலநிலை. படிப்பதற்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் மருத்துவ அறைகளாக மாற்றப்படும் இன்னலான சூழ்நிலை.  தொழுவதற்கு என்ன பயன் படுத்தப்பட்ட மசூதிகள் இன்று அனைத்து நோயாளிகளுக்கும் தங்கும் இடங்களாக மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலை. திரும்பும் எல்லா திசையிலும் தொற்றுநோயின் அச்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்களைக் காக்க பலவிதமான வழிகளை அரசு கையாண்டாலும், சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும் என மக்கள் எண்ணினாலும் நோய்த்தொற்று பரவிக் கொண்டு தான் இருக்கிறது. குறைந்த பாடில்லை. குறைகிறது என்ற செய்தி காதுக்கு எட்டினாலும்,  நிஜத்தில் அருகாமையில் இருப்பவர்களும் தெரிந்தவர்களும் படக் கூடிய இன்னல்களும் கஷ்டங்களும் மனதை வாட்டுகின்றன. 

                      இன்றைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இன்றைய இறைவார்த்தை, கேட்டது போதும் செய்யத் தொடங்குங்கள் என்ற செய்தியை தருவதாக உணர்கின்றேன். பவுல் இறைவனைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து விட்டு, தன்னுடைய சீடர்களிடம் கூறிய வார்த்தை, நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். சிறப்பாக செய்து முடித்து விட்டேன். இனி எனக்கு கிடைக்கவிருப்பது வெற்றிவாகை மட்டுமே. நானறிந்த அனைத்துமே உங்களுக்கு கற்பித்தேன் எனக் கூறுகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தான் எதற்காக அழைக்கப்பட்டேனோ அந்த பணியை செய்து முடித்து விட்டேன் என்ற வார்த்தையை வெளிப்படுத்துகிறார். இவர்கள் எல்லாம்  இச்சமூகத்தில் என்ன செய்தார்கள்? என்ன மாற்றத்திற்கு வித்திட்டார்கள் என சிந்திக்கும் போது மனிதனாகப் பிறந்த ஒருவன் இப்படி வாழ வேண்டும் என்பதை சொன்னார்கள், தம் செயலில் காட்டினார்கள். இவர்களைப் பற்றி அதிகம் அறிந்து இருக்கக்கூடிய நாம் இவர்கள் சொல்வதை சொல்லுகிறோம். ஆனால் நமது செயல்கள் அவற்றை வெளிப்படுத்த மறுக்கின்றன.

              ஒரு கூட்டத்தில் ஒருவன் கையேந்தி நிற்போரை காத்திருக்க வைக்காதே என அடுத்தவருக்கு உதவி செய்வதை பற்றி பேசினானாம். வெளியே சென்ற போது அவனிடம் ஒருவன் கையேந்திய போது, தள்ளிப் போ என்று சொல்லிவிட்டு சென்றானாம். 
        இன்று நம்மில் பலரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என பேசுகிறோம். இந்த உலகத்தில் அவர் காட்டிய வழியை வாழ்வாக வேண்டுமென கற்பிக்கின்றோம். எப்படி எல்லாம் வாழ்ந்தால் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ முடியும் என்பதை அறிந்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். ஆனால் அதனை செயலில் காட்ட மறந்து போகின்றோம். இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும் தம்முடைய வாழ்வால் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தார்கள். இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கூட,  வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு ஒருவர் மற்றவரின் நலனில் அக்கறை காட்ட, தயங்குகிறோம். நம்மை காத்துக் கொள்ளவே சரியான தருணம் என எண்ணுகிறோம். நம்மைக் காத்துக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.நம்மை காத்துக் கொள்வது போல அடுத்தவரையும் காத்துக்கொள்ள வேண்டும். நாம் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளானால் நாம் எப்படி எல்லாம் துன்புறுவோமோ, எதையெல்லாம் எண்ணி வருந்துவோமோ, அதுவே இன்று துன்புற்று கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் எண்ணமாகவும் ஏக்கமாகவும் இருக்கிறது என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். அவர்களின் துன்பங்களை நமது துன்பமாக நினைத்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளையும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற கூடியவர்களாய், இருக்க வேண்டும். 

செய்தித்தாளின் வழியாக மனதை தொட்ட ஒரு செயல், உதயநிதி ஸ்டாலினின் ஒரு சட்டமன்ற வேட்பாளர், தன்னுடைய பகுதியில் பாதிக்கப்பட்டிருந்த மக்களை சென்று சந்தித்து,  அதிலும் குறிப்பாக இந்த தொற்று நோய் காரணமாக ஒதுக்கப்பட்டுள்ளவர்களையும் சந்தித்து அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் இருக்கிறதா? என்னவெல்லாம் வேண்டும்? எவற்றை எல்லாம் நிறைவேற்ற முடியும் எனக் கேட்டு, வாங்கிக் கொடுக்கக் கூடிய பணியில் ஈடுபட்டதை அறிந்த போது, இத்தகைய பணிகளை செய்வதற்கு நாம் சட்டமன்ற வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதல்ல,  சில நல்ல மனதுடன் கூடிய எதார்த்தமான பணி. இத்தகைய பணிகளை செய்யவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்திருக்கிறார். தேவையில் இருப்போரின் தேவையை உணர்ந்தவர். பசியோடு மக்கள் உறங்கக் கூடாது என ஏங்கியவர். தாகத்தால் வாடும் மக்களின் தாகத்தை உணர்ந்தவர். இன்று நாம் வாழும் இடங்களில் நம்மை சுற்றிலும் இந்தத் தொற்று நோயின் தாக்கம் காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். என்ன தொழில் செய்வது, உணவுக்கு என்ன செய்வது என தெரியாது, எந்தத் தொழிலும் இன்றி, வருமானமும் இன்றி, இருப்பதைக் கொண்டு வாழ்ந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருந்தாலும் உங்களின் குடும்பத்தினரின் நலன் காக்க வேண்டும் என்ற ஒரு பணியினை நாம் பார்க்க முடிகிறது. இந்தச் சமூகத்தில் அருகில் உள்ளவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனக்கூறி நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என கூறி நமது வீட்டு கதவுகளை அடைத்துக் கொள்வது போல, நமது உள்ளக் கதவுகளையும் அடைத்துக் கொள்ளாமல், நமது பாதுகாப்பையும் மனதில் வைத்துக்கொண்டு நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடியவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பணியில் நாம் இறங்கிட வேண்டும். இத்தகைய பணிகளை நாம் முன்னெடுக்கும் போதுதான் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை செயல்படுத்த கூடியவர்களாக நாம் இருக்க முடியும். இது ஒன்றும் புதிய காரியம் அல்ல.  அனைவரும் அறிந்ததுதான். ஆனால் பல நேரங்களில் இதுபோன்ற காரியங்களை கேட்டுக் கொண்டிருக்கிறோமே ஒழிய, செயலில் ஈடுபட மறுக்கின்றோம். என்று கேட்டது போதும் கேட்பதை நிறுத்துவோம். செயலில் இறங்கத் தொடங்குவோம். எப்படி ஆண்டவரின் குரல் ஓசையைக் கேட்ட பவுல், அவரைப் பற்றிய நற்செய்தியை தனது வாழ்விலும் சொல்லாலும் செயலாலும் வெளிக்காட்டினாரோ, அவரைப் போல இன்றைய நாளில் நமது செயல்கள் வழியாக, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு உயிர் தருவோம். நமது வெற்று வார்த்தைகளால் இறை வார்த்தைக்கு உயிர் தருவதை விட, செயல்களால் உயிர்தர இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 

         எனவே கேட்பதை நிறுத்தி செயல்கள் வழியாக இறை வார்த்தைக்கு உயிர் தர இன்றைய நாளில் இறையருளை வேண்டி நாம் நமது பயணத்தை தொடருவோம்.

1 கருத்து:

  1. நமது அன்பான வார்த்தைகள் வழியாகவும் நமது உதவிக்கரங்கள் வழியாகவும் அண்டை அயலாருக்கு உதவிகள் செய்து ஊக்கமூட்ட நம்மை அழைக்கும் அருட்சகோதரர் திருத்தொண்டர் சகாயராஜ் அவர்களுக்கு நமது அன்பின் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...