வெள்ளி, 21 மே, 2021

சீடனின் பணி என்ன? (22.5.2021)

சீடனின் பணி என்ன? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நாள் இறைவார்த்தைகள் ஒரு சீடனுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள் என்ன? என்பதை வெளிக்காட்டுகின்றன.  சீடன் எனப்படுபவன் வந்தோரை வரவேற்கத் தெரிந்தவராகவும் இறைவார்த்தையை அறிவிக்க கூடியவராகவும் இருத்தல் அவசியமாகிறது. 

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
(எபிரேயர் 4:12 )
             ‌ என விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம்.

                    இன்றைய முதல் வாசகத்தில் பவுல் இறைவார்த்தையை அறிவித்ததால் பலவிதமான துயரங்களை சந்தித்தார்.  துயரத்திற்கு மத்தியிலும் துவண்டு போய்விடாமல் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக, அவரைப்பற்றி அறிவிக்கும்போதெல்லாம் எழக்கூடிய இன்னல்களை எல்லாம் கண்டு அஞ்சாமல் நடுங்காமல் பயந்துபோய் தன் வாழ்வை மாற்றிக் கொள்ளாமல், துணிவோடு அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். அப்படி அறிவித்ததால் அவர் பலரால் விசாரிக்கப்பட்டார். சிறையில் இருந்தார். பலவாறு அவர் துன்பப்பட்டார்.  துன்பங்களுக்கு மத்தியிலும் தன்னிடம் நம்பிக்கையோடு வரக் கூடியவர்களை வரவேற்கும் பணியினைச் செய்தார்.  அவர்களை உபசரித்தார்.  அவர்களோடு இறைவார்த்தையைப் பகிர்ந்து கொண்டார்.  ஒரு சீடனாக இதையெல்லாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். நாமும் நம்மை தேடி வருபவர்களை வரவேற்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.  அவர்களோடு இறைவார்த்தையான நல்ல வார்த்தைகளை பகிரக் கூடியவர்களாக இருக்கிறோம். பலவிதமான கவலைகளோடும் துன்பங்களோடும் ஆலயத்தை நோக்கி வரக் கூடியவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை தருவது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. இறைவனது வார்த்தைகளால் அவர்களை தேற்ற வேண்டியது ஒவ்வொரு சீடனுடைய பொறுப்பாகும். இந்தப் பணியினை நாம் சிறப்பாக செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு இறையாட்சியினைப் பற்றி பலவாறு அறிவிக்கின்றார்.  ஆனால் இயேசு அறிவித்த வார்த்தைகளில் இருக்கக்கூடிய உண்மைத் தன்மையையும் உண்மையையும் உணர்ந்து கொள்ளாமல் பல நேரங்களில் வார்த்தைகளில் சிலவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு, இவர் ஏன் இதைச் சொன்னார்? எதற்காக இப்படி சொன்னார்? என்று பல நேரங்களில் எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.  தன்னுடன் இருந்த சீடர்களினுடைய எண்ணத்தை அறிந்தவராய் அவர்களுடைய எண்ண ஓட்டத்தை உணர்ந்து அவர்களுடைய அத்தகைய எண்ண ஓட்டம் தவறானது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார் இயேசு.  நாமும் பல நேரங்களில் இறைவார்த்தையை கேட்க வேண்டும் என்ற ஆவலோடு ஆலயத்திற்கு வருகிறோம். இறைவார்த்தையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் எதற்காக வந்தோம்? என்ன பணியை செய்ய வேண்டும்? என்பதை மறந்து போய் ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு செயல்படக் கூடியவர்களாக இருக்கிறோம்.

 இத்தகைய நிலையில் இருந்து நாம் மாறி பவுலைப் போல வந்தோரை இன்முகத்தோடு வரவேற்கவும், அவர்களுக்கு நல்ல வார்த்தைகளான இறைவார்த்தையைப் பகிரவும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் இறைவனது வார்த்தைகளான நல் வார்த்தைகளுக்காக ஏங்கும் உள்ளங்களாக இவ்வுலகில் பலர் உண்டு. பாராட்டுக்காக ஏங்குபவர்களைப் பாராட்டலாம். ஆறுதல் இன்றி தவிப்பவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை தரலாம். தேவையில் இருப்பவர்களின் தேவையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடலாம். 

 இது போன்ற இறைவார்த்தையின் அடிப்படையிலான பணிகளை இச்சமூகத்தில் நாம் முன்னெடுக்கும் போது நாம் உண்மையான சீடர்களாக  மாறுகிறோம். ஆறுதல் தேடியோ அல்லது பலவிதமான துன்பங்களுக்கு மத்தியிலோ நம்மைத் தேடி வருபவர்களைக் கண்டும் காணாமல் சென்று விடாமல், அவர்களை வரவேற்கவும், இறைவார்த்தைகளான நல் வார்த்தைகளை அவர்களோடு பகிரவும், இறையருளை வேண்டுவோம் இன்றைய நாளிலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...