துணிவு கொள்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு காட்டில் வயிற்றில் குட்டியோடு இருந்த ஒரு மானானது மேய்ந்து கொண்டிருந்தது. அந்த மானை ஒரு வேடன் குறி வைத்தான். வேடனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என மான் ஓடியது. வேடனும் துரத்தி வந்து ஓரிடத்தில் மறைந்து இருந்து அதை குறி வைத்தான். ஒரு புறம் வேடன், மற்றொரு புறமோ ஒரு புலி. அந்தப் புலியும் இந்த மானை கவ்விச் செல்வதற்கு பதுங்கியிருந்தது. ஒரு புறம் புலி, மறுபுறம் வேடன். இருவருக்கும் இடையில் இந்த மான் மாட்டிக்கொண்டது. சரி இன்னொரு திசையில் தப்பிக்கலாம் என்றால், காடு தீப்பிடித்து எரியத் தொடங்கிவிட்டது. இந்த பக்கமும் செல்ல முடியாது. நான்காவது திசையில் செல்லலாம் என திரும்பினால் அங்கு வெள்ளம் பெருக்கெடுக்க தொடங்கியிருந்தது. என்ன செய்வது என தாய் மான் யோசித்தது. யோசித்து அந்த நேரம் பார்த்து அந்த மானுக்கு பிரசவ வலி வந்தது. அப்போது அந்த மான் முடிவெடுத்தது, எந்த பக்கம் சென்றாலும் துன்பம் இருப்பது உறுதி. இப்போது துன்பத்தை எதிர்கொள்வதை விட நான் என்னுடைய கடமையை செய்யவேண்டும். வலியும் வேதனையும் இருந்தாலும் நான் இப்போது குட்டியை ஈன்றெடுக்க வேண்டும். இதுவே என்னுடைய கடமை என்று எண்ணி, குட்டியை ஈன்றெடுக்கக் கூடிய செயலில் ஈடுபட்டது. இதை கவனித்த வேடன் மானை விட புலியை வேட்டையாடுவது சிறந்தது என்று கருதி, மானை விட்டுவிட்டு புலியை நோக்கி அம்பு எய்தான். புலி இறந்துபோனது. பெருக்கெடுத்த வெள்ளம் பற்றி எரியும் காட்டுக்குள் புகுந்து காட்டுத் தீயை அணைத்தது. தன் வேலையை செய்து முடித்த அந்த மானானது அழகிய குட்டியை ஈன்றது. முற்றிலும் துன்பங்கள் சூழ்ந்து இருந்தபோதும் அந்தமான், தன்னுடைய கடமை எது என்பதை உணர்ந்து அக்கடமையைச் செய்ய முயன்றதோ அது போலத்தான் இந்த உலகத்தில் பலவிதமான இன்னல்களும் இடையூறுகளும் சூழ்ந்து இருந்தபோதும் கூட இயேசு தன்னுடைய பணி எது என்பதை அறிந்தவராய், தனது பணியை முன்னெடுத்துச் சென்றார், இந்தச் சமூகத்தில். அவரைப் போலவே அவரது சீடர்களும் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அழைக்கப்பட்டார்கள். அவர்களும் அவர்களும் அப்பணியை சிறப்பாகச் செய்தார்கள். இன்று அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நாமும், அத்தகைய பணியை சிறப்பாக செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகம் இன்று நம் நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை படம் பிடித்து காட்டுவது போல அமைந்திருந்தது. எங்கு பார்த்தாலும் துன்பங்கள். மக்கள் எல்லோரும் சிதறிப் விட்டார்கள். அனைவரும் ஓடிச்சென்று வீடுகளுக்கும் தங்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு தங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென மிகவும் கவனத்தோடு தனிமையில் இருக்கிறார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இறைவன் நமக்கு தரக்கூடிய செய்தி, அஞ்சாதீர்கள் துணிவோடு இருங்கள் என்பதாகும்! அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அறியாத மக்களை பவுல் தேடிச்சென்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அவர்களுக்கு அறிவித்தார்.
இன்று நாம் வாழும் உலகத்தில், பலவிதமான மனிதர்கள் நம்மைச் சுற்றிச் சூழ்ந்து இருந்தாலும், நம்பிக்கையோடும் துணிவோடும் நாம் நமது கடமைகளைச் செய்ய அழைக்கப்படுகிறோம்.
நமது கடமைகள் என்றால் என்ன? என சிந்திக்கும் போது, இந்தச் சமூகத்தில் இயேசு எத்தகைய மனிதராக நாம் வாழ வேண்டும் என, நமக்கு வாழ்ந்து காட்டினாரோ? அவரைப் போல வாழ்வது தான், நமது கடமையாக இருக்க வேண்டும். இன்று தேவையின் மத்தியில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் தேவையில் உதவக் கூடியவர்களாக நாம் இருக்கலாம். அறியாமையில் இருப்பவர்களுக்கு அறிவைப் புகட்டும் பணியைச் செய்யலாம். வீடுகளுக்குள் முடங்கி இருந்தாலும், கொடிய
தொற்று நோய் நம்மை எல்லாம் தனிமைப்படுத்தி இருந்தாலும், இந்தத் தனிமையில் நம்பிக்கை இழந்து வாழக்கூடிய மக்களுக்கு, நம்பிக்கையை கொடுக்கக்கூடிய பணிகளை நாம் செய்ய வேண்டும். எப்படி அன்று இயேசுவை பற்றி அறியாத மக்களுக்கு, மக்களைத் தேடிச் சென்று ஆண்டவர் இயேசுவை பற்றி பவுல் அறிவித்தாரோ, அதுபோல இன்று நாம் வாழும் சமூகத்தில் இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அச்சத்தோடும், பயத்தோடும், தனிமையிலும், தேவையிலும் வாழக்கூடியவர்களை இனம் கண்டு கொண்டு, அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்பவர்களாகவும் அவர்களுக்குத் துணிவு தரக் கூடியவர்களாகவும் அவர்களுக்கு நமது உடனிருப்பால் ஆறுதல் தரக்கூடியவர்களாகவும், நாம் இச்சமூகத்தில் இயேசுவின் இறையாட்சி பணியினை செய்திட இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். எனவே இக்கட்டான சூழ்நிலைகளை கண்டும், தொற்றுநோய் கண்டும், அச்சம் மனதில் இருந்தாலும், துணிவை கைவிட்டு விடாது, துணிவோடு அனைத்தையும் எதிர்கொண்டு, வாழ்வில் வெற்றியடைய, அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்றிட, இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
அஞ்சாதீர்கள். துணிவோடு இருங்கள்.. 🙏
பதிலளிநீக்கு