ஞாயிறு, 2 மே, 2021

கடவுளைக் கண்டுகொள்ள ...(3.5.2021)

கடவுளைக் கண்டுகொள்ள ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
            ஒரு சிறிய வீட்டில் ஒரு தாயும் அவருடைய சிறு வயது மகனும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் மகன் தாயை பார்த்து, அம்மா! கடவுள் நம்மோடு பேசுகிறார், நாம் சொல்வதை எல்லாம் கேட்கிறார் என்று சொல்கிறார்களே, அந்த கடவுளை இன்று நான் காண வேண்டும். இன்று நான் அவரோடு பேச வேண்டும் என்று கூறுகிறான். மேலும் தாயைப் பார்த்து, அம்மா! எனக்கு இன்று மதிய உணவு கட்டிக் கொடுங்கள். நான் சென்று எவ்வளவு நேரம் ஆனாலும் கடவுளை சந்தித்துவிட்டு வருகிறேன் என்று கூறினானாம். உடனே அந்தத் தாயும் அந்த சிறு வயது மகனுக்கு மதிய உணவை தயார் செய்து கொடுத்தார். அந்த உணவைப் பெற்றுக் கொண்டு கடவுளைத்தேடி சிறுவன் நடக்க ஆரம்பித்தான். அங்கே ஒரு பூங்கா இருந்தது அந்த பூங்காவில் பல வகையான நபர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் இங்கு ஒரு வேளை கடவுள் இருக்கலாம் என்று எண்ணிய அந்த சிறுவன் பூங்காவிற்குள் நுழைந்தான். சற்று தூரம் நடந்து சென்று கடவுளின் முகம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே நடந்தான். அவன் பூங்காவிற்கு வந்த நேரம் மதிய வேளையாகி இருந்ததால் அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது. உடனே அங்கிருந்த புல்தரையில் அமர்ந்து தனது உணவை பிரித்தான். அப்போது அவனுக்கு அருகிலேயே ஒரு வயதான முதியவர் வந்து அமர்ந்தார். அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார்.  சிறுவனும் அந்த பெரியவரை பார்த்து புன்னகைத்தான். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டு உரையாட ஆரம்பித்தார்கள். சிறுவனும் தன்னிடம் இருந்த உணவில் ஒரு பகுதியை அந்த பெரியவருக்கு கொடுத்தவனாக, இருவரும் உணவைப் பகிர்ந்து கொண்டார்கள்.  பின்னர் அன்போடும் அக்கறையோடும் மகிழ்வோடும் ஒருவருக்கொருவர் மாலை வரை உரையாடிக் கொண்டே இருந்தார்கள். உள்ளத்தில் மகிழ்ச்சி மிகுந்தவர்களாக தம்தம் வீடுகளை நோக்கி திரும்பினார்கள். ஒவ்வொரு நாளும் விளையாடிவிட்டு வரும் தன் மகன் இன்றும் வந்துவிடுவான் என்று ஆர்வத்தோடு தாய் பாதையில் தன் கண்களைப் பதிய வைத்தாள். மிகுந்த மகிழ்ச்சியோடு  ஓடி வந்த சிறுவன், தன்னுடைய அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு, இவ்வாறு கூறினான், அம்மா! இன்று நான் கடவுளைப் பார்த்தேன். அவர் எவ்வளவு பெரியவராக இருக்கின்றார்! அன்போடு பேசுகின்றார்! அழகாக சிரிக்கிறார்! அவரோடு இருப்பதில், உரையாடுவதில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை என்று மிகுந்த உற்சாகத்தோடு சிறுவன் தாயைப் பார்த்துக் கூறினான். 
          அதேவேளையில் தன்னுடைய வீட்டுக்குச் சென்று தன் மனைவியை சந்தித்த அந்த முதியவர் தன் மனைவியிடம் தான் இன்று கடவுளைக் கண்டதாக கூறினார். அந்த கடவுள் எவ்வளவு சிறு வயதினராக இருக்கிறார்! எவ்வளவு உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் தன்னைச் சுற்றி இருக்கும் இடத்தில் அன்பின் அலைகளை பரவ விட்டுக் கொண்டிருக்கிறார்! இன்று தான்  உண்மையில் தான் கடவுளை கண்டு மகிழ்ந்ததாக அந்த முதியவர் தன் மனைவியிடம் உற்சாகத்தோடு தன்னுடைய அன்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
                          ஆம்! அன்புக்குரியவர்களே! இன்று தாய்த் திருஅவையாக நாம் அனைவரும் இணைந்து புனித பிலிப்பு யாக்கோபு என்ற திருத்தூதர்களின் திருவிழாவினை சிறப்பிக்கின்றோம். இந்த திருத்தூதர்களிடமிருந்து நாம் நமது வாழ்வுக்கான பாடங்களை கற்றுக்கொள்ள இயலும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் பிலிப்பு இயேசுவிடம் தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று கேட்கிறார். இயேசு அவரைப் பார்த்து இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ள வில்லையா? என்று கேட்கிறார். என்னை அறிந்தவன் தந்தையை அறிந்துள்ளான் என்று சொல்கிறார். 
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் பலவிதமான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நம்மில் பலருக்கு இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. அப்துல் ரகுமான் அவர்கள், கடவுளே நீ எங்கே இருக்கிறாய்? என்று ஒரு கவிதையை எழுதினார். அந்தக் கவிதையில் கடவுளிடம் பலவிதமான கேள்விகளை அவர் தொலைபேசி வழியாக கேட்கிறார். ஆனால் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலேயே இணைப்பு துண்டிக்கப்படுவதாக அவரது கவிதை வரிகள் அமைகின்றன. இன்று மனித மனங்கள் பெரும்பாலும் கடவுளைக் காண வேண்டும் என்று எண்ணுகின்றன. கடவுள்  எங்கே  காண்பது என்ற கேள்வி உங்களுள்ளும் இருக்குமாயின், அதற்கு விடை தரும் வகையில் தான் இன்றைய நற்செய்தி வாசகம் அமைகிறது. என்னை அறிந்தவன் தந்தையை அறிந்தவன் என்கிறார் இயேசு. நாம் வாழும் சமூகத்தில் நம் அயலானை நாம் அறியும்போது நாம் கடவுளை அறிந்தவராக மாறுகிறோம்.  கிளாரா லூயி என்ற பெண்மணியானவள் அழகாகக் கூறுவார்,  கடவுளை நாம் அறிய வேண்டுமென்றால், உன் அயலானை நீ அறிய வேண்டும் என்பார். இன்று நாம் வாழும் சூழலில் நமது அருகில் இருக்கக்கூடிய மனிதர்கள் கடவுளின் சாயலில் உள்ளனர்.  கடவுள் இந்த உலகில் பல வகையான மனிதர்கள் வழியாகத்தான் செயல்படுகிறார். நேரடியாக இறங்கி வந்து துன்பத்தில் துணை நிற்பவர் அல்ல இறைவன். மாறாக பல மனிதர்கள் வழியாக துணை நிற்பதற்கு நம்மிடம் வருகிறார். வரக்கூடிய நபர்களை நாம் கடவுளென கண்டு கொள்ள மறுக்கிறோம். பல நேரங்களில் பலரை நமது தேவைகளுக்கு நாம் பயன்படுத்திவிட்டு, அதன்பின் விட்டுவிட்டுச் செல்லக் கூடியவர்களாகத்தான் பல நேரங்களில் நாம் இருக்கிறோம். நாம் அடுத்தவரை, அவருக்குள் உறைந்து இருக்கக்கூடிய கடவுளை கண்டுகொள்ள இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். பிலிப்பு தந்தையாம் இறைவனை பார்க்க வேண்டும் என எண்ணிய போது, என்னை அறிந்தவன் தந்தையை அறிந்தான் என்ற வார்த்தைகள் வழியாக கடவுளை மனிதர்களிடத்தில் காண வேண்டும் என்ற செய்தியினை இரத்தினச் சுருக்கமாக பிலிப்புவிற்கு இயேசு எடுத்துரைத்ததைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். இன்று நாம் நினைவு கூரக் கூடிய இந்த புனிதர்கள் இருவருமே இயேசுவின் வழியாக இறைவனை கண்டார்கள். தாங்கள் கண்டு கொண்ட இறைவனை சக மனிதர்களிடத்திலும் காண முற்பட்டார்கள். எனவே தான் நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபட்டு பலவிதமான இன்னல்களை சந்தித்து ஆண்டவர் இயேசுவுக்காக மரணத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டார்கள்.  நாம் நமது அருகில் இருக்கக்கூடிய நபர்களை கடவுளாக பார்க்க எண்ணும்போது நம்மிடையே போட்டி, பொறாமை, தேவையற்ற தவறான எண்ணங்கள், அடுத்தவரின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய எண்ணங்கள் என அனைத்தும் மறைந்துபோகும். எனவே நம் அருகில் இருக்கக்கூடிய நபர்களிடத்தில் கடவுளை கண்டு கொள்ள முயலுவோம். கடவுளை கண்டுகொள்ளும் போது நம்மிடம் பலவிதமான மாற்றங்கள் உருவாகின்றன. அந்த மாற்றங்களைக் கண்டு கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம், நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் நீங்கள்  மீட்பு அடைவீர்கள் என்று பவுலடியார் கொரிந்து நகர மக்களுக்கு குறிப்பிடுகின்றார்.  

                       இன்று அதே வார்த்தைகளைத்தான் இறைவன் இன்று நமக்கும் கூறுகிறார்.   வார்த்தைகள் வழியாக இறைவன் நம்மோடு உரையாடுகிறார். பிலிப்பை போல சக மனிதர்களிடத்தில் கடவுளை கண்டு கொள்ள இறைவன் இன்று நம்மை அழைக்கிறார். இறைவனது வார்த்தையை கடைபிடித்து வாழும் போது நாம் இச்சமூகத்தில் உண்மையான இறைவனை கண்டு கொண்ட நல்ல மனிதர்களாக அவருக்கு சாட்சியம் பகரும் சீடர்களாக வாழமுடியும். எனவே நாம் சக மனிதர்களிடத்தில் கடவுளைக் கண்டுகொள்ள இறையருளை வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து ஜெபிப்போம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...