சனி, 15 மே, 2021

புது மனிதனாக பிறப்போம் ...(16.5.2021)

புது மனிதனாக  பிறப்போம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்று நாம் அனைவரும் தாய்த்திரு அவையாக இணைந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்பு பெருவிழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளிலே உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.



ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திலே மிகவும் கொடூரமான ஒரு மனிதன் இருந்தான்.  உலகத்தில் சொல்லக்கூடிய அத்தனை தீய பழக்கங்களையும் கொண்டிருந்தவன். அவன் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அதே காட்டுப்பாதையில் எதிர்முனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் நடந்து வந்தாள். நடுக் காட்டை அடைந்தபோது அவளுக்கு பேறுகால வலி வந்தது. துடிதுடித்தவளாய், என்ன செய்வது? என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமைதியின்றி நிலை தடுமாறி விழுந்தாள். பிரசவ வலி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். யாராவது வந்து நம்மை காக்க மாட்டார்களா? என்ற நினைப்போடு வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்ணில் பட்டது,  இந்த சமூகத்தால் அயோக்கியன் என கருதப்பட்ட அந்த  கொடூர மனிதன் மட்டுமே. இவனையா நான் பார்க்கவேண்டும்!  இவன் எப்படி எனக்கு உதவி செய்வான் என்று அந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஒருபுறம். மறுபுறமோ வலியும் வேதனையும். துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.  அவ்வழியே வந்த அந்த கொடூர குணம் கொண்டவன் அந்தப்பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் துடிப்பதை சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய கைலியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இதற்கு முன்பு வரை அவன் அவ்வாறு செய்ததே கிடையாது. இவனுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. இருந்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான்.  குழந்தையை கையில் எடுத்தான். தான் கையில் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய கூரிய கத்தியை எடுத்து, தொப்புள் கொடியை வெட்டினான்.  இதற்கு முன்பு வரை இவன் அப்படி செய்ததே கிடையாது.  ஆனால் அதை அன்று அவன் செய்தான். அதன் பிறகு தாய் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருக்கும் போது, ஓடிச்சென்று அருகிலிருந்த ஒரு குட்டையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தான். அந்த தாயின் வாயில் அந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தான். அவளது கை சட்டையை சற்று விலக்கி குழந்தைக்கு உணவருந்தும் வகையில் அந்த குழந்தையை அப்பெண்ணின் மார்பகம் பக்கம் வைத்தான். 

வால்ட் விட்மன் எழுதிய இந்த கதைக்கு ஒரு மனிதன் பிறந்தான் என பெயர் வைத்தார்.



 ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக பிறந்து  வாழ்ந்த போது நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு கற்பித்தார். அவர் இம்மண்ணில் நடமாடிய போது மட்டும் அதை செய்யவில்லை. அவரை சூழ்ச்சியின் காரணமாக சிலுவையில் அறைந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கவிடப்பட்ட நிலையில் தன்னுடைய இன்னுயிரை இறைவனிடத்தில் தியாகம் செய்து இறந்து போனார். இறந்த இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த இயேசு நாற்பது நாட்களாக சீடர்களோடு இருந்து அவர்கள் என்ன செய்யவேண்டும்? எப்படி வாழவேண்டும்? என்பதை இறந்தும் உயிர்த்து அவர்களுக்குக் கற்பித்தார். கற்பித்துவிட்டு அவர்களை விட்டு விண்ணகம் ஏறிச் சென்றார்.  இதையே இன்றைய நாளில் நாம் அனைவரும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.  ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லிச் சென்றவர் மட்டும் அல்ல இந்த இயேசு கிறிஸ்து. தான் சொன்னதை தன் வாழ்வாக மாற்றியவர். வாழ்ந்து காட்டிய ஒரு முன்மாதிரி. முன்னுதாரணமாகத் திகழக் கூடிய நபர் இவர். இந்த ஆண்டவர் இயேசுவைப் பற்றிய, இவர் கற்பித்தவைகளை எல்லாம் கேட்ட நாம் எப்படி செயல்படுகிறோம் என்று  சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு பலவற்றைச் சொல்லிக் கொடுத்துவிட்டு விண்ணகம் ஏறிச்சென்ற இயேசு விண்ணகம் சென்ற போது நிமிர்ந்து அண்ணாந்து வானத்தை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள் அப்படியே நின்றார்கள். இன்று நம்மில் பலரும் இந்தச்  சீீீீடர்களைப் போல, இயேசு எப்படி வாழ வேண்டும் என சொல்லி கொடுத்தாரோ அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க கூடியவர்களாக இருக்கிறோமே   தவிர,  செயலில் ஈடுபட மறுக்கின்றோம். ஆனால் நாம் வெறுமன சீீடர்களைப்  போல விண்ணகத்திற்கு ஏறிச் சென்ற இயேசுவை பார்த்துக்கொண்டிருந்த  வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த சீடர்களை போல அல்லாமல், அதாவது இயேசு அறிவித்த  வார்த்தைகளை வெறுமனே கேட்டுக் கொண்டே இருப்பவர்களாக  நாம் இல்லாமல் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்களாக மாற வேண்டும். 
                 இதையே இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் 
                                எபேசியர் 4:1
என்கிறார்.  எப்படி எல்லாம் ஒரு மனிதன் வாழ வேண்டும் எனச் சொல்லி கொடுத்தாரோ அதை எப்படி வாழ்ந்து காட்டினாரோ, அவரைப் பின்பற்றுகிற நாமும் அவரைப்போல் இச்சமூகத்தில் வாழ வேண்டும்.  ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அன்பு செய்ய வேண்டும். இறைவார்த்தையின் வழியில் நமது  வாழ்வானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நகரவேண்டும். இதைத் தான் இந்த ஒரு வாரம் முழுவதுமாக பலவாறு இறை வார்த்தைகள் வழியாக சொல்லிக் கொண்டிருந்தார். இதைத் தான் இறைவன் இம்மண்ணில் வாழ்ந்த போதும், இறந்து உயிர்த்த போதும் தன் சீடர்களுக்குச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு அதன்படி தொடர்ந்து செயல்படக் கூடியவர்களாக அவர்கள்  மாறினார்கள். எனவே அவர்களை இன்றும் நாம்  நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். பொதுவாகவே இறைவார்த்தையின் அடிப்படையில்  இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.  என்று சொல்லும்போது இயல்பாக நமது உள்ளத்தில் வரக்கூடிய கேள்வி அவர் என்னப்பா சொல்லிட்டு போயிட்டாரு இதெல்லாம் சாத்தியமாகுமா? என்ற கேள்வி வரும். இறைவனைப் போல் இச்சமூகத்தில் நாம் வாழ முடியும். அதற்கு ஒரு முன்னுதாரணம் தான்இயேசுவைப் பின்பற்றி இச்சமூகத்தில் வாழ்ந்த திருத்தூதர்கள் ஒவ்வொருவருமே. திருத்தூதர்கள் இயேசு கூடவே இருந்தாங்க. அதனால அவங்களால் வாழ முடிஞ்சுச்சு. நம்மலால முடியுமா என்ற இயல்பான கேள்வி நமது உள்ளங்களில் வந்து போகலாம். வருவதில் தவறில்லை ஆனால் அந்தக் கேள்விக்கும் விடை உண்டு. நம்மால் ஆண்டவர் இயேசுவைப் போல இச் சமூகத்தில் வாழ முடியும். நம் கண்முன்னே அப்படி வாழ்ந்த மனிதர்கள் பலர் உண்டு. நாம் அனைவரும் அறிந்த அன்னை தெரசா அவர்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளை அள்ளி எடுத்தார். தொழுநோய் என தொட மறுத்து ஒதுங்கி நின்ற சமூகத்தில் அவர்களை அரவணைக்க கூடிய பணியைச் செய்தார். நமது காலகட்டத்தில் நமது வீட்டில் உள்ள மூத்தவர்கள் அறிந்திருப்பார்கள், அவர்களின் காலகட்டத்தில் வாழ்ந்த அன்னை தெரசாவை. எப்படி இந்த அன்னையால் இந்தப் பணியைச் செய்ய முடிந்தது? ஏனென்றால் அவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பினார். அவரைப்போல இவ்வுலகில் வாழ வேண்டும் என எண்ணினார். தனது எண்ணத்தை தனது செயலால் வெளிக்காட்டினார். இன்று நாமும் எண்ணுகிறோம் ஆனால் செயலில் வெளிக்காட்ட தவறுகிறோம். பல நேரங்களில் நம்மால் முடியாது என்று தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் நம்மால் செய்ய முடியுமா? இயேசுவைப்போல இச் சமூகத்தில் வாழ முடியுமா? நம்மளால எல்லாம் முடியாது பா, என்று சொல்லி விட்டு ஒதுங்க கூடியவர்களாக நாம் இருக்கிறோம். 
           நமக்கு ஒரு துன்பம் வந்து விட்டதே என்று நாம் கலங்கும் போது அடுத்தவர் யாரேனும் வந்து நமக்கு உதவி செய்ய மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கின்றோம்.  மற்றவரின் உடனிருப்பையும் பராமரிப்பையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கும் நாம்,  அடுத்தவரின் துன்பத்தில் அதனை மற்றவருக்கு செய்ய முன்வருகிறோமா? அல்லது நம்மை கேட்டால் அது பற்றி யோசிப்போம் என்று நமக்குள் எண்ணுகிறோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்ப்போம். நாம் இச்சமூகத்தின் நிகழ்வுகளையும் நடைமுறைகளையும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக அல்ல மாறாக களமிறங்கி பணியாற்றும் பங்கேற்பாளர்களாக நாம் வாழவே இறைவன் விரும்புகிறார்.

                       மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொல்லுவார், இந்த சமூகத்தில் நீ முடியாது என்று சொல்லக்கூடிய ஒவ்வொன்றையும் இந்த உலகத்தில் எங்கோ ஒருவர்யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். நம்மளால எல்லாம் போயி ஏழைகளை பார்க்க முடியுமா? அனாதைகளை பராமரிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பலாம். ஆனால் இதே பணியை இச்சமூகத்தில் நம்மைப் போல ஒருவன் செய்து கொண்டு தான் இருக்கிறான். ஏன்  அவனால் முடியும் போது நம்மால் செய்ய முடியாது? நாம் முயற்சிப்பது இல்லை.  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதநேயம் என்பதும் இயேசுவின் வார்த்தைகளும் ஆழமாக பதிந்து இருக்கின்றன. அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்மிடம் இருக்கிறது. அதை உணர்ந்து நாம் செயல்பட துவங்கும் போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் உண்மை சீடர்களாக இந்த சமூகத்தில் நாம் வலம் வர முடியும். 

          இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. எதையும் நம்மால் செய்ய முடியாது எனச் சொல்வதைவிட, நாம் முயலவில்லை என்பதை உணர்ந்து கொள்வோம். நம்மால் முடியும் என நாம் நம் மேல்  நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் கொள்கின்ற நம்பிக்கை நமது செயலில் வெளிப்பட வேண்டும். நான் இத்தகைய பணிகளை முன்னெடுக்கும் போது இந்த சமூகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய, மதிப்பீடுகளின்படி இச்சமூகத்தில் நாம் வாழ வேண்டும் என்றால், விருப்பு-வெறுப்பு வேறுபாடுகளை கடந்து ஒருவர் மற்றவரை அன்போடும் பாசத்தோடும் நேர்மையான உள்ளத்தோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சமூகத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டும். பாதிக்கப்படுபவனுக்கும் தேவையில் இருப்பவனுக்கும் துணையாளராக நாம் இருக்க வேண்டும். இதையெல்லாம் செய்வது சாத்தியமா என்ற கேள்வி உள்ளத்தில் எழுந்தாலும், இதனை நாம் செய்ய வேண்டும். இதைத்தான் ஆண்டவர் இயேசு சொல்கிறார், நீங்கள் படைப்பிற்கு எல்லாம் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நான் பறை சாற்ற வேண்டிய நற்செய்தி வெறுமனே இயேசுவை நம்புங்கள் அவரை போல வாழுங்கள் என்ற வார்த்தைகள் அல்ல. சொல்லிலும் செயலிலும் நாம் இயேசுவாக இச்சமூகத்தில் பிரதிபலிக்க வேண்டும். அப்படி நாம் பிரதிபலிக்கின்ற போதுதான்உண்மையாலுமே இயேசுவை படைப்பிற்கெல்லாம் அறிவிக்கின்ற சீடர்களாக நாம் இருக்க முடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நம்மிடையே கூறுகிறார். 

                     இன்று ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைந்த நாளை நாம் நினைவு கூறுகிறோம். இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டு தந்தையிடம் சென்று இருக்கிறார். ஏன் சென்றார்? நம்மை நம்பினார். தான் கற்பித்த வாழ்ந்து காட்டிய அனைத்தையும் இவர்கள் வாழ்வில் பிரதிபலிப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அடுத்தவருக்காக அடுத்தவரின் நலனுக்காக என்னை போல இவர்களும் தம்மையே கையளிப்பார்கள், என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் எப்போதும் நமக்குள் இருந்து நம்மை நேர்மையாளர்கள் ஆகவும் நீதிமான்கள் ஆகவும் மனிதநேயமிக்க மனிதர்களாகவும் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என்பதை நமக்குள் இருந்து உணர்த்துவதற்காக தூய ஆவியாரை நம் மீது பொழிந்து அருளி விண்ணகம் சென்று தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் நம்மை நம்பினார். அவரைப் போல நாம் அடுத்தவர் நலனை முன்னிறுத்தி வாழக் கூடியவர்களாக இருப்போம் என நம்பிக் சென்றார். அவரைப் பின்பற்றி வாழக்கூடிய நாம் ஒவ்வொருவரும் வார்த்தைகளால் அல்ல செயலால் அவரை இச்சமூகத்தில் பிரதிபலிப்போம். அவரைப்போல நாமும் இந்த உலகத்தில் அடுத்தவர் நலனுக்காக வாழ முயற்சி எடுப்போம். இதுவரை இந்த சமூகத்தில் சொல்லப்பட்ட அனைத்து விதமான தீங்குகளையும் செய்யக் கூடியவராக நாம் இருந்தாலும் மனம் மாறுவதற்கான தருணம் இது. இது என்னால் முடியாது என ஒதுங்கி விடாமல்,  நம்மால் முடியும் என்ற எண்ணத்தோடு ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் தொடர்ந்து பயணிப்போம் அடுத்தவர்களை ஏற்றுக்கொண்டவர்களாய். அதன் வழி படைப்பிற்கு எல்லாம் நமது சொல்லாலும் செயலாலும் நற்செய்தியை பறைசாற்றுவோம். 
    
ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்கம் பெறும்போது தான் நாம் இம்மண்ணிலே இயேசு விரும்பிய மனிதனாக பிறக்கின்றோம். இதுநாள் வரை நாம் இவற்றை எல்லாம் செய்யாது இருந்தாலும் இனி வருகின்ற நாட்களில்இயேசுவின் வார்த்தைகளை நமது வாழ்வில் வெளிக்காட்டி இன்று முதல் புதிய மனிதர்களாக இச்சமூகத்தில் பிறந்திட அவரின் வார்த்தைகளை வாழ்வாக்கிட இறையருளை வேண்டுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...