இணைந்து கனி தருவோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று நாம் வாசிக்க கேட்ட முதல் வாசகத்தில் கருத்து வேறுபாடுகள் இயேசுவின் சீடர்களுக்கு மத்தியில் இருந்தது. கருத்து வேறுபாடுகளின் போது அவர்களுக்குள் விவாதங்கள் ஏற்பட்டன. அந்த விவாதங்களை சரி செய்து கொள்ள அவர்கள் மற்ற திருத்தூதர்களின் உதவியை நாடுகிறார்கள். அவ்வாறு நாடி அனைவரும் இணைந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் கருத்து வேறுபாடுகளின் காரணமாக நம் உறவுகளை சிதைத்துக் கொண்டே செல்கிறோம்.
ஒரு வீட்டில் அப்பா இருந்தாராம். அந்த அப்பாவுக்கு தன்னுடைய மகன் மேல் எப்பொழுது பார்த்தாலும் ஒரு கோபம். ஏனென்றால் மகன் எப்பொழுது பார்த்தாலும் அலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே இருந்தான். சுடுறா சுடுறா அடிடா அடிடா என்று எப்பொழுது பார்த்தாலும் கத்திக் கொண்டே இருந்தான். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த அப்பாவுக்கு அதிகமதிகமாக எரிச்சல் வந்தது. வெறுத்துப் போன அப்பா, இனிமேல் நீ அலைபேசியை தொட்டால் அடி வாங்குவாய் என்று கூறிவிட்டு தொலைபேசியை வாங்கி மேசைமேல் வைத்துவிட்டு மகனை நோக்கி தொலைக்காட்சிப் பெட்டியில் நல்லதொரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, அதனை பார்க்கலாம் என்று அழைத்தார். மகனும் அப்பாவுடன் சென்று அமர்ந்தான். அப்பொழுது அப்பாவினுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்தது. உடனே அப்பா அலைபேசியை எடுத்துக்கொண்டு மாடியை நோக்கி சென்றார். உடனே மகன், ஏன் அப்பா மாடிக்கு செல்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு அப்பா, கீழே சரிவர டவர் கிடைக்காது. அதனால் மாடிக்கு செல்கிறேன் என்று சொன்னார். நீங்கள் மாடிக்கு சென்றாலும் உங்களுக்கு டவர் கிடைக்காது அப்பா என்றான். உடனே அப்பா மகனைப் பார்த்து ஏன் மகனே? என்றார். மகன் கூறினான், அப்பா நீங்கள் கையில் எடுத்துச் செல்வது டிவி ரிமோட். அதற்கு நிச்சயம் மாடியில் டவர் கிடைக்காது என்று கூறினான். அப்பா தன்னிலை உணர்ந்தவராக, சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வந்து தனது அலைபேசியை மீண்டுமாக எடுத்து பேசச் சென்றார்.
இன்று பெரும்பாலான வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதுபோல கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.பல குடும்பங்களில் பெற்றோர் தங்களது விருப்பு வெறுப்புகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இந்த சமூகத்தில் நாம் சந்திக்கக் கூடிய ஒவ்வொரு மனிதருமே தனித்துவமானவர்கள். தனித்துவமான ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு விதமான கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்கள் கருத்துக்களையே அனைவரும் உள்வாங்க வேண்டும் என எண்ணுவதால் தான் சமூகத்தில் எப்போதும் ஒரு இக்கட்டான இடர்பாடான நெருடலான முரண்பாடான சூழ்நிலை நிலவி கொண்டே இருக்கிறது. நாம் கருத்து வேறுபாடுகளைக் கொண்டு உறவுகளை சிதைத்து விடாமல், ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித சிந்தனை கொண்டவர்கள், என்பதை புரிந்து கொண்டு இந்த உலகத்தில் பயணிக்கும் போது உறவுகளோடு இணைந்து வாழ முடியும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் நாம் அவ்வாறு வாழ்வதில்லை. மாறாக கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்கும்போது அடுத்தவரை பழி வாங்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அடுத்தவரை மட்டம் தட்டக்கூடிய செயல்களிலும் தான் அதிகம் ஈடுபடுகிறோம். நாம் சொல்லும் கருத்தை ஒருவர் ஏற்க மறுக்கிறார் என்றால் அவரோடு நமக்கு இருக்கக்கூடிய உறவை சிதைத்து விட்டு துண்டித்து விடக் கூடியவர்களாகத் தான் பெரும்பாலும் நாம் இருக்கிறோம். ஆனால் தொடக்க காலத்தில் இயேசுவின் செய்தியை அறிவித்த சீடர்கள், தங்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது மூத்தவர்களின் உதவியை நாடுவது போல, பிற திருத்தூதர்களின் உதவியை நாடினார்கள். அவர்களோடு கலந்து பேசி, உறவை துண்டித்துக் கொள்ளாமல் கருத்துத் தெளிவு பெற்றார்கள்.
இன்று நாம் வாழும் இந்த சமூகத்திலும் இவ்வாறு வாழவே நாம் அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறை வார்த்தைகள் அனைத்தும் இணைந்து இருப்பதை மையப் படுத்துகின்றன. நாம் இறைவனோடு இணைந்து இருக்க வேண்டும் என்றால், அதற்கு சக மனிதர்களோடு தான் இணைந்து இருக்க வேண்டும். மனிதரோடு இணைந்து வாழ்வதில் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தடையே கருத்துச் சார்பு. நம் எண்ணங்களை அடுத்தவர் மீது திணிப்பதை நிறுத்திவிட்டு, அடுத்தவரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கவும், அவர்களின் எண்ணங்களுக்கு மரியாதை கொடுக்கவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். மற்றவரின் கருத்துகளை மதிக்கும் போதும், அதனை சீர் தூக்கிப் பார்க்கும் போதும், நமது அறிவும் விசாலப்படுகிறது. நமது உறவுகளும் வலுப்படுகின்றன. எனவே
நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.
யோவான் 15 : 8
என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப நமது குடும்பங்களில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளையும் கருத்து சிக்கல்களையும், பெரிதுபடுத்தாமல், மற்றவரின் கருத்துகளை மதிப்பவரின் மனதில் உண்மையான அன்பில் மாற்றம் இல்லை என்பதை உணர்ந்தவர்களாக, நமது கருத்துகளை மற்றவர் மீது திணிக்க வேண்டும் என எண்ணாமல் அவர்களை அவர்களது நிலையிலேயே ஏற்றுக்கொண்டு நல்ல நட்புறவில் இணைந்து இருப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் அதற்கான இறையருளை இறைவன் அருள்வார் என்ற நம்பிக்கையோடு நல்லுறவில் இணைந்திருப்போம்! கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளியவர்களாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக