அன்னைக்கு தெரியாதது எதுவும் உண்டா?
இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் அனைத்து சலேசிய துறவற சகோதரருக்கும், தந்தையர்க்கும், சகோதரிகளுக்கும் இன்றைய நாளில் விழா வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்....
தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்.
கடவுள் இந்த பூமிக்கு வருவதில்லை. அவருக்கு பதிலாகத் தான், அவர் தாயை அனுப்பி வைத்திருக்கிறார் என்பார்கள்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பார்கள்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். மாதா என தாயையே முன்னுரிமைப்படுத்துகிறோம்.
இந்த சமுதாயத்தில் ஒரு குழந்தையை உருவாக்கும் பணியை செய்பவள் ஒரு தாய். பெற்றெடுத்த தன் பிள்ளையை, பேணி வளர்க்கிறாள். அவர் தன் குழந்தைக்கு நல்லவை அனைத்தையும் செய்து தருகிறாள். குழந்தை வளர்ப்பில் தன்னை முழுவதுமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள்.
நாம் பிறப்பதற்கு முன்பாகவே தான் திரும்பிப் படுத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ? என எண்ணிக் கொண்டு, தனது சுய விருப்பு வெறுப்புகளையும் சுகங்களையும் ஓரம் தள்ளி, நமக்காக அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தியாக உள்ளம் கொண்டவள் தான் இந்தத் தாய். இவ்வாறு தாய்மையைப் பற்றி நாம் புகழ்ந்து கொண்டே செல்லலாம். கவிஞன் ஒருவன் எழுதினான், அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நீ எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும். ஏனென்றால், என்னை நீ சுமந்தது போல உன்னை நான் சுமக்க வேண்டும் தாயே என எழுதி வைத்தான். ஒரு குழந்தையை வைத்து அதன் பெற்றோரை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த வகையில் இயேசுவின் செயல்பாடுகளுக்கு முழு முதல் காரணம் அவரது தாய் என்றால் அது மிகையாகாது. தாய்க்கு அனைத்தும் தெரியும். தன் குழந்தை தன்னிடம் பொய் உரைக்கிறதா? அல்லது உண்மை பேசுகிறதா? என்பதை தாய் உடனே கண்டு பிடித்து விடுவாள். இருந்தபோதும் அதை வெளியே காட்டி கொள்ள மாட்டாள். தனக்கு வயிறார உண்பதற்கு உணவு இல்லை என்றாலும், தன் குழந்தை வயிறார உண்பதைக் கண்டு நிறைவு காண கூடியவள் தான் தாய். எனவேதான் இந்த தாயை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிடுகிறார்கள்.
இவ்வாறு பலர் தாயை பற்றி புகழ்ந்து கூறினாலும், இந்த புகழ்ச்சி திருஅவையிலும் இருக்கிறது. திருஅவையின் தாயாக அன்னை மரியாள் விளங்குகிறாள்.
திருஅவையை வழிநடத்தும் நம் தாய் அன்னை மரியாவும், நம் அனைவரின் தேவையை அறிந்தவராக இருக்கிறார். நமக்காக இறைவனிடத்தில் எப்போதும் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார், என்ற நம்பிக்கையில் தான் இன்றும் திருஅவை அவரை முதன்மையாகக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் தவறிழைத்த முதல் பெற்றோர் தாங்களுள் யார் தவறு செய்தார் என்பதை இறைவன் அறிய மாட்டார்? என்ற எண்ணம் கொண்டு இருந்ததனால் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்த தொடங்கினார்கள். என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் என்று கூறியவன், நீர் கொடுத்த அந்தப் பெண் என்று கடவுளிடம் இந்தப் பெண்ணை தன்னிடமிருந்து தனிமைப்படுத்தி காட்டுகின்ற நிகழ்வை நாம் விவிலியத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஒரு தவறிழைக்கும் பொழுது அந்தத் தவறில் மாட்டிக் கொள்கின்ற சூழலில் அடுத்தவரை மாட்டிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள கூடிய பண்பு கொண்டவர்களாக பலநேரங்களில் நாம் இருக்கலாம். ஆனால் தவறு செய்தாலும் அதை நான் செய்தேன் என ஒப்புக் கொள்வதற்கு ஒரு துணிவு தேவை. அந்தத் துணிவை கற்றுத் தரக்கூடிய பணியை செய்பவளும் ஒரு தாயாகத் தான் இருக்க முடியும்.
பொய் சொன்னா அம்மாட்ட சொல்லிரு. அம்மா திட்ட மாட்டேன் அடிக்க மாட்டேன். ஆனா பொய் சொல்லக்கூடாது நீதான் இந்த தப்பை பண்ணினாயா? என்று அம்மா கேட்கும் பொழுது ஆம் என்று சொல்லி பல நேரங்களில் குழந்தைகள் தங்களது தவறை ஒப்புக் கொள்கிறார்கள். தவறுகளை ஒப்புக் கொள்ளக்கூடிய பண்புகளையும் கற்றுக்கொடுக்கும் இந்த தாயைப் போன்று தான் திரு அவையிலும் பலவிதமான
குழப்பங்களும், சந்தேகங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், நாம் செய்கின்ற செயல் சரியா? தவறா? என சீர்தூக்கிப் பார்த்து, தவறு என்றால் அதனை உணர்ந்து கொண்டு மனமுவந்து ஏற்றுக் கொண்டு, திருத்திக் கொண்டு பயணிக்க கூடிய பணியை இன்று திருஅவை செய்து கொண்டிருக்கிறது என்பதை வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இந்த போக்கை நமக்கு அன்னை கற்பித்தார் என்பதே நம் நம்பிக்கை.
ஒரு காலத்தில் மதத்தின் பெயரால் போரில் ஈடுபட்ட இதே கிறிஸ்தவ மதம் இன்று போர் தவறு என்பதை உணர்ந்து, மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, தன் தவறை திருத்திக் கொண்டிருக்கிறது. எப்படி ஒரு தாய் தன் குழந்தைக்கு பொய் சொல்லக்கூடாது ஒரு தவறை மீண்டும் செய்ய கூடாது என கற்றுக் கொடுத்தாரோ அதுபோல திருஅவையை அன்னை மரியாளின் பரிந்துரை செபமும், வழிகாட்டுதலும் நல் வழியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால்....
இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் அறிய மாட்டார் என எண்ணி முதல் பெற்றோர் ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறினார்கள். நாம் வாழும் இந்த உலகத்தில் நாமும் நாம் செய்வது யாருக்கும் தெரியாது என்று எண்ணிக் கொண்டு பல செயல்களை மறைமுகமாக செய்து வருகிறோம். ஆனால் அனைத்தையும் உற்று நோக்குபவர் இறைவன் என்பதை தான் இன்றைய நாளில் நாம் உள்ளத்தில் இருத்திக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. எப்படி அன்னைக்கு தெரியாமல் நாம் தவறிழைக்க தயங்குகிறோமோ, அதுபோலத்தான் நாம் ஆண்டவர் இயேசுவுக்கு எதிராக தவறிழைக்கவும் தயக்கம் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். சொல்லாலும் செயலாலும் ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த வாழ்வையே நாம் மேற்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுவே நமது வளர்ப்பின் அழகும், நமது வளர்ப்பின் முதிர்ச்சியுமாக கருதப்படுகின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் சீடர்கள் அனைவரும் இணைந்து செபித்தார்கள் என நாம் வாசிக்க கேட்டோம். நாமும் அவர்களை போல இணைந்து செபிக்க அழைக்கப்படுகிறோம். சீடர்கள் யாரும் இவர் யார்? அவர் யார்? யார் படித்தவர்? யார் படிக்காதவர்? என்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து அனைவரும் ஏற்றுக் கொண்டு இணைந்து ஜெபித்தார்கள். எப்படி ஒரு தாயானவள், 10 பிள்ளைகளைப் பெற்று இருந்தாலும்,அனைத்து பிள்ளைகளையும் ஒன்று என கருதுகிறாளோ, பத்து பிள்ளைகளையும் ஒரு பிள்ளை போலவே கருதி, ஒவ்வொருவரையும் எப்படி பாலூட்டி சீராட்டி வளர்த்தேடுக்கிறாளோ, அது போலத்தான் திரு அவையிலும் பல விதமான குளறுபடிகளும், பல விதமான மொழி பேசக்கூடிய மக்களும், பல விதமான கருத்துச் சிந்தனைகளை உடைய மக்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் இணைத்துக் கொண்டு சரியான பாதையில் பயணிக்க நமக்கு அழைப்பு தறப்படுகின்றது. இவ்வாறு நாம் செயல்படும்போது நாம் கடவுளிடம் இருந்து வந்தவர்களாக, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இச்சமூகத்தில் நாம் இருக்க முடியும். உருவகங்கள் வழியாக உரையாற்றிக் கொண்டிருந்த இயேசு ஒரு கட்டத்தில் உருவகங்களை நிறுத்திவிட்டு வெளிப்படையாகவே தவறை சுட்டிக் காண்பித்தார். சரியானதை எடுத்துரைத்தார். இன்று நாமும் வாழுகின்ற இந்த சமுதாயத்தில் எதையும் மறைத்து மறைத்து பேசுவதைவிட சரியை சரி எனவும், தவறைை தவறு எனவும் சொல்லுவோம். ஏனென்றால் நமது தாயான அன்னை மரியா நம்மை இத்தகைய பண்புபோடு வளர வேண்டுமெனவே நம்மை ஊக்கப்படுத்துபவராக இருக்கிறார். தொடக்ககால திருஅவையில் சீடர்களை ஒருங்கிணைத்த அன்னை மரியா இன்று நம்மையும் பாகுபாடுகளைக் கடந்து, நல்லவர் தீயவர் என அனைத்தையும் விலக்கி, அனைவரையும் தன் பிள்ளை எனக்கருதி நமக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுகிறார். அந்த அன்னை திருஅவையின் தாயாக இருந்து இத்திரு அவையை வழிநடத்துவதன் வழியாக நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துகிறார். அந்த அன்னையின் குரலுக்கு செவி கொடுத்து நாமும் ஒருவர் மற்றவரைை ஏற்றுக்கொண்டு, அந்த அன்னையிடம் காணப்பட்ட அனைத்து நற்பண்புகளையும், நமது நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு இச்சமூகத்தில் பயணிக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எனவே தாய்த் திரு அவையை வழிநடத்தக் கூடிய அன்னைை மரியாவை இன்றைய நாளில் மனதில் இருத்தி, அவரைப் போல எந்தவித எதிர்பார்ப்புமின்றி, அடுத்தவர் நலனைை முன்னிறுத்தி வாழுகின்ற நமது தெய்வங்களான தாய்மார்களைை மனதில் கொண்டு, அன்னை மரியாவை நோக்கி இன்றைய நாளில் நமது மன்றாட்டுக்கள் எடுத்துரைத்து அன்னையின் ஆசியைப் பெற்றுக் கொள்வோம். அடுத்தவருக்கும் பெற்றுத்தர முயலுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக