வெள்ளி, 7 மே, 2021

உன்னதமான எண்ணங்கள்! (8.5.2021)

உன்னதமான எண்ணங்கள்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
 ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தந்தையானவர் விட்டுச்சென்ற சொத்தாக ஒரு பசு மாடும், ஒரு போர்வையும் இருந்தது. அண்ணன் தம்பி இருவரும் அதனை சமமாக பயன்படுத்த வேண்டும் என எண்ணினர். இதில் தந்திரம் மிகுந்த அண்ணன் தம்பியிடம், பசுமாட்டின் முன்பகுதியை நீ வைத்துக்கொள். அதன் பின் பகுதியை நான் வைத்துக் கொள்கிறேன். மேலும் போர்வையை பகல் பொழுது முழுவதும் நீ பயன்படுத்திக் கொள். பின்னர் இரவு பொழுதில் நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கூறினான். அண்ணனின் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த தம்பி உடனே அதற்கு ஒத்துக் கொண்டான். பசுமாட்டின் முன்பகுதி தம்பிக்கு சொந்தம். ஆதலால் தம்பி அதனை பராமரிக்கும் விதமாக அந்த பசுவிற்கு புல் கொண்டு வந்து போட்டான். தவிடு புண்ணாக்கு எல்லாம் வாங்கிப் போட்டான். மாலையில் பசுவிடமிருந்து பால் கறந்த அண்ணன் பின்பகுதியில் இருந்துவந்த பால் தனக்கே சொந்தம் என்று கூறி தம்பிக்கு எதுவும் தர மறுத்து விட்டான். அதுபோலவே பகல் பொழுதில் பல்வேறு வேலைகளுக்கும் சென்ற தம்பி போர்வையை எதற்கும் பயன்படுத்தவில்லை. இரவு நேரம் ஆனதும் அண்ணன் தம்பியிடம் போர்வையை கேட்டு வாங்கிக்கொண்டான். குளிரில் இதமாகத் தூங்கினான். தம்பியோ குளிரில் நடுங்கினான். மிகவும் மனம் வருந்திய தம்பி தன்னுடைய இடர்பாடுகளை எல்லாம் அவ்வூரின் பெரியவரிடம் வந்து கூறினான். அந்தப் பெரியவரும் தம்பியின் அனைத்து சூழல்களையும் கேட்டு அறிந்தபின் தம்பிக்கு சில யோசனைகள் கூறினார். அதன்படி தம்பி பகல் பொழுதில் தனது மாட்டுக்கு புல் எதுவும் கொடுக்கவில்லை. வேறு வேலைகளுக்குச் சென்று விட்டான். மாலையில் வந்த அண்ணனுக்கோ பசுவிடமிருந்து பால் கறக்க முடியவில்லை. ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியோடு வாதாடினான்.  சற்று நேரம் கழித்து தன்னுடைய போர்வையை தம்பியிடம் கேட்டான். தம்பியும் அந்த போர்வையை அழுக்காக இருக்கிறது அதை நான் துவைத்து தருகிறேன் என்று கூறி, தண்ணீரில் நனைத்து துவைத்து அண்ணனிடம் கொடுத்து விட்டான்.  இதனைக் கண்ட அண்ணன் தான் செய்த தவற்றை உணர்ந்து வருந்தினான். தம்பியிடம் மன்னிப்பு கேட்டவனாக அவனுக்கு உரியதை நேர்மையோடு வழங்கினான். 
ஆம் அன்புக்குரியவர்களே! தான் சுயநலமாகவே வாழ்ந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த  அண்ணனுக்கு மனம் மாற வேண்டிய நேரம் விரைவிலேயே வந்துவிட்டது. ஆம்! எண்ணங்களை மனிதர் எண்ணலாம். ஆனால் எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர் என்று  நீதிமொழிகள் 16 : 1, குறிப்பிடுகின்றது. 

இன்றைய முதல் வாசகத்தில் பவுலும்  திமொத்தேயுவும் நற்செய்திப் பணியாற்ற சென்ற பொழுது, அவர்கள் சில இடங்களுக்கு தாங்கள் செல்ல வேண்டும் என தனது மனதில் எண்ணியவர்களாக பணிகளை முன்னெடுத்த பொழுது ஆண்டவர் அவர்களை தடுத்து நிறுத்தி தாம் அவர்களை அனுப்ப நினைத்த இடங்களுக்கு அனுப்பினார் என்பதை வாசிக்க கேட்டோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இந்த உலகப் போக்கிலான மக்கள் தந்தையை அறிந்து கொள்ளவில்லை என்பது குறித்து வருத்தம் தெரிவிக்கின்றார். மேலும், நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. அதையும் கடந்து மேலான காரியங்களில் நீங்கள் ஈடுபட வேண்டும் என இயேசு ஆண்டவர் கூறுகின்றார். 


என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
எசாயா 55:8

         என்று  தந்தையாம் இறைவன் இறைவாக்கினர் எசாயா வழியாக கூறுவது போல, நமது வாழ்விலும் கூட நமது அன்றாட நிகழ்வுகளின் வழியாக இறைவன் நம்மை சந்திக்கிறார். பல நேரங்களில் நாமும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இது மிகப்பெரிய துன்பமாக இருக்கிறது! எனக்கு இது பிடிக்காத காரியமாக இருக்கிறது! நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது! என்று நமது வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் நபர்களையும் பல நேரங்களில் நாம் ஒதுக்கி வைத்து இருக்கலாம். ஆனால் உண்மையையும் நன்மையையும் மேன்மையையும் அணிந்தவராகிய இறைவன் நமது வாழ்வில் நமக்கென்று ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருக்கின்றனர். அவை நல்வாழ்விற்கான திட்டங்கள் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். 

ஆங்கிலத்தில் இவ்வாறாக ஒரு வாக்கியம் உண்டு. God has a plan for my life. That's all I need to know, என்று கூறுவார்கள். ஒரு தாய்க்கு தன்னுடைய குழந்தைக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்பது நன்கு தெரியும். நமது தாயும் தந்தையுமான இறைவனுக்கும் நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு கட்டத்திலும் எந்தெந்த காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். நமது வாழ்வின் இந்த நிமிடம் வரை நாம் வாழ்ந்திருக்கும் வாழ்க்கையை ஒரு முறை சற்று நின்று திரும்பிப் பார்த்தால், நமது வாழ்வில் இறைவனின் பராமரிப்பை நாம் அபரிமிதமாக உணரலாம். இன்றுவரை நம்மை வழிநடத்திய இறைவன் நாளைய பொழுதும், எதிர்வருகின்ற அனைத்து நாட்களிலும் நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் நாம் தொடர்ந்து வழிநடப்போம். நமக்கென்று இறைவன் வகுத்திருக்கும் நல்வாழ்வின் திட்டங்களை அவர் விரும்பியபடி நமது வாழ்வில் செயல்படுத்த நமது வாழ்வில் இறைவனுக்கு அனுமதி கொடுப்போம். அவரோடு இணைந்து அவரது திட்டங்களில் ஆண்டவரின் கரம்பற்றி வழி நடப்போம். அதற்கான அமைதியான உள்ளத்தைப் பெற்றுக்கொள்ள, அவற்றைத் தேர்ந்தெடுக்கும் நல் மனதை பெற்றுக்கொள்ள இறையருள் வேண்டி
 இத்திருப்பலியில் இணைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...