தொட்டுவிடும் தூரத்தில் அல்ல... ஆனால் நான் அதை விட்டு விட போவதுமில்லை...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இரக்கம் உள்ளவராகவும் நேர்மை உள்ளவராகவும் இருப்பது என்பது தொட்டுவிடும் தூரத்தில் இருப்பபதல்ல... என்று எண்ணிக்கொண்டு நாம் வ்வாறு வாழ முயலாமல் விட்டு விடுபவர்கள் அல்ல நாம் என்பதை நமது சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்ட இன்றைய வாசகங்கள் அழைக்கின்றன.
நேர்மையாளர்களின் செயல்கள் மறக்கப்படுவதில்லை என இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இரக்கம் உள்ளவராகவும், நேர்மையாளராகவும் செயல்பட்டார். எனவேதான் அவரது செயல்கள் இன்றும் சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இரண்டு காரியங்களைச் செய்கிறார்.
1, ஒரு மரத்தினை சபிக்கின்றார்.
2. ஆலயத் தூய்மையைப் பற்றி அறிவிக்கின்றார்.
ஏன் இயேசு மரத்தை சபிக்க வேண்டும்?
ஆலயத் தூய்மையை எடுத்துரைக்க வேண்டும்?
என சிந்திக்கும் போது, மரமானது தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு பலன் தரக்கூடிய பணியினை செய்ய வேண்டும். அப்பணியைச் செய்யாமல் இருக்கின்ற காரணத்தினால், அம்மரத்தின் மீது கடவுள் கோபம் கொண்டவராய், அம்மரத்தை சபிக்கின்றார் எஎன எண்ணலாம். ஆனால் மரத்தைச் சபித்ததன் நோக்கம், அம்மரம் யாருக்கும் பயன்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், முறையற்ற பருவத்தில் பழத்தை எதிர்ப்பார்த்தது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் நம்பிக்கையான வார்த்தையின் வலிமை எவ்வளவு என்பதை சீடர்களுக்கு கற்பிக்க அந்த மரத்தை பயன்படுத்துகிறார் எனவும் உணர முடிகிறது. காலையில் இயேசு சபித்த மரம், மாலையில் பட்டுப்போனதைக் கண்டு வியந்த சீடர்கள் இயேசுவிடம் அதை அறிவிக்கிறார்கள். இயேசு அவர்களிடத்தில் உங்களிடமும் ஆழமான நம்பிக்கை இருந்தால், நீங்கள் ஒரு மலையைப் பெயர்ந்து கடலுக்குச் செல் என்றாலும், அது நடக்கும் என அவர்களுக்கு வார்த்தையின் மீதான நம்பிக்கையைப் பற்றி, அவர்களுக்கு எடுத்துரைக்கக் கூடிய பணியினை செய்கின்றார். அதே இயேசு கிறிஸ்து ஆலயத்திற்கு செல்கிறார், அங்கு ஆலயத்தில் நடக்கக்கூடிய பலவிதமான, முறையற்ற செயல்களைக் கண்டு அங்குள்ளவர்கள் மீது கோபம் கொண்டவராய், "இது கடவுளின், இறைவேண்டலின் வீடு, இதை கள்வர் குகைகளாக நீங்கள் மாற்றி விட்டீர்கள்" என்று கூறி, ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது நேர்மையாளராகவும் இரக்கம் உடையவராகவும் இருந்தார். எனவே தான் அவர், தான் வாழ்ந்த அந்த சமூகத்தில், ஏழை எளியவர்களை கண்டபோது அவர்கள் மீது இரக்கம் கொண்டார். அதேசமயம் நேர்மையாளராக இருந்த காரணத்தினால் தான், சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளுக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுக்கக்கூடிய மனிதராக திகழ்ந்தார். இயேசுவைப் போல நாம் நேர்மையாளராகவும், இரக்கம் உள்ளவராகவும் இச்சமூகத்தில் நாம் இருக்கும் போது, நமது செயல்கள் எதுவும் என்றும் எப்போதும் மறக்கப்படாது என்பதனை முதல் வாசகம் தெளிவுபடுத்துகிறது. அந்த வாசகத்திற்கு வடிவம் தரும் வகையில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. எனவே இன்றைய நற்செய்தி வாசகமும், இன்றைய முதல் வாசகமும், நமக்கு உணர்த்தும் செய்தி இரக்கத்தோடும், நேர்மையாளராகவும் நாம் செயல்படும்போது, நாம் எடுக்கக் கூடிய அனைத்து நல்ல விதமான செயல்களும் சமூகத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.
இன்றும், சமூகத்தில் பலவிதமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர்களை நாம் நினைவுகூர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். கொரோனா தொற்றுநோய் அச்சம் ஒரு புறம் இருந்தாலும், தன்னார்வ மனதோடு முன் நின்று பணி செய்யக்கூடிய, பலர் இன்றும் நம் கண்களில் தென்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இரக்கத்தோடும் நேர்மையோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், இன்னும் பல ஆயிர தலைமுறைகள் கடந்தாலும், இவர்களின் அரும்செயலானது, இவர்கள் ஆற்றிய நல்ல செயலானது, என்றும் மறக்கப்படாது, என்றச் செய்தியினை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் பெறுகிறோம். வாசகங்கள் கொடுக்கக்கூடிய வார்த்தைகளுக்கு உயிரோட்டம் தர வேண்டுமாயின், நமது சொல்லிலும் செயலிலும் நாம் இரக்கம் உள்ளவர்களாகவும், நேர்மையாளராகவும் நடக்க கடமைப்பட்டிருக்கிறோம். எனவே நமது சொல்லிலும் செயலிலும், நேர்மையானவர்களாக மாறிட இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக