புதன், 26 மே, 2021

அதட்டுபவர்கள் ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவார்கள்.... (27.5.2021)

அதட்டுபவர்கள் ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவார்கள்....

பொதுக்காலம் 8வது வாரம் வியாழன் 

சீரா: 42: 15 - 22 , மாற்: 10: 46 - 52

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஒளிரும் சூரியன் எந்தவித பாகுபாடுமின்றி இவ்வகிலத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் தனது ஒளிக்கீற்றினை படச் செய்கிறது. இந்த சூரியன் நல்லவர்கள் மீது மட்டும் தான் தன் ஒளிக்கீற்றை செலுத்துவேன் எனக் கூறுவது இல்லை. கெட்டவர்கள் மீது நான் செலுத்த மாட்டேன் எனக் கூறுவதும் இல்லை. மாறாக அனைவர் மீதும் ஒளிக்கீற்றை வீசுகிறது.  அதுபோலத்தான் ஆண்டவரின் மாட்சியும் விளங்குகிறது. ஆண்டவரின் மாட்சி இவ்வகிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரியது.   இவ்வகிலத்திலுள்ள ஒவ்வொருவருமே ஆண்டவரின் பிள்ளைகள். அவரது மாட்சியில் பங்கெடுக்க தகுதி பெற்றவர்கள். ஆனால் பல நேரங்களில் நாம் ஆண்டவரின் மாட்சியில் பங்கெடுக்க முயலும் போது பலவிதமான தடைகள் எழுகின்றன.  

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, பார்வையற்ற பர்த்திமேயு,  ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடமிருந்து பார்வையைப் பெற வேண்டும் என்பதற்காக தன் குரலை உயர்த்துகிறார்,ஆண்டவரின் மாட்சியில் பங்குபெற விரும்புகிறார். ஆனால் அவரைப் பலர் அதட்டுகிறார்கள். அதட்டியவர்கள் எல்லாம் ஆற்றுப்படுத்தக் கூடியவர்களாக மாறும் நிகழ்வும் அங்கு அரங்கேறுகிறது. எந்த மக்கள் கூட்டம், பேசாதிரும்!,  கத்தாதிரும்! அவரை தொடர்ந்து அழைக்காதே! என்று கட்டுப்படுத்த முயன்றார்களோ, அவர்களே ஒரு கட்டத்தில்,  உன்னை இயேசு அழைக்கிறார்! துணிவோடு எழுந்து வாரும்! எனக் கூறி,  அவரை ஆற்றுப்படுத்தும் பணியையும் செய்கிறார்கள்.  

எப்போது அதட்டுபவர்கள் ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவார்கள்? என சிந்திக்கும் போது, வாழ்வில் நாம் நமக்குத் தேவை என எண்ணி  எதை நோக்கி முயற்சியில் ஈடுபடுகிறோமே அல்லது குரல் எழுப்புகிறோமோ, அப்போது நம்மை விமர்சிக்க கூடியவர்கள், கட்டுப்படுத்த எண்ணக் கூடியவர்கள், நமது முயற்சியில் நாம் வெற்றி காணும் போதும், நாம் யாரை நோக்கி எதற்காக குரல் எழுப்பினோமோ அக்குரல்  கேட்கப்படும் பொழுதும் அதை அறிந்ததும் அவர்கள் நம்மை ஆற்றுப்படுத்தும் சக்திகளாக மாறுகிறார்கள். ஆனால் இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் ஆற்றுப்படுத்தும் சக்திகளாக அதட்டுபவர்களை மாற்றுவதற்கு, நாம் உள்ளத்தில் துணிவையும், விடாமுயற்சியை கொண்டிருக்கவேண்டும்.நமது குரல் கேட்கப்படும் என்றும் நமது முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும் எனவும்  ஆழமான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். பர்த்திமேயுவின் ஆழமான நம்பிக்கை ஆண்டவர் இயேசுவை நோக்கித் தன் குரலை எழுப்பிக் கொண்டே இருக்கச் செய்தது.  எனவே தான் அதட்டுபவர்களைப் பற்றி அவர் பெரிதும் கவலை கொள்ளவில்லை.  அதட்டுபவர் அதட்டட்டும், நான் கேட்க வேண்டியதைக்
 கேட்பேன் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து குரல் எழுப்பினார். அவர் குரல் இயேசுவின் காதுகளுக்கு எட்டியது.  எனவே இயேசு நின்று திரும்பிப் பார்த்து, அவரை அழைத்து வாருங்கள் எனக் கூறுகிறார்.  இயேசுவின் இந்த வார்த்தைகளை கேட்டதும் அதுவரை அதட்டிக் கொண்டிருந்த மக்களெல்லாம் ஆற்றுப்படுத்தும் பணியை செய்கிறார்கள். துணிவோடு எழுந்து வாரும்! உன்னை இயேசு அழைக்கிறார் என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

                      இன்று நாம் வாழும் இந்த சமூகத்தில்  சமூகத்தின் நலனை முன்னிறுத்தி குரலெழுப்பும் போது, அதிகமானவர்கள்  நம்மை அதட்டும் பணியில் ஈடுபட்டாலும்,  அவர்களைத் ஆற்றுப்படுத்துபவர்களாக மாற்ற வேண்டுமாயின் நாம் நம்பிக்கையோடு தொடர்ந்து இறைவனது  மாட்சியில் நாம் பங்கு கொள்ள தொடர்ந்து நமது குரலை எழுப்பிக்கொண்டே  தொடர் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு நாம் செயல்படும்போது அதட்டுபவரும் ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவார்கள்.

 ஒளிரும் சூரியன் எப்படி பாகுபாடின்றி அனைவர் மீதும் தன் ஒளிக்கீற்றினை வீசும் போது அதை யாரும்  தடுப்பது இல்லையோ,அல்லது ஒருவேளை தடுக்க எண்ணினாலும் சூரியன் தன் செயலை மாற்றுவதில்லையோ,  அது போல நாமும் இந்த சமூகத்தில் முயற்சியில் ஈடுபடும் நபர்களின் முயற்சி வெற்றியடைய  (குரல் எழுப்பும் பலரின் குரல்கள் யாரை நோக்கி எழுப்புகிறார்களோ அவர்களைச் சென்று அடைவதற்கு) வழி கொடுப்போம். 

அதட்டுவதை விட (தடையாக இருப்பதை விட) ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவோம். அதற்கான அருளை வேண்டி இறைவனிடத்தில் மன்றாடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...