அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தமிழ் இலக்கயத்தில் ஐந்திணை ஐம்பதில் மாறன் பொறையனார் பாடல் 38 இல் ஒரு அழகிய கதை உண்டு. ஒரு ஆண் மானும் பெண் மானும் நெடுந்தூரமாக தாகம் மேலிட்டதால் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என தேடிக் கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் சிறிதளவு தண்ணீர் அவைகளின் கண்களுக்குப் தென்பட்டது. உடனே ஓடிச்சென்று அருகில் போய் நின்று இரண்டும் மாறி மாறி முகத்தை பார்த்துக் கொண்டன. ஏனென்றால் அங்கிருந்து சிறிதளவு தண்ணீர். ஒரு மான் குடிப்பதற்கு கூட போதாது. எனவே ஆண் பெண் மானை பார்த்து நீ குடி என்றது. பெண் மான் ஆண் மானைப் பார்த்து நீகுடி என்றது. இரண்டும் மாறி மாறி கூறிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு முடிவுக்கு வந்தன இருவரும் ஒரே நேரத்தில் இந்த நீருக்குள் நமது வாயை வைத்து நாம் குடிக்க துவங்குவோம். எவ்வளவு குடிக்கின்றோமோ அவ்வளவு குடித்துக் கொள்வோம் என்று கூறிவிட்டு இரண்டும் தண்ணீருக்குள் வாய் வைத்தன. ஆனால் தண்ணீர் குறையவேயில்லை. ஒரே ஆச்சரியம் ஏன் குறையவில்லை என்று பார்த்தால் ஆண் மான் குடிக்க வேண்டும் என பெண் மானும் பெண் மான் குடிக்க வேண்டும் என ஆண் மானும் தண்ணீரை குடிக்காது வெறுமன வாயை வைத்துக் கொண்டிருந்தன. இந்த நிகழ்வைப் பார்த்த வானம் அவர்களின் அன்பை கண்டு வியந்த வண்ணம் மழையைப் பெய்வித்ததாம்.
இவ்வுலகில் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பார்கள். அன்பு விலை மதிக்க முடியாதது. மனிதன் இவ்வுலகில் எதிர்பார்ப்பதும் இந்த அன்பைத்தான்.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் தங்களிடையே யூதாசுக்கு பதிலாக பன்னிரண்டாவது சீடரை தேர்ந்தெடுப்பதற்காக இறைவன் முன்னிலையில் அனைவரும் கூடி அமர்ந்து இறைவேண்டல் செய்கின்றனர். மேலும் சீட்டுப் போட்டு தங்களுள் பன்னிரண்டாம் நபராக மத்தியாவை இணைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டதன் நோக்கம் பதவிகளில் சுகம் காண்பதற்காக அல்ல. மாறாக இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றவே. இயேசுவின் விருப்பமா அது என்ன என சிந்திக்கும் போது இன்றைய நற்செய்தி வாசகம் அதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இயேசு நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நான் உங்களை தேர்ந்து கொண்டதன் நோக்கம் நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்கின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிக்கென சீடர்களை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் சொத்துக்களுக்கும் உரிமையாளர்களாக அவர்களை மாற்றுவதற்காக அல்ல. மாறாக ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்தார். இன்று நாம் வாழும் உலகத்தில் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டோம்.
நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து கொண்டிருக்கிறோமா? என எண்ணிப் பார்ப்போம். பல நேரங்களில் நாம் நம்மை எல்லோரும் என்னை அன்பு செய்ய வேண்டும். நாம் அனைவரின் அன்புக்குரியவனாக நான் இருக்க வேண்டும் என எண்ணுகிறோமே ஒழிய நாம் அடுத்தவரை அன்பு செய்வதற்கு முன் வருவதில்லை. இன்றைய நாளில் விருப்பு வெறுப்பு வேறுபாடுகள் அனைத்தையும் களைந்தவர்களாய் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும் ஏற்றுக்கொள்ளவும் இறைவன் அழைக்கின்றார். அழைக்கின்ற இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் பெயரளவில் நான் உன்னை அன்பு செய்கிறேன் எனக் கூறுவதை நிறுத்திவிட்டு சொல்லாலும் செயலாலும் ஒருவர் மற்றவரை வேறுபாடுகள் கடந்து அன்பு செய்யக்கூடியவர்களாக மாறுவோம். அப்படி அன்பு செய்யும்போது கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் நாம் என்பது இச்சமூகத்தில் வெள்ளிடை மலையாக புலப்படும் என்பதை மனதில் இருத்துவோம். ஒருவர் மற்றவரை இன மொழி பாகுபாடுகளைக் கடந்து ஏற்றுக்கொள்ளவும் அன்பு செய்யவும் இறையருளை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக