புதன், 12 மே, 2021

வார்த்தைகளே நமக்கு அடையாளமாகின்றன. ..( 13.5.2021)

 வார்த்தைகளே நமக்கு அடையாளமாகின்றன.  


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.





ஒரு முறை மாணவர்களிடம் ராஜாவின் அம்மாவிற்கு 5 பிள்ளைகள் அவர்களுள் முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாம் மகன் பெயர் பிப்ரவரி, மூன்றாம் மகன் பெயர் மார்ச், நான்காம் மகன் பெயர் ஏப்ரல் 5 ஆம் மகன் பெயர் என்ன? என்றேன். அனைவரும் இணைந்து மே என்றார்கள். உடனே மீண்டுமாக சென்னேன் கவனமாக கவனியுங்கள் ராஜாவின் அம்மாவிற்கு 5 பிள்ளைகள் அவர்களுள் முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாம் மகன் பெயர் பிப்ரவரி, மூன்றாம் மகன் பெயர் மார்ச், நான்காம் மகன் பெயர் ஏப்ரல் 5 ஆம் மகன் பெயர் என்ன? என்றேன். மீண்டும் பலர் மே என்றார்கள். நீங்கள் சொல்லுங்கள் 5 ஆம் மகன் பெயர் என்ன? நீங்களும் மே என்றால் ராஜா எத்தணாவது மகன் என சிந்தியுங்கள். ராஜாவின் அம்மாவிற்குத் தான் 5 பிள்ளைகள என்றேன்; 4 பெயர்களை கூறிவிட்டேன் எனில் 5 வது மகன் ராஜாவாகத்தானே இருக்க முடியும். நம்மில் பலர் பல நேரங்களில் பலவற்றை கேட்கிறோம் ஆனால் முறையாக கவனித்து கேட்பதில்லை 




 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேசிய வார்த்தைகளை கேட்டு வியப்புற்ற ஒரு பெண்மணி உம்மை பாலூட்டி வளர்த்த உம் அன்னை பேறுபெற்றவர் என்றாள்.  இயேசுவின் வார்த்தைகள் அவரது பெற்றோரை இச்சமூகத்திற்கு அடையாளம் காட்டியது.  இயேசு அந்த பெண்மணியை பார்த்து, இறைவார்த்தையைக் கேட்டு அதனை கடைபிடிப்போர் இன்னும் பேறு பெற்றவர் எனக் கூறுகிறார்.

வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும், ஒருவரின் உள்ளத்தை ரணப்படுத்தவும் முடியும்.  நமது வார்த்தைகள் எப்படி செயலாற்றுகின்றன நமது வார்த்தைகள் நமக்கு எத்தகைய அடையாளத்தை தருகின்றன என்பதை சிந்திக்க இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம்.



இன்றைய முதல் வாசகத்தில் நிலம் முளைகளை துளிர்க்க செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும் ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையையும் புகழ்ச்சியையும் துளிர்த்தெழச் செய்தார் என எசாயா இறைவனைப் பற்றி புகழ்ந்து உரைக்கின்றார்.  பவுல்  தன்னுடைய சொல்லும் செயலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை இச்சமூகத்தில் பிரதிபலித்தார்.  இயேசுவின் பெயரை அறிவிப்பவர்களை நான் கொலை செய்வேன்,  இவர்களைப் பிடித்து இழுத்து வந்து சிறையிலடைத்து துன்புறுத்துவேன் என்று பயணத்தை தொடங்கிய, இந்தப் பவுல் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு, அவர் கூறிய வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டு அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை உலகெங்கும் பல பகுதிகளுக்குச் சென்று  அறிவிக்கக் கூடிய ஒரு மனிதனாக மாறினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  அவர் தான் கேட்ட இறை வார்த்தையை நம்பினார். ஆவ்வார்த்தைகளை தம் வாழ்வாக்கினார். அவ்வார்த்தைகளுக்குச் சான்று பகர்ந்தார். 

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போதும், இயேசுவின் வார்த்தைகள் ஒவ்வொருவரையும் தொட்டது. அவரது வார்த்தைகள் அறுதல் அற்றவருக்கு ஆறுதலைத் தந்தது. எனவே பலர் அவரை பின்பற்றி நடக்கக்கூடிய சாட்சிகளாக மாறினர்.  இன்று நாம் வாழும் சமூகத்தில் நாமும் பல விதமான வார்த்தைகளை பேசுகிறோம். ஆனால் நமது வார்த்தைகள் யாரைத் தொடுகிறது?  நம் வார்த்தைகள் நமக்கு தரும் அடையாளம் என்ன? நமது வார்த்தைகளால் ஊக்கம் அடைந்தோர் எத்தனை பேர்? ஏன சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. நாம் நமது வார்த்தைகளால் நமது அடையாளத்தை இச்சமூகத்தில் கண்டுகொள்ள இறைவார்த்தையை கவனத்தோடு செவிக் கொடுக்க வேண்டும். அதனை நம் வாழ்வாக மாற்ற வேண்டும். அப்போது  நமது வார்த்தைகளால் இந்த சமுதாயத்தில் நல்லதொரு அடையாளமாக நாம் மாறிட முடியும். அதற்கான அருளை இன்றைய நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.



1 கருத்து:

  1. நமது சொல்லும் செயலும் இணைந்து செல்வதே நமது வாழ்வின் வெற்றி ஆகிறது.எனவே வார்த்தையும் வாழ்வும் ஒன்றாய் அமைந்திட நம்மை அன்புடன் அழைக்கும் அருட் சகோதரர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...