உனக்கும் எனக்கும் சண்டையா?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருமுறை ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பறையில் மேஜையின் மீது ஒரு குவளையில் தண்ணீரை வைத்து விட்டு மாணவர்களை நோக்கி, நீங்கள் இங்கு என்ன பார்க்கிறீர்கள்? சொல்லுங்கள்! என்று கூறினார். ஒரு மாணவன் எழுந்தான். ஒரு கண்ணாடிக் குவளை, அதில் சிறிதளவு தண்ணீர் இருக்கிறது என்றான்.
இன்னொரு மாணவன் எழுந்தான். ஒரு மேஜை இருக்கிறது, அந்த மேஜையின் மீது ஒரு கண்ணாடிக் குவளை இருக்கிறது, அந்த கண்ணாடி குவளையில் சிறிதளவு தண்ணீர் இருக்கிறது என்றான்.
மற்றொரு மாணவன் எழுந்தான். மேஜை இருக்கிறது, அதன் மேல் கண்ணாடி குவளை இருக்கிறது, அதனுள் சிறிது தண்ணீரும் வெற்றிடமும் இருக்கிறது என்றான்.
இன்னும் ஒரு மாணவன் எழுந்தான். ஒரு மேஜை இருக்கிறது, அதன் மேல் கண்ணாடி குவளையில் சிறிதளவு நீர் இருக்கிறது, அதனோடு வெற்றிடம் அங்கு இருக்கிறது. அந்த வெற்றிடம் காற்றினால் நிரப்பப்பட்டுள்ளது என்றான்.
இப்பொழுது ஆசிரியர் கூறினார், ஒவ்வொருவரும் கூறியது சரிதான். அவரவர்கள் பார்த்ததை கூறியுள்ளீர்கள். இதில் இவர் கூறியதுதான் சரி, அவர் கூறியது தான் சரி என்று பிரித்துப் பார்க்க முடியாது. நீங்கள் ஒவ்வொருவருமே நீங்கள் பார்த்ததை கூறினீர்கள். நீங்கள் பார்த்த அனைத்துமே இங்கு இருக்கிறது. ஒவ்வொருவரும் எல்லாவற்றையும் பார்ப்பது இல்லை. சிலர் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். சிலர் சிலவற்றை மட்டும் நோக்குகிறார்கள். நாம் பல நேரங்களில் இது போன்று தான் செயல்படுகிறோம்.
சிந்திப்பதிலும் கூட இப்படித்தான். நாம் ஒரு கருத்தை கொண்டிருப்போம். மற்றொருவர் வேறொரு கருத்தை கொண்டிருப்பார். நாம் கொண்டிருக்கக்கூடிய கருத்து மட்டும் தான் உண்மை என்பது அல்ல. மற்றவரின் கருத்திலும் உண்மை இருக்கலாம். நாம் அதைக் கூர்ந்து கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
நாம் சரி என நினைப்பதை மற்றவர் தவறு என நினைக்கலாம்.
இன்னொருவர் சரி என எண்ணுவதை நாம் தவறு என நினைக்கலாம்.
இன்னொருவருக்கு சரி எனப்படுவது நமக்கும் சரியெனப் படலாம்.
பல நேரங்களில் நான் பார்த்தது மட்டுமே சரி, நான் கூறுவது மட்டுமே சரி என்கிற மனப்பாங்கோடும் சில மனிதர்கள் பிடிவாத உள்ளத்தோடு இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மாறுபட்ட எண்ணம் கொண்டவர்கள். ஒவ்வொருவரும் அவரவர் எண்ணத்தையும் அவரவர் சிந்தனையையும் இவ்வுலகில் வெளிப்படுத்துகிறார்கள். அவ்வாறு வெளிப்படுத்தப்படும் போது எனக்கும் என்னோடு வாதிடுபவருக்கும் இடையே இருப்பது கருத்து வேறுபாடுகள் தானே தவிர, எங்களுக்கு உள்ளாக பிரச்சனை என்பது இல்லை. ஆனால் பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் கருத்துவேறுபாடுகளை தங்களது சுய வாழ்வில் தொடர்புபடுத்தி அடுத்தவரோடு உள்ள உறவை முறித்துக் கொள்கின்ற பண்பானது, மனிதர்களிடத்தில் இயல்பாக இருந்து வருகிறது.
இன்றைய முதல் வாசகத்திலும் பவுல் தான் கற்ற, தான் பெற்ற, இறப்பு உயிர்ப்பு பற்றிய அனுபவத்தினை, தான் கொண்டிருந்த நம்பிக்கையை, அங்கிருந்தவர்களுக்கு அறிவித்தார். அதன் விளைவாக அவர் விசாரிக்கப்பட்டார். அவரை விசாரிக்கும் பொழுது அவர் சொன்னதை கேட்டு ஒரு சாரார் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். ஒருசாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்களுக்கு இடையே குழப்பம் நிலவியது. சண்டைகள் மூண்டது. இங்கு ஒரு கருத்தானது பகிரப்பட்டது. அந்த கருத்தை ஏற்பவர்கள் ஏற்கலாம். ஏற்காதவர்கள் விட்டு விடலாம். ஆனால், நான் சொல்கின்ற கருத்தே சரி என்ற மமதையோடு செயல்படும் போது, அங்கு சிக்கலானது ஏற்படுகிறது, சலசலப்பை உருவாக்குகிறது. அந்த சலசலப்பு அந்த வேறுபாடுகள் அனைத்தும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் உருவானது என்பதை மறந்து, உறவுகளுக்கிடையே உருவானது என எண்ணி உறவை முறித்துக் கொள்ளவும் பகையை வளர்த்துக் கொள்ளவும் துவங்குகிறார்கள். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் தெளிவாக வாசிக்க கேட்டோம். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான எண்ணங்களும் சிந்தனைகளும் இருந்தாலும், கருத்துவேறுபாடுகள் நிறைந்திருந்தாலும், மனிதர்கள் எப்போதும் உயிர்கள் என்ற முறையில் இணைந்து இருக்கவும், ஒன்றாக இருக்கவும் அழைக்கப்படுகிறோம்.
முரண்பாடுகள் நிறைந்த இச்சமூகத்தில் முரண்பாடுகள் இல்லாமல் வாழவேண்டும் என எண்ணினால், வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது இருக்காது. பலவிதமான சிந்தனைகள் கருத்து வேறுபாடுகள் இவைகள் இருக்கும் போது அவைகளோடு நாம் முதலில் அடுத்தவரை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். நான் கூறுவதே சரி என்ற மமதையோடு நாம் செயல்படும்போது உறவானது துண்டிக்கப்படுகிறது. கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி, உறவுகளை துண்டித்துக் கொள்ளாமல், கருத்து வேறுபாடுகளைக் கடந்து, ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளவும், அன்பு செய்யவும், அவர்களோடு இணைந்து, ஆண்டவர் இயேசு கூறுவது போல நாம் அனைவரும் ஒன்றாய் இருந்து, இவ்வுலகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டிட அழைக்கப்படுகிறோம். அடுத்தவர் கருத்துக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். அடுத்தவர் சொல்லக்கூடிய கருத்துகளையும் நமது சிந்தையில் ஏற்று சீர்தூக்கி பார்க்க முன்வருவோம். எனக்கு உள்ளாக இருக்கக்கூடிய தன்னலம் ஆணவம் அழிக்கப்பட்டு அடுத்தவரின் வார்த்தைகளிலும் ஒளிந்திருக்கும் உண்மைத் தன்மை என்ன? என்பதை கண்டுகொள்ள திறந்த மனம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். அந்த திறந்த மனம் நம்மிடம் உருவாகும்போது கண்டிப்பாக நாம் ஒருவர் ஒருவரை கருத்து வேறுபாடுகளைக் கடந்து அரவணைக்க கூடிய, இயேசு விரும்பக்கூடிய, இயேசு கற்றுக்கொடுத்த, ஒன்றுபட்ட மக்களாக நாம் இச்சமூகத்தில் வாழ முடியும். அவ்வாறு வாழ இறையருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக