புதன், 5 மே, 2021

திறந்த மனதோடு அனைவரையும் ஏற்போம்...(6.5.2021)

திறந்த மனதோடு   அனைவரையும் ஏற்போம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 நாம் அனைவரும் தாய்த்திரு அவையாக இணைந்து இன்று புனித டோமினிக் சாவியோ அவர்களின் நினைவு தினத்தை  கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளிலே டோமினிக் சாவியோ பெயரைத் தாங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.  இன்றைய முதல் வாசகத்தில் புறவினத்தாரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியானது மையப்படுத்தப்படுகிறது.  நாம் வாழும் இந்த உலகத்தில் பெரும்பான்மையான நேரங்களில் நாம் பிறரை ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.  ஆனால் நாம் நினைப்பது ஒன்று, கடவுள் நினைப்பது மற்றொன்றாக இருக்கிறது.  நாம் எண்ணுவதையெல்லாம் இறைவன் எண்ணுவதில்லை. நமக்கு எது தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார், அதனை நமக்குத் தருகிறார். தொடக்க காலத்தில் பிற இனத்தாரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற எண்ணமானது சிலரிடையே இருந்தது. ஆனால் இறைவனது திட்டமோ வேறாக இருந்தது.  அவர் அனைவரையும் ஏற்றுக் கொண்டார்.  தன் சீடர்களையும் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தார். 


 இன்று நாம் நினைவுகூரக் கூடிய தோமினிக் சாவியோ அவர்களும்  மிகவும் சிறிய வயதிலேயே புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் நான்கு வயதிலேயே தனிமையாக ஜெபிக்கும் திறமையை பெற்றிருந்தார்.  முதன்முதலாக இவர் நற்கருணையை பெறும் போது, "என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியானதும், அற்புதமானதும் இந்த நாள் தான் எனக் குறிப்பிட்டார். ஆலயத்தில் பீடப்பணி செய்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார். எனவே, அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து மழை, குளிர் என எதையும் பாராமல், ஆலயத்திற்கு ஓடி வருவார். பன்னிரண்டு வயதில் ஆண்டவரின் அழைப்பை உணர்ந்து தன்னை குருவாக மாற்றிக்கொள்ள வேண்டும் என எண்ணி குருத்துவப் பயிற்சிக்குள் நுழைந்தவர், தோமினிக் சாவியோ அவர்கள்.  தங்களுடனிருந்த சிறுவர்கள் கெட்ட வார்த்தைகள் பேசினால் அவர்களை திருத்தக் கூடிய பணியை செய்தவரும் இவர். அவர்களுக்கிடையே சண்டை எழுந்தால் சமாதானம் செய்துவைப்பவரும் இவர். பொதுவாகவே குழந்தைகளுக்கு என்ன தெரியும் என கூறி, பல நேரங்களில் நாம் குழந்தைகளை அலட்சியப்படுத்துவோம். ஆனால் பன்னிரண்டே வயது நிரம்பிய தோமினிக் சாவியோவின் செயல்பாடுகள் இயேசு எந்தச் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை முன்னிறுத்தினாரோ, அதனைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தோமினிக் சாவியோ அவர்கள் தன்னுடைய 14ஆம் வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்.  இவரை நினைவு கூறும் இந்த நாளில் நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகத்தின் அடிப்படையில் எப்படி புறவினத்தாருக்கு எதுவும் தெரியாது. நமக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என எண்ணிக் கொண்டிருந்த சீடர்களுக்கு மத்தியில் புறவினத்தாரிடமும் நன்மைகள் உள்ளது. பிற இனத்தாரையும் இறைவன் ஏற்றுக் கொள்கிறார்!  அவர்களையும் தேடிச் சென்றார். இயேசுவின் பணி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல,  அது அனைவருக்குமான பணி என்பதையும் உணர்த்தும் வண்ணம் எப்படி புறவினத்தாரை, இணைத்துக்கொண்டு வாழ இறைவன் தன் சீடர்களுக்கு தூண்டுகோலாய் இருந்தாரோ! அது போலத்தான், இன்று நாம் வாழும் சமூகத்தில் குழந்தைகளும். நாம் எப்போதும் இணைந்து வாழவும் குழந்தைகளிடமிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளவும், அழைக்கப்படுகிறோம். 
             எனவேதான் திருவிவிலியத்தில் சிறு குழந்தைகளாக மாறுங்கள்.‌  மாறாவிடில் உங்களால் விண்ணரசில் நுழைய முடியாது.   நமது எண்ணங்கள் உயர்வாகவும்,  நமது செயல்களில் குழந்தை மனம் கொண்டதாகவும் அமைந்திட வேண்டும். குழந்தை மனம் கொண்டவர்களாக விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி அனைவரையும் கண்டு இன்புற்று வாழ வேண்டும். எப்படி சிறுவயதில் தோமினிக் சாவியோ ஆண்டவர் இயேசுவின் விழுமியங்களின் வழி வாழ்ந்தாரோ அவரை போல நாம் வாழ வேண்டும் அதற்கு திறந்த மனம் கொண்டவர்களாய், எங்கிருந்தாலும் அதை கற்றுக் கொள்ள முயலவேண்டும். சிறுவனாக இருந்தாலும் சரி வயதானவராக இருந்தாலும் சரி,       ஆண்டவர் இயேசுவின் திட்டத்தின்படி நடக்கிறார் என்றால் அதனை புரிந்து கொண்டு அதனை ஏற்றுக்கொண்டு நாமும் அவர்களை போல் செயல்பட திறந்த மனதோடு வாழ இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.‌ இவ்வாறு இறைவனின் குரலுக்கு ஏற்ப செயல்படும் போது,  நாம் ஆண்டவரின் அன்பை நிலைத்திருப்போம். அவரது மகிழ்ச்சியில் திளைத்திருப்போம். ஆண்டவர் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமாயின் நாம் திறந்த மனதோடு அனைவரையும் ஏற்றுக் கொண்டு அனைவரிடமும் இருக்கக்கூடிய தன்மைகளை உள் வாங்கிக் கொண்டு அந்த நன்மைகளை நமது செயல்பாடுகளாக மாற்றிக் கொண்டு இச்சமூகத்தில் உண்மையான இயேசுவின் சீடர்களாக வலம்வர இறையருளை  இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...