செவ்வாய், 11 மே, 2021

இறைவன் இருப்பது எங்கே?...(12.5.2021)

 இறைவன் இருப்பது எங்கே?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 



ஒரு ஊரிலே ஒரு புத்த மடம் இருந்தது. அங்கு இருந்த மடத்தின் தலைவரான புத்த துறவி மற்ற புத்தத் துறவிகளை நல்வழிப்படுத்த எண்ணி ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருந்தார். ஆனால் அவர்களிடையே அமைதியானது நிலவவில்லை. எப்போதும் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் கண்டு கொண்டும் குறை கூறிக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார்கள். இவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அந்த தலைமை புத்த குரு யோசித்தார். தன்னைவிட வயதில் மூத்த குரு ஒருவரின் உதவியை நாடினார். அந்த மூத்த குரு இவ்வாறு சொன்னார். இவர்களுக்குள் சண்டை நிலவுகிறது என்று எண்ணி வருத்தம் கொள்ளாதே. ஏனென்றால் அவர்களுள் ஒருவர்தான் உண்மையான புத்தர். அவர் அவர்களுக்குள் இருந்து அங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார். இதை நீ அங்கு இருக்கின்ற அனைத்து புத்த குருமார்களுக்கும் தெரியப்படுத்து என்று கூறினாராம். அந்த தலைமை புத்த குருவும்  அந்த மடத்தின் அனைத்து பயிற்சி புத்த குருக்களுக்கும் இந்த செய்தியை கூறினாராம். சில நாட்களிலேயே அவர்களிடையே சண்டை குறைந்தது. யாரும் யாரைப் பற்றியும் குறை காணவில்லை. ஒருவர் மற்றவரின் தேவையை அறிந்து உணர்ந்து அதனை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டக் கூடியவர்களாக மாறினார்கள். தலைமை குரு இவற்றையெல்லாம் கண்டு ஆச்சரியப்பட்டவராய் மூத்த குருவிடம் சென்று நடந்ததையெல்லாம் அறிவித்தார். அப்போது அந்த மூத்த புத்த குரு கூறினாராம், உள்ளத்தில் இருந்து கொண்டு தான் கடவுள் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். உங்களில் ஒருவர் புத்தராக இருக்கிறார் என்று கூறியதும் நீங்கள் இவர் புத்தராக இருப்பாரோ? அவர் புத்தராக இருப்பாரோ? என்று எண்ணி எண்ணி இன்று ஒவ்வொருவருமே உண்மையான புத்தராக மாறி விட்டனர் என்றாராம். 

            இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் இறைவனை எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள் தேடுவது இல்லை. பவுலும், இன்றைய முதல் வாசகத்தில், ஏதென்ஸ் நகர மக்களுக்கு இறைவன் உறைந்திருப்பது மனிதனின் கையால் கட்டப்பட்ட ஆலயங்களில் அல்ல, மாறாக நமது இதயங்களில் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துகிறார். பவுல் அறிவித்த வார்த்தையை கேட்டு பலர் மனம் மாறுகிறார்கள். இதயத்தில் இருக்கும் இறைவனைக் கண்டு கொள்கிறார்கள். எனவே பவுலின் பாதையில் பவுலை பின்தொடர்ந்து இயேசுவை நோக்கி பயணத்தை  தொடரக் கூடியவர்களாக மாறுகிறார்கள். 

            


நாம் வாழும் இந்த உலகத்தில் நமது உள்ளத்திலிருந்து தான் நல்லதும் தீயதும் பிறக்கின்றன. பல நேரங்களில் நாம் நம்முள் எழும் நல்ல எண்ணத்திற்கு செவி கொடுப்பதை விட்டு விட்டு, சிற்றின்ப நாட்டத்திற்கு உட்பட்டவர்களாய், தீய எண்ணத்திற்கு செவிமடுக்கக் கூடியவர்களாய் வாழுகிறோம்;. தூய ஆவியானவர் தான் நமக்கு உள்ளிருந்து நன்மை தீமை இரண்டையும் எடுத்துரைக்கிறார் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இதயத்துள் உறைந்திருக்கும் இறைவனைக் கண்டு கொண்டவர்களாய். உள்ளத்திலிருந்து பேசக்கூடிய தூய ஆவியானவரின் குரலுக்கு கவனத்தோடு செவி கொடுத்து நலமான நல்ல பணிகளை முன்னெடுக்கக் கூடியவர்களாய் இச்சமூகத்தில் வலம் வர நாம் அழைக்கப்படுகிறோம். இன்று நம்மிடையே பலரும் பல விதமான தேவைகளால் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். தொற்று நோயின் காரணமாக அச்சத்தால் நடுங்கிப் போய் இருக்கிறார்கள். அவர்களைத் நம்பிக்கையான வார்த்தைகளால் தேற்ற நாம் அழைக்கப்படுகிறோம். நமது உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனது குரலுக்கு செவி கொடுப்போம். இறைவனை வெளியில் தேடுவதை நிறுத்தி இறைவன் உறைந்து இருப்பது நம்முள்; என்பதை உணர்ந்து அவரின் மன ஓசைக்கு செவிகொடுத்து மனங்களில் உறைந்துள்ள இறைவனை மானிடம் கண்டுக்கொள்ள பவுலைப்போல சாட்சிகளாவோம். மனதில் உறைந்துள்ள தூய ஆவியார் கூறும் நன்மைகள் நமது வாழ்வில் செயலாக இறையருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...