இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று நாம் அனைவரும் தாய்த்திரு அவையாக இணைந்து மூவொரு இறைவனின் திருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இந்நேரத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் மூவொரு இறைவன் திருநாள் வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.
கண்ணதாசன் அவர்கள் கூறுவார்...
மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன் மணந்து பார் என்றார் கடவுள்....
நட்பு என்பது யாதெனக் கேட்டேன் பழகிப் பார் என்றார் கடவுள்....
அனைத்தையும் நான் அனுபவித்தே அறிய வேண்டுமென்றால் ஆண்டவனே நீ எதற்கு? என்றேன்...
அந்த ஆண்டவன் சற்று அருகே வந்தான் அந்த அனுபவமே நான்தான் என்றான்....
இன்று நமது அனுபவத்தின் துணை கொண்டு மூவரை இறைவனை நாம் அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
தந்தை, மகன், தூய ஆவி மூவரும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள். இதுவே நமது கிறிஸ்தவ மறையின் நம்பிக்கையாக அமைந்திருக்கிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட கூடிய நாம் இந்த மூவரும் தொடக்கத்திலிருந்து இருந்தவர்கள் என்பதை விவிலியத்தின் உதவியோடு புரிந்துகொள்ள வேண்டும்.
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
என தொடக்க நூலில் முதல் அதிகாரத்தில் 1, 2 வசனங்களில் நாம் வாசிக்கலாம். மேலும் பவுல் இயேசுவை குறித்து சான்று பகரும் போது,
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு.
கொலோசையர் 1:15
எனக் குறிப்பிடுகிறார்.
இத்தகைய இறை வார்த்தைகள் வழியாக தந்தை மகன் தூய ஆவி மூவரும் ஒன்றாக தொடக்கத்திலிருந்தே இருந்தவர்கள் என்பதை நாம் அறியலாம்.
விவிலியத்தில் மூவரை இறைவனை இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில் நாம் கண்டுகொள்ள இயலும்.
தந்தையாம் இறைவன் விண்ணிலும்....
தூய ஆவி புறா வடிவில் நடுநிலையிலும்...
இயேசு தண்ணீரிலும் ...என மூவரையும் நாம் ஒருங்கே கண்டுகொள்ள முடியும்.மூன்று ஆட்களாக இருந்தாலும் இவர்களின் சிந்தனை, சொல், சித்தம் என அனைத்தும் ஒன்றாகவே இருந்தது.
எனவேதான் இயேசு
நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்.என்றார்.என
யோவான் 14:7 விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம்.
அது போலவே தான் இந்த தூய ஆவியானவர். இயேசுவின் விண்ணேற்றமடைந்து செல்லும்போது நம்மோடு இருப்பதற்கு நம்மை நல்வழிப் படுத்துவதற்கு நம்மீது இந்த தூய ஆவியாரை பொழிந்தருளினார்.
இதையே விவிலியத்தில் ...
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
யோவான் 16:13 வசனத்தின் இறைவார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஒரே எண்ணத்தை கொண்டவராக இவர்கள் மூவரும் இணைந்து இருக்கிறார்கள். சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் என அனைத்திலும் மூவரும் ஒன்றுபட்டு மூவொரு ஆட்களாய் ஆனால் ஒரே கடவுளாய், விளங்குகிறார்கள்.
இந்த இறைவனின் சாயலாக இம்மண்ணில் படைக்கப் பட்டவர்கள் தான் மனிதர்களாகிய நாம். இதையே....
தொடக்க நூல் 1:27 கூறுகிறது.
கடவுள் தம் உருவில் மானிடரைப்* படைத்தார்;
என்று... இவ்வுலகில் பிறந்து இருக்கும் மனிதர் ஒவ்வொருவரும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள். எனவே கடவுளின் எண்ணங்கள் நமது எண்ணங்களாக இருத்தல் அவசியமாகிறது.
ஆனால் பொதுவாகவே ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எண்ணக் கூடியவர்கள் என நாம் நம்மை பற்றி கூறுவது முற்றிலும் உண்மையே. ஆம் ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன் தான்.
ஆனால் கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்று கூறுவது போல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் காணப்பட்ட அனைத்து விதமான நற்பண்புகளும் உள்ளிருக்கின்றன. உள்ளிருக்கின்ற அந்த இறைத்தன்மையை, இறை குணங்களை, நாம் பல நேரங்களில் கண்டு உணர்வது இல்லை.
ஒரு கவிஞன் எழுதினான்....
சமூகத்தில் ஒரு விலங்கு இனத்திற்கு ஒரு துயரம் நேரும் போது அந்த இனத்தைச் சார்ந்த மற்ற விலங்குகள் அனைத்தும் இணைந்து அதனை எதிர்க்கின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்று....
இப்படிப்பட்ட மனிதர்களுக்கும் இயலும் பலர் இச்சமூகத்தில் ஏதேனும் ஒரு துயர் நடக்கிறது என்றால் அப்போது அந்த மக்களின் துயரத்தை துடைப்பவர்களாக செயல்படுகிறார்கள். இயேசுவும் இந்த மண்ணில் வாழ்ந்த போது அடுத்தவரின் துயரத்தை தன் துயரம் என எண்ணியவர். அடுத்தவரின் கண்ணீரைத் துடைக்க முற்பட்டவர் தான்.
இயேசுவிடம் காணப்பட்ட அதே பண்பு நம்மிடம் இருக்கிறது என்றால், அந்தப் பண்பை நாம் அனுதினமும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் நாம் அவ்வப்போது மட்டுமே அதனை நினைவு கூருகிறோம். எங்கேனும் ஏதேனும் ஒரு தீமை நடைபெற்றால், எங்கேனும் ஏதேனும் ஒரு இக்கட்டான சூழல் உருவாகும்போது தான் நமக்குள் இருக்கக்கூடிய மனிதநேயம் என்பது வெளிப் படக் கூடிய ஒன்றாக இன்று இருக்கிறது.
ஆனால் எல்லா சூழ்நிலையிலும் தந்தையின் விருப்பம் மகனாகிய இயேசுவின் இடத்தில் வெளிப் பட்டது தூய ஆவியாரும் தந்தையின் விருப்பத்தை நம்முள் இருந்து எப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார். ஆனால் நாம் தேவைக்கு ஏற்ற வகையிலும் சூழலைப் பொருத்தும் நமக்குள் இருக்கக்கூடிய இயேசுவின் எண்ணங்களை நமது வாழ்வாக மாற்றுவதை விட்டு விட்டு, எப்போதும் நமக்குள் உறைந்திருக்கும் இயேசுவின் எண்ணங்களையும், இயேசுவின் சிந்தனைகளையும் கண்டுகொண்டு அதனை இச்சமூகத்தில் நிலைநாட்டக் கூடியவர்களாய் நாம் இருக்க வேண்டும். சந்தர்ப்பமும் சூழலும் வாய்த்தால் மட்டுமே அதை செய்யவேண்டும் என எண்ணுவதை விட ஒவ்வொரு நிமிடமும் நாம் இயேசுவைப் போல எப்படி இயேசு கடவுளின் விருப்பத்தை அறிந்தவராய் இம்மண்ணில் நடமாடினாரோ, அதைப்போல நாமும் செயல்பட வேண்டும். இதற்கு நம்முள் இருந்து கொண்டு நம்மை தூய ஆவியானவர் தூண்டிக் கொண்டுதான் இருக்கிறார். அவரின் குரலுக்கு செவி கொடுக்க முயலுவோம். எண்ணத்தால் சிந்தனையால் சொல்லால் செயலால் எப்படி தந்தை மகன் தூய ஆவியார் இணைந்திருக்கிறார்களோ, அதுபோல அவரின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கக்கூடிய நாமும் அவரோடு இணைந்து இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
இறைவனடி சேர்ந்த திருச்சி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்கள் அடிக்கடி எங்களிடம் கூறுவது உண்டு. நமது கிறிஸ்தவ மறையிலேயே மிகப்பெரிய ஜெபம் என்றாலும், மிகச் சிறிய ஜெபம் என்றாலும் அது தந்தை,மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென் என சொல்லக் கூடியது தான் என கூறுவார்.
இந்த ஜெபத்திற்கான அர்த்தத்தை அவர் எங்களுக்கு சொல்லித் தரும்பொழுது மூவொரு இறைவனைப் மனித வாழ்வோடு இணைத்து அதிகம் விளக்குவார்.
தந்தை எனச் சொல்லும் பொழுது படைத்த இறைவனை நாம் நினைவு கூருகிறோம். நாம் தந்தை எனச் சொல்லும் போதெல்லாம் இந்த உலகத்தில் நாம் பிறக்க காரணமாயிருந்த நமது பெற்றோர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என எங்களுக்கு கூறுவார்.
மகன் எனச் சொல்லும் பொழுதெல்லாம் இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. இந்த இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்காக மனிதனாக இம்மண்ணிற்கு வந்தவர். நமக்காக இறந்தவர். எனவே இன்று நாம் வாழும் இந்த சமூகத்தில் இந்த மீட்பு பணியை செய்யக் கூடியவர்களை நினைவுகூர அழைப்பு விடுத்தார். அறியாமை என்ற நோயிலிருந்து நம்மை விடுவிக்க நமக்கு அனைத்தையும் அறியச் செய்யக்கூடிய நம்மை மீட்டெடுக்க கூடிய நமது ஆசிரியர்களையும் நமக்கு நல்வழி காட்டக் கூடிய நல்லவர்கள் பலரையும் மகன் எனச் சொல்லும்போது நினைவில் இருத்திக்கொள்ளுங்கள் என்பார்.
தூய ஆவி என்று சொல்லும் பொழுது, இந்தத் தூய ஆவியாரின் பணி என்பது வழிநடத்தும் பணியாகும். அந்த வழி நடத்தும் பணியை இன்று இச்சமூகத்தில் செய்து கொண்டிருக்கக் கூடிய நமது உடன்பிறந்த சகோதர சகோதரிகள் நமது ஞான பெற்றோர் ஆன்மிக வழிகாட்டிகள் என இன்னும் எத்தனையோ நபர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்களை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள் என்பார்.
எனவே தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் என்ற ஜெபத்தை நீங்கள் சொல்லும் பொழுது ஏதோ கடமைக்காக சொல்லிவிட்டு செல்பவர்களாக அல்லாமல் அதனை சிந்தித்து தியானித்து செய்யுங்கள் எனக் கூறுவார்.
எனவே இனி வரக்கூடிய நாட்களில் நாம் தந்தை, மகன், தூய ஆவி என கடமைக்கு சொல்லிவிட்டுச் செல்பவர்களாக இல்லாமல் அதில் இருக்கக்கூடிய ஒற்றுமையையும் ஒன்றிப்பையும் அதன் உண்மை அர்த்தத்தையும் உணர்ந்து செய்வோம். எனவே நமது வாழ்வில் இந்த ஜெபத்தை நமது அடையாள ஜெபமாக அனுதினமும் பயன்படுத்துவோம். எந்த நிகழ்வை தொடங்கினாலும் இந்த மூவொரு இறைவனின் துணையோடு தொடங்குவோம். எதை நிறைவு செய்தாலும் இந்த மூவொரு இறைவனின் துணையோடு நிறைவு செய்வோம். நாம் மூவொரு இறைவனோடு இணைந்தவர்கள் என்பதனை நமது சொல்லாலும் செயலாலும் வெளிக்காட்டிட இறைவனது அருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக