கேட்டால் மட்டுமே கிடைக்கும்.....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறுவனை அவனது பெற்றோர் கோடைகால விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு ரயிலில் அழைத்துச் செல்வர்கள்;. ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர். சில வருடங்களுக்குப் பிறகு அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன், இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்றான். சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் அவனது வேண்டுகோளை ஏற்றனர். ரயில் நிலைய நடைமேடையில் நின்றுகொண்டு இருந்த போது, ரயில் புறப்பட தயாரான நிமிடம், தந்தை மகனின் காதுக்கருகில் மெதுவாக “மகனே, வழியில் திடீரென்று நீ பயப்படுவதாக எண்ணினால் இதை படி என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை. கொஞ்ச நேரப் பயணத்திற்கு பின், மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்கினான். பயத்தில் அவன் கண்களில் கண்ணீர் வர தொடங்கியது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை, சட்டைப் பையில் வைத்த காகிதம் நினைவுக்கு வந்தது. நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரித்தான், அதில், “பயப்படாதே மகனே, நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது. கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது. தான் இறங்க வேண்டிய ஊர் வந்து சேர்ந்ததும் அடுத்த பெட்டியை போய்ப் பார்த்தான் அங்கு தந்தை இல்லை. உடனே தந்தையை அலைபேசியில் தொடர்பு கொண்டான். அப்போது தந்தை கூறினார், மகனே உன்னை ஊக்கமூட்ட, உன்னை தைரியப்படுத்த, பலப்படுத்தவே இந்த வார்த்தைகளை கூறினேன். இந்த வார்த்தைகளின் வழியாக நான் உன்னுடனே இருந்தேன். இப்போது நீ பத்திரமாக சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கிறாய். என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது என்று கூறினாராம்.
நாம் வாழும் இன்றைய உலகத்தில், எப்போது பார்த்தாலும் இப்போது நிலவும் இந்த இக்கட்டானச் சூழ்நிலைகளுக்கு அலைபேசிகளில் குறுஞ் செய்திகளாக அதை செய்யுங்கள் இதை செய்யுங்கள் எனக் கூறுவதும், எத்தனை பெயர் இறப்பு எத்தனை பேர் பாதிப்பு என்ற செய்திகளும் நம்மை சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கின்றன. இந்நேரத்தில் இறைவன் ஒருவரை ஒருவர் ஊக்கமூட்ட அழைப்பு தருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் கூட இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்த அப்பொல்லோவை ஊக்கப்படுத்தி அவரை திருத்தூதர்களிடம் அனுப்பிவைத்து இயேசுவின் இறையாட்சி பணியை அவர் நம்பிக்கையோடு தொடர்ந்து செய்வதற்கு அவரை ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதை நாம் வாசிக்க கேட்டோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மிடம் நான் இதுவரை உருவகங்கள் வழியாக உங்களிடம் பேசினேன். இனிமேல் வெளிப்படையாக உங்களிடம் பேசுவேன். நீங்கள் என் தந்தையிடம் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள். கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று கூறி நாம் கேட்பதை இறைவன் தருவார் எனவே நம்பிக்கையோடு கேட்க ஊக்கப்படுத்துகிறார். பொதுவாகவே மனிதர்களிடத்தில் வருமா? வுராதா? கிடைககுமா? கிடைக்காத? என்ற எதிர் எதிர் முரண்கள் இருப்பது இயல்பு. பல நேரங்களில் நாம் இறைவனிடம் வேண்டுவதை இறைவன் தருவாரா? மாட்டாரா? என்ற எண்ணத்தின் அடிப்படையில் எதையும் கேட்கத் தயங்கிக் கொண்டு இருக்கிறோம். இறைவனிடம் மட்டுமல்ல பொதுவாகவே மனிதர்களிடத்திலும் இப்படித்தான் செயல்படுகிறேம். ஆனால் நாம் கேட்டால் மட்டுமே கேட்பதை பெற்றுக்கொள்ள முடியும். இன்று நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மக்கள் பல இடங்களில் என்ன செய்வதென தெரியாமல் நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்கள். நாம் ஆண்டவரிடத்தில் அவர்களின் பரிபூரண சுகத்திற்காகவும் நமது நலனுக்காகவும் இறைவேண்டல் செய்ய ஊக்கப்;படுத்தப்படுகிறோம். அடுத்தவரின் நலனை முன்னிறுத்தி நாம் செய்கின்ற இறைவேண்டல், நம்மையும் காக்கும் அடுத்தவரையும் காக்கும். நாம் வாழும் இந்த சமூகத்தில் ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டவும், தேவையானதை தேவையான நபர்களிடத்தில் தேவைப்படும் பொழுது கேட்க்கவும் இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
நாம் இச்சமூகத்தில் காணுகின்ற ஒவ்வொரு மனிதரையும் ஊக்கப்படுத்துவோம். அவர்கள் செய்கின்ற நற்செயல்களை பாராட்டுவோம். அவர்களை பாராட்டும் பொழுது அந்த நற்செயலை அவர்கள் கண்டிப்பாக மென்மேலும் செய்வார்கள். அதன் வழியாக இந்த சமூகம் பயனடையும். எனவே, நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்ட அப்பொல்லோவை ஊக்கப்படுத்திய சீடர்களை போலவும், உங்களுக்கு தேவையானதை கேளுங்கள் என்று ஊக்கமூட்டிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போலவும், நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதர்களையும், ஊக்கப்படுத்த இறையருளை இன்றைய நாளில் தொடர்ந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக