நமது பாதை சரியான பாதையாக இருக்கிறதா?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு தெருவில் பதினைந்து வீடுகள் இருந்தன. அதில் இறுதியாக இருந்த வீட்டில் ஒரு பெண்மணி குடியிருந்தாள். அப்பொழுது ஒரு நாள் அங்கு வந்த பிச்சைக்காரன் அம்மா! தாயே! ஏதாவது சாப்பாடு போடுங்க! என்று கெஞ்சி கேட்டான் அப்பொழுது மனைவியானவள் இதோ வருகிறேன் சற்று பொறு என்று கூறினாள். சற்று நேரம் பொறுத்து பார்த்த அந்த மனிதன் மீண்டும் அம்மா தாயே ஏதாவது சாப்பாடு போடுங்க! என்று கெஞ்சினான். மீண்டுமாக இதோ வருகிறேன் என்று சொன்ன அந்த மனைவி சற்று நேரத்தில் பழைய சாதத்தைக் கொண்டு வந்து அந்த மனிதனிடத்தில் கொடுத்தாள். மீண்டுமாக அந்த மனிதன் அவளிடத்தில் அம்மா தாயே குழம்பு அல்லது ரசம் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் தாருங்கள் என்று கேட்டான். உடனே அந்த மனைவி இரக்கம் கொண்டவளாக தனது வீட்டில் இருந்த ரசத்தை கொண்டு வந்து அவனது பாத்திரத்தில் சாதத்தோடு ஊற்றினாள். அதை நன்றாக உண்டு திருப்தி அடைந்த அந்த மனிதன் அந்த பெண்ணை பார்த்து கூறினான், அம்மா! தாயே அடுத்த முறை வரும் பொழுது கொஞ்சம் உப்பு காரம் சேர்த்து போட்டு நன்றாக செய்து தர முடியுமா? என்று கேட்டான். உடனே மிகவும் ஆத்திரம் அடைந்த அந்த மனைவி அந்த பிச்சைகாரனை பார்த்து, உனக்கு உணவு கொடுப்பதை பெரிதான விஷயம். இதில் குழம்பில் உப்பு காரம் சரியில்லை என்று கூறுகிறாய். அதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறாய். எனது கணவர் கூட என் சாப்பாட்டில் பற்றி எதுவும் சொல்ல மாட்டார். அமைதியாக உணவை உண்டு விட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார். உனக்கு எவ்வளவு தைரியம் என்று அம்மனிதனை பார்த்து கேட்டாள். உடனே அம்மனிதன் கூறினான் நான் அப்படி சுவையான உணவு எல்லாம் கேட்கவில்லை தாயே, தங்களின் கணவர்தான் சிறிது பணத்தைக் கொடுத்து என்னிடத்தில் இவ்வாறாக உங்களிடம் கேட்க சொன்னார் என்று கூறினான்.
இன்று பல நேரங்களில் நாம் நினைப்பதை நேரடியாக பேச அஞ்சி தயங்கி பலரின் வழியாக பேசுகிறோம்!. நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்வதற்கு வாய்ப்புகளை தேடுகிறோம். இதற்காக இறைவார்த்தையை பயன்படுத்தக் கூடிய மனிதர்கள் இச்சமூகத்தில் இன்று ஏராளம்.
இன்றைய முதல் வாசகத்தில் பல இடங்களுக்கு இயேசுவின் சீடர்கள் பயணம் மேற்கொண்டு, ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை பறைசாற்றுவதை நாம் வாசிக்க கேட்டோம். இந்த நற்செய்தியை பறைசாற்றும் பணி எளிதான பணி அல்ல. பல சவால்கள் நிறைந்த பணி.அவர்கள் பயணத்தின் போது பலவிதமான இடையூறுகளை சந்தித்தார்கள். சந்தித்த போது மனம் தளர்ந்து விடவில்லை. ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் துணிவோடு அப்பணியை மேற்கொண்டார்கள். ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் பணி என்பது அமைதியை கொணரும் பணியாகும்.சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாழ்வையும் சட்டத்தால் நசுக்கப்படக் கூடிய மக்களுக்கு சுதந்திரத்தையும் பெற்றுத் தரக் கூடிய பணியாகும். உயர்வு தாழ்வு களுக்கு மத்தியில் சிக்குண்டு இருந்த இந்த உலகத்தில் இயேசுவின் சீடர்கள் மனிதநேயத்தை விதைத்தவர்களாய், இயேசுவின் இறையாட்சி பணியை நற்செய்தியாக அறிவித்தார்கள். இயேசுவின் இறையாட்சி பணி நற்செய்தியாக அறிவிக்கப்படுவதை கேட்டு பலர், உள்ளம் குத்துண்டவர்களாக மனம்மாறி ஆண்டவர் இயேசுவை நம்பவும் அவரது இறையாட்சி மதிப்பீடுகளின் படி தங்கள் வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு உள்ளாகி ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றும் உண்மை சீடர்களாக மாறினார்கள்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் ஆண்டவர் இயேசுவின் பெயரால் சபைகள் மூலைக்கு மூலை உதயமாகி இருக்கிறார்கள். இன்று சந்தையில் விற்கப்படும் பொருட்களில் மிகச் சிறந்த ஒரு பொருளாக இருப்பது இயேசுவின் பெயர். ஒரு சிறிய அறை இருந்தால் போதும் ஒரு ஜெப கூட்டத்தை நடத்தலாம் என்ற சூழல் இன்று நிலவுகிறது. விவிலியம் என்பது பல விதமான அர்த்தங்களையும் அடையாளங்களையும் உள்ளடக்கியது ஆனால் அதனை தேவைக்கு ஏற்றார் போல வசதிக்கு ஏற்றார் போல பயன்படுத்தி லாபம் பார்க்கும் நோக்கத்தோடு இன்று மக்கள் உதயமாகிக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய சூழலில் எல்லாமே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவிப்பவர்களின் பாதை சரியான பாதையில் தான் இருக்கிறதா? என்ற கேள்வியை சிந்திக்க இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கிறது. இன்று பல இடங்களில் இயேசுவின் பெயரால் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். இத்தகைய மனிதர்கள் இன்று உண்மையிலுமே ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவின் தலைமையில் நிறுவிய திருஅவையின் நற்செய்தி அறிவிப்பு பணிக்கு பெரிய தடையாகவும் சவாலாகவும் அமைந்திருக்கிறார்கள். இன்று இயேசுவின் பெயரை கூவிக்கூவி விற்பவர்களுக்கு பின்னால் ஓடக்கூடிய நபர்களின் கூட்டத்தை கண்டு நாமும் இயேசுவை கூவிக் கூவி விற்க வேண்டுமோ? என்ற எண்ணமானது சராசரியான கத்தோலிக்கர்கள் எண்ணத்திலும் உதயமாகி தொடங்கி இருக்கிறது. ஆனால் இதுபோன்ற சவால்களை அன்றும் இயேசுவின் சீடர்கள் சந்தித்தார்கள். அன்றும் இயேசுவின் பெயரால் பல போலி இறைவாக்கினர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் இயேசுவின் சீடர்கள் இயேசுவின் துணையோடு எதிர் கொண்டவர்கள். ஆண்டவர் இயேசுவிடம் கற்றுக்கொண்ட இறையாட்சியின் விழுமியங்களை தங்கள் வாழ்வாக மாற்றினார்கள். தங்கள் வாழ்வாக மாற்றிக் கொண்டதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அமைதியை அவர்கள் பின்பற்றினார்கள். அந்த அமைதியை அவர்கள் மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள். எனவேதான் அவர்கள் அறிவித்த அமைதி எந்த மக்களிடம் அவர்கள் சென்றார்களோ அந்த மக்களிடம் தங்கியது. அது அவர்களுக்கும் கிடைத்தது.
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் மறைபரப்பு பணியில் உள்ள சவால்களை எல்லாம் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணமாகத்தான் இன்றைய நாள் வாசகங்கள் அமைகின்றன. நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளில் பயணிக்கிறோம். எனவே நாம் கற்பிக்கும் இறை வார்த்தைகளை அதற்கு தருகின்ற விளக்கங்களை நாம் முன்னெடுத்துச் செல்லக்கூடிய இயேசுவின் விழுமியங்களை நமது வாழ்வில் செயலாக மாற்றுவோம். அவ்வாறான செயலாக மாற்றும் போது நாம் இறையாட்சி பணியில் எத்தனையோ இடையூறுகளை சந்தித்தாலும், அஞ்சாது துணிவோடு தொடர்ந்து பயணிக்க கூடிய இயேசுவின் உண்மைச் சீடர்களாக நாம் மாறிவிட முடியும். எனவே இன்றைய நாளில் நாம் இணைந்து இறையாட்சியின் உண்மையான இயேசுவின் சீடர்கள் முன்னெடுத்த நற்செய்திப் பணியை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து நமது நற்செய்தி அறிவிப்பு பணி இவ்வுலக நாட்டத்தை சார்ந்த இருக்கிறதா? அல்லது உண்மையாகவே இயேசுவின் விழுமியங்களை சார்ந்து இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்த்து நம்மை நாம் சுய ஆய்வு செய்து கொண்டவர்களாய் இயேசுவின் விழுமியங்களின்படி வாழ்ந்து நமது வாழ்வில் இயேசுவை வெளிக்காட்டும் உண்மை சீடர்களாய் நாம் திகழ்ந்திட இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக