இயேசுவை பிரதிபலிப்போம்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் படிப்பில் மிகவும் பின்தங்கி இருந்தான். அவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அவனது தாய் தந்தையர் அவனை அடிக்கடி ஒழுங்காகப் படி, இல்லையேல் உன்னை நாங்கள் அருட்சகோதரிகள் நடத்தக்கூடிய அல்லது அருட்தந்தையர்கள் நடத்தக்கூடிய ஒரு பள்ளியில் கொண்டு போய் சேர்த்து விடுவோம். அப்படி நாங்கள் அங்கு சேர்த்தால் அவர்கள் உன்னை ஒழுங்காக படிக்கவில்லை என்றால், அடித்து உதைத்து தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள். எனவே, ஒழுங்காகப் படி. இல்லையேல் உன்னை நாங்கள் அந்த பள்ளிக்கு மாற்றி விடுவோம் என்று அவ்வப்போது அச்சுறுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் சிறுவனோ அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவன் தொடர்ந்து சேட்டைகள் பல செய்வதிலும் விளையாட்டுத்தனமுமாக இருந்தான். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெற்றோர், இனி சரிப்பட்டு வராது என்று கருதி, அவனை அரசு பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு போய் ஒரு அருட்சகோதரிகள் நடத்தக்கூடிய ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக முதல் மதிப்பெண் பெற்று வந்தான். பெற்றோருக்கு ஒரே ஆச்சரியம். எப்படி நமது மகன் திடீரென இப்படி மாறினான்? என்ற எண்ணம். அவர்களால் பொறுக்க இயலவில்லை. மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். அங்கிருந்த அருள் சகோதரியிடம் நடந்ததையெல்லாம் சொன்னார்கள். அவரும் அமைதியாக அனைத்தையும் கேட்டுவிட்டு, எல்லாம் அப்படித்தான்! படிக்க ஆரம்பிச்சுருவாங்க! என்று சொல்லி எதார்த்தமாக அனுப்பி வைத்தார். ஆனாலும் அச்சிறுவனின் தாய்க்கு ஐயம் நீங்கவில்லை. மீண்டும் தன் மகனிடம் எப்படி நீ இவ்வளவு மதிப்பெண் பெற்றாய்? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பிக் கொண்டே இருந்தார். உடனே அந்த சிறுவன் சொன்னான், அம்மா! நீங்கள் தானே சொன்னீர்கள்! ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் இந்த பள்ளியில் அடித்து உதைத்து தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள் என்று. பள்ளிக்குச் சென்றதும் முதல் நாள் முதல் வரிசையில் அமர்ந்தேன். நான் அமர்ந்து நேராக கண்களை நோக்கியபோது கரும்பலகையையும் அதற்கு மேல் ஒருவரையும் பார்த்தேன். அங்கு ஒருவனை அடித்து உதைத்து தோலை உரித்து சிலுவையில் அறைந்து தொங்க விட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் முடிவு செய்துகொண்டேன், நீங்கள் பொய் சொல்லவில்லை உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். நானும் படிக்கவில்லை என்றால் என்னையும் இப்படிதான் தொங்க விட்டுவிடுவார்கள் என்ற ஐயம் தோன்றியது. உடனே படிக்கத் தொடங்கி விட்டேன் என்று கூறினானாம்.
இயேசுவின் சிலுவையை குறித்து வேடிக்கையாகவும் எதார்த்தமாகவும் இவ்வாறு சில கற்பனைக் கதைகள் உண்டு.ஆனால் இதோ இங்கு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயேசு, ஏதோ குற்றம் செய்ததற்காக தொங்கவிடப்பட்டவரல்ல. சமூகத்தில் மாற்றத்தை நிலைநாட்ட விரும்பியதன் அடிப்படையில் இங்கு இவர் தொங்கவிடப்பட்டார்.
ஆம்! மனிதனை மனிதன் தொட மறுத்து, அச்ச உணர்வோடு வாழ்ந்த நேரத்தில் அவனைத் தேடிச் சென்று தொட்டு குணப்படுத்தியவர் இந்த இயேசு கிறிஸ்து. சட்டத்தால் ஒரு மனிதன் நசுக்கப்படும் பொழுது அது தவறு எனச் சுட்டிக் காட்டியவர் இந்த இயேசுகிறிஸ்து. ஆனால் மேலோட்டமான சட்டங்களை பிடித்துக் கொண்டு மனிதநேயத்தை மறந்து வாழும் மனிதர்களிடத்தில் மனிதநேயத்தை விதைத்தவர் இந்த இயேசு கிறிஸ்து. இது போன்ற செய்கைகளின் காரணமாக இவர் பலரின் சூழ்ச்சியால் இந்நிலைக்கு ஆளானார் என்பது நாம் அறிந்த உண்மை.
இந்த இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் முதன்முதலாக சுவைக்க இருக்கக்கூடிய இந்த குழந்தைகளுக்காக ஜெபிக்க நாம் இங்கே கூடியிருக்கிறோம். இவர்களும் எப்படா அந்த நண்மையை கொடுப்பாங்க? என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் ஆண்டவர் இயேசுவை முதன்முறையாக தங்களுக்குள் பெறுவதற்கு காத்திருக்கிறார்கள்.
எனவே இன்றைய நாளில் நாம் நமக்கு தமது திருவுடலையும் திரு இரத்தத்தையும் தந்திட்ட இயேசுவை குறித்து சிந்தித்திட அழைக்கப்படுகிறோம்.
கடவுள் இந்த உலகைப் படைத்த போது ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மிகவும் அழகாகப் படைத்தார். அவர் படைத்த ஒவ்வொன்றும் மிகவும் அழகாயிருந்தது. தாம் படைத்த அனைைத்தையும் நல்லது எனக் கண்டார் என்று விவிலியத்தில் முதல் வாசகம் வழியாக நாம் வாசிக்க கேட்டோம்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு படைப்புமே இறைவன் இவ்வுலகை எவ்வளவு அதிகமாக அன்பு செய்தார் என்பதை நமக்கு வெளிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இன்று முதன்முறையாக இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, தங்களுக்குள் ஏற்க வந்திருக்கக்கூடிய அன்பு தம்பிகளே! தங்கைகளே! இந்நாளில் நீங்கள் மனதில் இருத்த வேண்டிய செய்தி, இதற்கு முன்பு வரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பது தெரியாது. ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் உங்கள் வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும். இயேசுவாக செயல்பட வேண்டும். வெறுமனே நாங்கள் இயேசுவை வணங்குகிறோம், இயேசுவின் ஆலயத்திற்குச் சென்றோம், திருப்பலியில் கலந்து கொள்கிறோம் என்று சொல்லக் கூடியவர்களாக இல்லாமல், சொல்லுவதை செயலாக்கப்படுத்தக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கு முன்பு வரை ஏனோ தானோ என்று திருப்பலிக்கு வந்திருப்போம். ஆனால் இனி திருப்பலிக்கு வரும்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெறப் போகிறோம் என்ற உணர்வோடு வர வேண்டும். இதற்கு முன்பு வரை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்திருப்போம். ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் ஆண்டவர் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்ள விருக்கிறீர்கள். எனவே கவனத்தோடு இறைவனது வார்த்தைகளுக்கு செவி கொடுக்க வேண்டும். மறையுரை வழியாக சொல்லப்படக்கூடிய கருத்துக்களுக்கு கவனத்தோடு செவி கொடுக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு நல்ல செயலை தெடர்ந்து செய்ய வேண்டும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இவ்வுலகத்தில் ஒருவர் மற்றவரின் நலனுக்காக ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதற்காகவே இருக்கின்றோம். அடுத்தவரின் உதவியோடுதான்இவ்வுலகில் அனைத்தும் இங்கு நடக்கிறது.
நாம் குழந்தையாக பிறந்த போது மருத்துவரின் உதவி தேவைப்பட்டது.
பிறந்த குழந்தையாக நாம் வளர்ந்த போது நம்மை வளர்க்க நமது தாய் தந்தையரின் உதவி தேவைப்பட்டது.
நாம் ஆன்மீக காரியங்களில் வளர்வதற்கு அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ஞானப் பெற்றோர்கள் என பலரின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது.
கல்வி அறிவைப் பெற்றுக்கொள்ள ஆசிரியரின் உதவி தேவைப்பட்டது.
தனக்கென சொல்லிக் கொள்ள ஒரு குடும்பம் தேவைப்படுகிறது. எனவே குடும்பத்திற்கு செல்வோம்.
மரணத்தை நாம் சந்திக்க நேர்ந்தால் கூட நமது உடலை எடுத்து இறுதிச்சடங்கை செய்வதற்கும் அடுத்தவர் உதவி தேவைப்படுகிறது. அடுத்தவருக்கு உதவி செய்வதே வாழ்வின் நோக்கம்.
இயேசு இந்த உலகில் இருந்த போது அதைச் செய்தார். அதையே நீங்களும் செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறார்கள். இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தத்தையும் பெறப் போகின்ற நீங்கள், இனி உங்கள் வாழ்வில் மாற்றத்தை காண்பிக்கவேண்டும்.
இதையே இன்றைய இரண்டாம் வாசகம் சொல்லுகிறது நீங்கள் எதை சொன்னாலும் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவை மையப்படுத்திச்
செய்யுங்கள் என்று. எனவே, இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொன்றிலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்பட வேண்டும் என்பதை மனதில் இருத்துங்கள்.
இதற்கு முன்பு வரை நீங்கள் ஜெபித்து இல்லையா? இனி ஜெபிக்கத் தொடங்குங்கள்.
இதற்கு முன்பு வரை உங்கள் நண்பர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தீர்களா? இனி சண்டைகளை களைந்துவிட்டு நட்போடு பழகுங்கள்.
இதற்கு முன்பு வரை சரியாக படிக்காமல் இருந்தீர்களா? இனி சரியாகப் படிக்க முயலுங்கள்.
இதற்கு முன்பு வரை யாருக்கும் உதவி செய்யாமல் இருந்தீர்களா? இனி உதவி செய்யத் தொடங்குங்கள்.
இன்று இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறப்போகின்ற நீங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு நற்செயலை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டு அதனை தொடர்ந்து செய்திட வேண்டும்.
முதல் முறையாக இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறக் கூடியவர்கள் இவர்கள். எனவே நமக்கெல்லாம் வேலையில்லை என்று பெரியவர்களாகிய நாம் ஒதுங்கிக் கொள்ளலாகாது. இவர்கள் இன்று இந்தச் சடங்கில் இந்த திருவருள்சாதனத்தின் மூலம் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறுவதில் பங்கெடுக்கிறார்கள் என்றால், நாம் இவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். நாம் இவர்களுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.
ஒரு அம்மா சொன்னாங்க என் பையன் எப்ப பார்த்தாலும் கெட்ட வார்த்தையா பேசுரான் பிரதர் என்றார்கள். நம்மில் பலருக்கு இதே கவலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உண்மையில் குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவது இல்லை. கேட்ட வார்த்தைகளைத் தான் பேசுகிறார்கள்.
ஒரு குழந்தை தனது வாழ்வில் 60 சதவீதமான அறிவை தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் பெற்றுக் கொள்கிறது என உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். நம்மிடம் இருந்துதான் குழந்தைகள் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையைத் தாயானவள் மிகவும் அன்பாகவும் அழகாகவும் பராமரித்து வந்தாள்.சிறு குழந்தையாக இருந்த அந்தக் குழந்தை திடீரென ஒரு மிகப்பெரிய கண்ணாடி பாட்டிலை தூக்க முயற்சித்து அதை கீழே போட்டு உடைத்தது. உடனே தாய் ஓடி வந்தாள். குழந்தையை பார்த்துக் கத்தினாள். இதை இனிமேல் எடுப்பியா? இனிமேல் எடுப்பியா? இனிமேல் எடுத்தா அடி விழும் அம்மாட்ட என்று கத்தினாள். பிறகு உடைந்த துண்டுகளை எல்லாம் சரி செய்துவிட்டு குழந்தையும் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தி வைத்துவிட்டுச் சென்றாள். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்தார். அந்த விருந்தினரிடம் சென்று இந்த குழந்தைக்கு முன்பாகவே அந்த தாய், இத்துனூன்டா இருக்கிறான்! எவ்வளவு பெரிய பாட்டில்! அதை ஒத்த ஆளா தூக்கி கீழே போட்டு உடைத்து விட்டான், என்று பெருமையாகச் சொன்னார். குழந்தை இரண்டையும் கவனிக்கிறது. இதே செயலை செய்ததாக சிறிது நேரத்திற்கு முன்பாக திட்டிய தாயானவள் இப்போது அதை வியப்பாகவும் பெருமையாகவும் அடுத்தவரிடம் பேசுகிறார்.குழந்தைக்கு ஒரே குழப்பம் நாம் செய்தது சரிதானா? ஒரு நேரம் நாம் செய்த செயல் தவறு என திட்டி அம்மா இப்போது அதையே வியந்து அடுத்தவரிடம் பாராட்டுகிறார் என்ற எண்ணம் மறுபுறம். குழந்தைகள் நாம் செய்கின்ற ஒவ்வொன்றையும் கவனிக்கிறார்கள். நம்மிடம் இருந்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக்கொண்டதை அவர்கள் வெளிக் காட்டுகிறார்கள். எனவே குழந்தைகளின் வாழ்வு நலமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு நமது வாழ்வு எடுத்துக்காட்டான வாழ்வாக இருக்க வேண்டும்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது தான் சென்ற இடங்களில் எல்லாம் நன்மையே செய்தார் என விவிலியத்தில் வாசிக்கிறோம். அவர் நன்மைகளை செய்தார். செய்ததைச் சொன்னார். நாம் நமது குழந்தைகளுக்கு முன்மாதிரிகளான வாழ்வை காண்பிக்கும் போது தான் நம்மிடம் இருந்து அவர்கள் அதனை உள்வாங்கிக் கொள்வார்கள். இன்றைய நாளில் முதல் முறையாக இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் பெறக்கூடிய இந்த குழந்தைகளுக்காக நாம் ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் நமது செயல்களில் ஆண்டவர் இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை வெளிக்காட்ட முயலுவோம். நம்மிடம் இருந்து வெளிப்படும் செயல்களை காணக்கூடிய நமது குழந்தைகள் கண்டிப்பாக அவர்களும் நல்ல மனிதர்களாக இச்சமூகத்தில் வளருவார்கள் மேலும். இன்று நம் நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும் இதுபோன்ற திருவருட்சாதனங்கள் ஏன் அனைவர் முன்னிலையில் நடக்கிறது என்றால், இதுபோன்ற திருவருள்சாதனங்களை பெறும் நிகழ்வு நடக்கும் போதெல்லாம் ஏற்கனவே இதே திருவருள் சாதனத்தை பெற்றுக்கொண்ட நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழுகின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்த்து நம்மை நாமே சரிசெய்து கொண்டு சரியான பாதையில் பயணப்பட வேண்டும் என்பதற்காகத்தான் திருஅவையில் அனைத்து திருவருள்சாதன நிகழ்வுகளையும் அனைவருக்கும் முன்பாகவே நடத்துகின்றன.
அன்புக்குரிய பெற்றோர்களே! பெரியோர்களே! இளைஞர்களே! நமது குழந்தைகள் நல்ல குழந்தைகளாக இயேசுவின் மதிப்பீடுகளின் படியும் இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளின் படியும் இவ்வுலகத்தில் வாழ வேண்டுமென்றால், நாம் நம்முடைய வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க தொடங்குவோம். நம்மை பார்த்து வளரும் நமது குழந்தைகளும் இயேசுவை பிரதிபலிப்பார்கள். எனவே இந்த திருப்பலியில் முதல் முறை இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறவிருக்கும் நமது குழந்தைகளுக்காக செபிப்போம். அதேசமயம் நமது வாழ்வையும் சீர்படுத்துவோம். நாம் இவர்களுக்கு முன்மாதிரிகளாக மாறுவோம் இவர்கள் இவர்களுக்குப் பின் வரக்கூடிய தலைமுறைக்கு முன்மாதிரிகளாக மாறுவார்கள் இதற்கு நாம் அனைவரும் இணைந்து செய்யவேண்டியது நம்மில் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும் .... நாம் ஒவ்வொருவருமே இயேசுவை நமது தனிப்பட்ட வாழ்வில் பிரதிபலிக்க அருள்வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
பதிலளிநீக்கு