வாருங்கள் சாட்சிகளாக மாறுவோம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்துமே நாம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக இருக்க அழைப்பு தருகின்றன. இயேசு உயிர்த்தார் என்ற செய்தியினை இயேசுவின் சீடர்கள் உலகெங்கும் சென்று அறிவிக்கத் தொடங்கினார்கள். அதனால் பல விதமான இன்னல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேர்ந்தது. பிரச்சனைகளை கண்டபோதெல்லாம், சந்தித்த போதெல்லாம், அவர்கள் மனம் தளரவில்லை. மாறாக துணிவோடு செயல்பட்டார்கள். இயேசுவின் உயிர்ப்பை பற்றி அவர்கள் அறிவிக்கக் கூடாது என தலைமைச் சங்கத்தாரும் பரிசேயர்களும் சதுசேயர்களும் ஒன்று கூடி அவர்களை அழைத்து மிரட்டினார்கள். ஆனால் மிரட்டலுக்கு அஞ்சவில்லை அவர்கள். இயேசுவின் சீடர்கள் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் அறிவிக்காமல் எங்களால் இருக்க இயலாது என்று கூறியவர்களாய், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றிய செய்தியை படைப்பிற்கெல்லாம் அறிவித்துக் கொண்டே பயணித்தார்கள்.
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் பல நேரங்களில் நாம், நாம் அறிந்த உண்மையையும், நாம் அறிந்த நீதியையும், நாம் அறிந்த சமத்துவத்தையும், மற்றவர்களோடு பகிர்வதற்கு தயக்கம் காட்டுகிறோம். நாம் அறிந்த உண்மையை எங்கு வெளியே சொல்லும் பொழுது உண்மையைக் கூறியதால் நாம் துன்புறுத்தப்படுவோமோ? நீதியைப் பற்றி பேசுவதால் பலரின் இன்னலுக்கு ஆளாகி விடுவோமோ? என்ற அச்சத்தின் காரணமாக, எண்ணத்தின் காரணமாக பல நேரங்களில் நாம் அதனை செய்ய முன்வருவதில்லை. பல நேரங்களில் நாமும் சராசரி மனிதர்களைப் போல தான் உண்டு, தன் வீடு உண்டு, தன் வேலையுண்டு, என்றவாறு பல நேரங்களில் அடுத்தவருக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டும் காணாதவர்களாக உண்மை மறைக்கப்பட்டு பொய்மை தலை விரித்தாடும் போது கூட கண்டும் காணாதவர்கள் போல இருந்து கொண்டு இருக்கக் கூடிய சூழலில் நாம் இருக்கிறோம். இத்தகைய சூழ்நிலைகளில் இருந்து நாம் விடுபட்டு ஆண்டவர் இயேசுவின் சீடர்களை போலவே நாமும் கண்டதையும் கேட்டதையும் நாம் இச்சமூகத்தில் கண்ட நீதியையும் உண்மையையும் அறிவிக்கவும் பறைசாற்றவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் செயல்பட இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக, இச்சமூகத்தில் நடக்கக் கூடிய நன்மைகளை துணிவோடு துணிச்சலோடு இயேசுவின் சீடர்களை போல அறிவிக்கக் கூடிய நல்ல ஒரு பணியாளர்களாக, இயேசுவின் சீடர்களாக மாறி நாமும் இயேசுவின் சீடர்கள் என்று சாட்சியம் பகர, நல்ல ஒரு சாட்சிகளாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக