ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ஆயனுடைய ஆடுகளாக மாறிட... (26.4.2021)

ஆயனுடைய ஆடுகளாக மாறிட...

நன்மைகள் பெருக நல்லெண்ணம் வளர்க்கும் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு கணவனும் மனைவியும் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரினார்கள். அவர்களை விசாரித்த நீதிபதி இறுதியில் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் நீங்கள் இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். சற்று நேரம் ஆலோசனை செய்த இருவரும் மீண்டும் நீதிபதியிடம் வந்து நின்றார்கள். நீதிபதி அவர்களிடம் எல்லாவற்றையும் சரிசமமாகப் பிரித்து விட்டீர்களா? என்று கேட்டார். அவர்கள் நீதிபதியைப் பார்த்து எங்களுக்கு ஒரு வருட காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டார்கள். நீதிபதியும் மிகுந்த ஆச்சரியத்துடன் ஏன்? என்று கேட்டார். அப்போது அவர்கள், எங்களுடைய சொத்துக்களையும் நில புலன்களையும் நாங்கள் சரிசமமாகப் பிரித்து விட்டோம். ஆனால் எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  அவர்களை இப்போது சரிசமமாக பிரிக்க இயலாது. எனவே இன்னும் ஓராண்டு காலம் இணைந்து வாழ்ந்து நான்காவது குழந்தையுடன் வந்த பின்னர் குழந்தைகளையும் சரிசமமாக பிரித்துக் கொள்கிறோம் என்று கூறினார்களாம். இவர்கள் குழந்தைகளை மையப்படுத்தி இணைந்து விடுவார்கள் என்று நம்பிய நீதிபதி அவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டார். 

ஆம் அன்புக்குரியவர்களே! 
ஒருவரை மற்றவரோடு இணைப்பதற்கான வழிகளை இறைவன் நமக்காக முன்னெடுக்கிறார். ஆனால்,  அதனை உணராமல் பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை வாய்ப்புகளையே பலநேரங்களில் மனித இனம் விரும்பி, தேடிக் கொண்டிருக்கிறது. எனவே தான் இன்று விவாகரத்துக்காக ஓடக் கூடிய கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நாளில் இறைவன்,  நமக்கு உணர்த்தக் கூடிய செய்தி என்னவென்று ஆராயும் போது,  தொடக்கத் திருஅவையிலே, புனித பேதுருவுக்கு இறைவன் காட்சி வழியாக வெளிப்படுத்திய வெளிப்பாடுகளை இன்று நாம் வாசிக்க  கேட்கின்றோம்.  நமது வாழ்வில் பலவிதமான காரியங்கள், நமது உள்ளத்தில் எழ,  அந்த எண்ணங்களின் அடிப்படையிலேயே அனைத்தும் நிகழ வேண்டும் என ஆசைப்படுகின்றோம். இவ்வாறாக இன்று நமது உள்ளத்தில் நாம் விரும்புவதை எல்லாம் இறைவனும் எண்ணுகிறாரா? என்பது தான் இன்று நமக்கு முன்பாக இருக்கக் கூடிய கேள்வி. பெரும்பாலான நேரங்களில் நாம் ஒன்றை நினைத்துக் கொண்டு இது இறைவனது விருப்பம் என எண்ணிக் கொண்டிருக்கிறோம். இறைவனது திட்டம் என பயணிக்கின்றோம். ஆனால் உண்மையிலேயே நாம் இறைவனது விருப்பத்தையும் திட்டத்தையும் உணர்ந்து கொள்கின்றோமா? தொடக்க திருஅவையில் இதே போன்ற சிக்கல்கள் தான் நிலவிக் கொண்டிருந்தன. புறவினத்தாரை   தீண்டத்தகாதவர்கள் என்றுதான் கருதினார்கள் யூதர்கள். யூதர்கள் மட்டுமே என்ற மனநிலை அவர்களிடத்தில் மேலோங்கி காணப்பட்டது. இந்த நேரத்தில் இறைவன் காட்சி வழியாக பேதுருவோடு உரையாடுகிறார். பேதுருவுக்கு பலவற்றை காண்பித்து அவற்றை எடுத்து உண்ணச் சொல்கிறார். ஆனால் பேதுரு கடவுளிடம், அவையெல்லாம் தீட்டானவை என்று கூறுகிறார். அப்போது ஆண்டவரின் பதில் மொழி, "எனது பார்வையில் நான் உனக்குத் தருவது உனக்குத் தீட்டாகத் தெரிகிறதா?  என்ற கேள்வியை எழுப்புகிறார். அப்போது பேதுரு இவ்வாறு புரிந்து கொள்கிறார்.  இயேசுவை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இயேசுவை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அனைவருமே ஒன்றானவர்கள்.  இங்கு மதத்தால், மொழியால் இனத்தால் அவர்களைப் பிரித்து பார்ப்பது தவறு என்பதைப் புரிந்து கொள்கிறார். எனவே புறவினத்தாரை ஏற்றுக்கொள்வதில் அவரிடமிருந்த ஒரு வித தயக்கம் அங்குக் களையப்படுகிறது. களைந்து அவர் அனைவரையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நபராக மாறுகிறார். யூதர்களை மட்டும் முன்னிறுத்திச்் சென்ற தொடக்ககால திருஅவையில், இந்த சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் இயேசு ஒரு காட்சி வழியாக பேதுருவுக்கு சுட்டிக் காண்பித்து, மாற்றத்தை உருவாக்குகிறார். பேதுரு இந்த உண்மையை உணர்ந்து கொள்வதற்கு முன்பு வரை தான் கொண்டிருந்த யூத இனம் சார்ந்திருந்த எண்ணங்களின் அடிப்படையில், அவைகளையே  கடவுளுக்கு உகந்தவை என எண்ணிக் கொண்டிருந்தார். அதையே நடைமுறைப்படுத்தவும் முயற்சித்தார். ஆனால் இயேசு அவரோடு காட்சியின் வழியாக, உரையாடியதன் வழியாக இயேசுவின் உண்மையான நோக்கத்தையும் எண்ணத்தையும் உணர்ந்து கொண்டார். பல நேரங்களில் நாமும் நமது வாழ்வில் இறைவனது விருப்பம் என எண்ணிக்கொண்டு நமது விருப்பங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்போம். ஆனால் நாம் முன்னெடுத்து செயல்படுத்தக் கூடிய செயல்கள் அனைத்தும் நமது சுய விருப்பமே தவிர அவை இறைவனது விருப்பம் இல்லை என்பதை நாம் ஏதேனும் ஒரு வழியில் ஏதேனும் ஒரு தருணத்தில் நாம் உணர்ந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். அப்படி உருவாகும் போது உண்மையாலுமே இறைவனது விருப்பம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு நாம் செயல்படுவோமாயின் நாம் ஆயனுடைய குரலை அறிந்த ஆடுகளாக இருப்போம். அதை உணர்ந்து கொள்ளாத போது நாம் ஆயனது குரலை அறியாத ஆடுகளாக தான் இருப்போம். ஆயன் என்பவன் பின்னிருந்து ஆடுகளை முன்னோக்கிச் செல்ல அனுமதித்து,  பின்னிருந்து அதனை மேற்பார்வை செய்து கொண்டு வரக் கூடியவர். எனவே தான் பல நேரங்களில் இறைவன் நம்முடைய எண்ணங்களை தொடக்கத்தில் அவர் நிறுத்துவது இல்லை. நமது எண்ணங்களின் படி நம்மை செயல்பட விட்டு அதன் வழி நமக்கு அனுபவங்களையும் வாழ்க்கை பாடங்களையும் கற்பிக்கக் கூடிய ஒரு நல்ல ஆயனாக இருந்து மந்தையாகிய நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எனவே இன்றைய நாளில் நாம் ஆயனது குரலை உணர்ந்துகொண்ட ஆடுகளாக அவரது மந்தையில் பயணம் செய்கிறோமா? அல்லது ஆயனுடைய குரலை அறியாத ஆடுகளாக அவரது மந்தையில் பயணிக்கின்றோமா?  என கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். நாம் ஒருவேளை ஆயனுடைய குரலை அறியாத ஆடுகளாய் இருப்போமாயின் இன்றைய நாளில் எனது குரலைக்் கண்டு கொள்ள நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு செயல்பாடுகளையும் சீர்தூக்கி பார்த்து ஆயனது குரலுக்கு ஏற்றவகையில் செயல்படக்கூடிய ஆயனுடைய ஆடுகளாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...