வானதூதரின் முகம் போல்!
இறை வல்லமையால் ஒளியூட்டப்பெறும் அன்பு உள்ளங்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருமுறை மதியம் மறைக்கல்வி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிய சிறுவன் தன் தாயிடம், அம்மா! கடவுள் மிகவும் அழகாக இருப்பார்! அவரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டான். தாய், இல்லை என்று சொன்னாள். கடவுள் நல்லவர் அம்மா. தன்னைத் தேடுவோருக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவார் அம்மா! என்று தன் தாயிடம் கூறிய அச்சிறுவன் மீண்டும் தாயிடம், எனது மறைக்கல்வி ஆசிரியர் கூறிய கடவுளை இன்று நான் காண விரும்புகிறேன். அவருக்கு நான் எதையாவது கொடுக்க வேண்டும்! பின்னர் அந்த கடவுளை பற்றி நான் உங்களிடம் பேசுவேன், என்று கூறியவனாக தனது மதிய உணவை எடுத்துக்கொண்டு அந்த வீட்டைக் கடந்து அருகிலிருந்த கடை வீதியையும் கடந்து அருகில் இருந்த ஒரு பூங்காவின் வழியாகச் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அந்தப் பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு முதியவர் மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டே அச்சிறுவர்கள் விளையாடுவதை இரசித்துக் கொண்டிருந்தார். அவரது அருகில் சென்ற அச்சிறுவன் அவரின் புன்னகையை கண்டதும் தானும் அவரை நோக்கி புன்னகை செய்தான். அந்த புன்னகையில் தனது பயணத்தின் களைப்பை மறந்தான். அவரோடு அவனுக்கு பேச வேண்டும் போல இருந்தது. உடனே அவரின் அருகில் அமர்ந்து அவரோடு உரையாட ஆரம்பித்தான். அவரது உற்சாகமூட்டும் வார்த்தைகளில் மிகவும் மகிழ்ந்தான். பின்னர் அவனுக்கு சற்று பசி எடுப்பது போல் தோன்றவே தனது மதிய உணவை பிரித்தான். அந்த முதியவருக்கும் தன்னுடைய உணவை வழங்கியவனாக தானும் அந்த உணவை உண்டான். அவரது புன்னகை தவழ்ந்த முகத்தின் அன்பு நிறைந்த வார்த்தைகளில் அவன் மிகுந்த ஆனந்தம் அடைந்தான். அந்த முதியவரும் சிறுவனோடு அன்போடு மகிழ்வோடும் உரையாடினார். அச்சிறுவன் கொண்டுவந்த உணவின் ஒரு பகுதியை தானும் உண்டு மகிழ்ந்தார். இருவரும் மாலையில் அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.
அச்சிறுவன் மகிழ்வுடன் தன் தாயிடம் வந்து, அம்மா நான் கடவுளைப் பார்த்தேன். அவரோடு பேசி விளையாடி மகிழ்ந்தேன். அவருக்கு மிகவும் வயதாகி விட்டது. அவரது புன்னகை அன்பு நிறைந்த புன்னகை. அது அனைவரையும் அன்புடன் நோக்கி பார்க்கும். அனைவரின் உள்ளத்திலும் மகிழ்வை ஊற்றெடுக்கச் செய்யும் என்று கூறினான்.
பூங்காவில் இருந்து மிக மெதுவாக தன்னுடைய வீடு நோக்கிச் சென்ற அந்த முதியவர் தன்னுடைய மனைவியை பார்த்து இன்று நான் கடவுளை கண்டேன். அவர் இளமைத் துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் தன்னுடைய பணிகளை செய்கிறார் என்று கூறினார்.
இன்றைய முதல் வாசகத்தில் புனித ஸ்தேவான் தூய ஆவியானவரின் ஆற்றல் பெற்றவராக இறை அருளும் வல்லமையும் நிறைந்தவராக பல்வேறு செயல்களைச் செய்கிறார். இவன் திரு சட்டத்திற்கு எதிராக செயல்படுகின்ற பொய் சாட்சிகள் அவரை நோக்கி கத்தினாலும், இதை வல்லமையால் ஆட்கொள்ளப்பட்ட அவரின் மூலமும் அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கு வானதூதரின் முகம் போல பிரகாசமாக இருந்தது என இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவரால் உணவு ஊட்டம் பெற்ற மக்கள் அவரைத் தேடிச் செல்வதை நாம் காண்கிறோம். அப்பொழுது ஆண்டவர் கூறுகிறார், நீங்கள் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். அழியாத நிலை வாழ்வு தரும் உணவிற்கே உழையுங்கள் என்று கூறுகிறார். எனவே அங்கிருந்த மக்களும் கடவுளுக்கு ஏற்றவையாக எமது செயல்கள் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரைக் கேட்டனர்.
இன்றைய சிந்தனையின் தொடக்கத்தில் நாம் கண்ட பூங்காவில் சந்தித்த முதியவரும் சிறுவனும் தன்னுடைய அன்பான வார்த்தைகளாலும் கனிவான பார்வையாலும் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டி உதவிக்கரம் நீட்டி ஆண்டவரை தேடும் காரியத்தில் மகிழ்வான அனுபவம் பெற்றனர்.
இன்றைய முதல் வாசகத்தில் தூய ஸ்தேவானின் முகம் அவர் ஆற்றிய அரும்செயல்களாலும் நற்செயல்களாலும் அவரின் முகம் பிரகாசிக்க கண்டனர்.
ஆண்டவர் இருக்கேன் பணிந்து அவரது பணிகளை ஆற்றுகின்றன ஒவ்வொருவரின் முகமும் ஆண்டவரின் ஆசியால் வல்லமையால் நிரப்ப பெற்று வானதூதரின் முகம் போல பிரகாசமாக ஒளி வீசும்.
இன்று நாம் வாழும் இவ்வுலகில் நாம் சந்திக்கும் நமது அன்றாட நிகழ்வுகளில் நாம் ஆண்டவரின் துணையை நாடி அவரது அன்பில் நிறைந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருகின்றோமா? என்பதை சிந்திப்போம்.
ஆண்டவரோடு இணைந்து இருப்பவர்கள் ஒருபோதும் வெட்கத்திற்கு உள்ளாவது இல்லை, என்ற வார்த்தைக்கு ஏற்ப நமது வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்களுக்கு மத்தியிலும் ஆண்டவரின் அருள் நிறைந்த வல்லமையை நம்மை தாங்குகிறது என்பதை உணர்ந்தவர்களாக வானதூதரின் முகம் போல மகிழ்வும் அருளும் நிறைந்தவர்களாக நமது இல்லங்களிலும் நம்மைச் சுற்றி வாழ்கின்ற ஒவ்வொருவரிடமும், நன்மை தனங்கள் வெளிப்பட நாமும் இறைவனின் கருவியாகிட இறையருளை நிறைவாக வேண்டி இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக