வியாழன், 29 ஏப்ரல், 2021

இன்று மீட்பு செய்தி என்பது என்ன? (30.4.2021)

இன்று மீட்பு செய்தி என்பது என்ன?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்று வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் நமக்கு தான் மீட்புச் செய்தி தரப்பட்டதாக புனித பேதுரு கூறுகிறார். இன்று எங்கு திரும்பினாலும் மரண ஓலங்களே கேட்கின்றன. நாளுக்குநாள் செய்தித்தாளை திருப்பும் போதெல்லாம்,  இறந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு கூட ஆள் இல்லாத நிலையில் திண்டாடும் மக்கள். நாளுக்கு நாள் கொரோனா தொற்று காரணமாக பலியாகக் கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இறந்த சடலங்களை எரிப்பதற்கு விறகு பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தியை நாம் செய்தித்தாளில் வாசித்தோம்.  இறந்துபோன மனைவியின் உடலை ஒருவன் சைக்கிளில் வைத்துக்கொண்டு, அடக்கம் செய்ய யாரும் வரவில்லை என்பதற்காக, சைக்கிளில் சுமந்து கொண்டு சென்றான் என்ற செய்தியையும் செய்தித்தாளிலிருந்து நாம் அறியலாம். இறந்து போன தாயின் உடலை மகன்கள் இருவரும்  இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார்கள் என்ற செய்தியையும் செய்தித்தாள்களும் ஊடகங்களும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. நிகழக்கூடிய அனைத்துச் சூழல்களையும் பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது நடக்கக் கூடிய அனைத்து சூழல்களும்  நமக்கு நம்பிக்கையை தரவில்லை.  வாழ்வு மீதான அச்சத்தையும் இறப்பு எதார்த்தமாக நடக்கக் கூடியதாகவும், எப்போது இறப்பு யாரை நெருங்கும் என யாரும் அறியாத வண்ணம் நாளுக்கு நாள் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதை நாம் காணமுடிகிறது.  ஒருபுறம் இப்படி இருக்க,  இன்னொருபுறமோ இறந்த சடலங்களை வைத்து அரசியல் நடக்கிறது. இறப்புச் சடங்கை செய்வதற்கு‌ அதிகமான பணம் தேவைப்படுகிறது. இதுபோன்று கொரோனா அவல நிலை  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில் இறைவன் நமக்குத் தரும் மீட்புச் செய்தி என எதை நாம் பார்ப்பது? என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழலாம்.
   ஏனென்றால் மீட்பு செய்தி நமக்கு தரப்பட்டது என்கிறார் பேதுரு. நமக்கு எது மீட்பு செய்தி? நிகழக்கூடிய  அனைத்து சூழ்நிலைகளும் நமக்குத் தருகின்ற செய்தி, "நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்"! என்பதாகும். நிகழக் கூடிய அனைத்து சூழல்களும் இன்று நமக்குக் கற்பிக்கும் பாடம், நமக்குள் இருக்கும் மனித நேயத்தை சாகடித்து விடக் கூடாது என்பதாகும்.  
                           மனிதன் மனிதநேயம் கொண்டவனாக நம்பிக்கையோடு இன்னல்களுக்கு மத்தியில் துணிந்து செயல்பட வேண்டும் என்ற பாடம் தான் இன்று நம் அனைவருக்கும் மீட்புச் செய்தியாக தரப்படுகிறது.  நோய்த்தொற்று அச்சம் காரணமாக, மனிதனுக்குள் இருந்த மனித நேயம் சிறிதுசிறிதாக அழிந்து கொண்டே செல்கின்ற நிலை உருவாகிக்கொண்டே செல்கிறது. இந்நிலை தொடர்ந்தால் மனிதன் மனிதரிடமிருந்து தன்னை ஒதுக்கி கொள்ள முயல்வான்.
இன்றே பலர் அவ்வாறு தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலை தொடர்ந்தால் மனிதநேயம் என்பது மறைந்து போகும்.  இக்கட்டான இச்சூழ்நிலையில்  நாம் இறைவன் மீது நம்பிக்கையை ஆழப்படுத்த வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு மனித நேயத்தோடு நம்மாலான சின்னஞ்சிறு உதவிகளை செய்ய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் இறைவனது  மீட்பு திட்டத்தில் பங்கு பெற முடியும். இன்றைய உலகில் நடக்கும் ஒவ்வொரு சூழலுமே  நமக்கு ஏதோ  ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது. இன்று நிலவும் சூழலும் நாம் நம்மை, சுய ஆய்வு செய்யவும், நமக்குள் இருக்கும் மனிதநேயத்தை கேள்விக்குட்படுத்தி பார்க்கவும், நமது நம்பிக்கையை ஆழப்படுத்தவும், அழைப்பு தருகின்றன. 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும்,  இறைவன் உள்ளம் கலங்க வேண்டாம்,  என்ற நம்பிக்கை செய்தியினை தருகிறார்.  இந்த நம்பிக்கை செய்தி என்பது இறைவன், ‌ நாம் அனைத்து விதமான இன்னல்களுக்கு மத்தியிலும்,  அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு இவ்வுலகத்தில் நம்மால் ஆன சின்னஞ்சிறு உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்து வழிகாட்டக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியினை தருகிறது. ஏனென்றால் இறைவன் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக அவர் நமக்கு வழி காட்டுவேன் என்கிறார்.  நமக்கான வழியை தயார் செய்கிறேன் என்கிறார். அவரைப் பின்பற்றி வர நம்மை அழைக்கிறார். இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது நோயாளிகளைக் கண்டு  ஒதுங்கி நிற்க வில்லை. அவர்களைத் தேடிச் சென்றார். தன்னால் ஆன உதவியைச் செய்தார். அவர்களைத் தொட்டு சுகப்படுத்தினார்.  

 நமது தொடுதல் மற்றவரை சுகப்படுத்துமா? என்ற கேள்வி நமக்குள்  எழலாம்!   தொடுதல் என்பது இன்று நமக்கு நோயினை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் ஆழமாக மனதில் பதிந்து இருக்கலாம்.   ஆனால் நமது வார்த்தைகள் அடுத்தவரை தொட வேண்டும். நமது சேவைகள் அடுத்தவரை தொட வேண்டும். நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு உதவிகள்,  நமது பாதுகாப்பை மையப்படுத்திக் கொண்டு , நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு உதவிகள் மூலம், அடுத்தவரின் உள்ளத்தை தொடலாம். துன்புறுவோருக்கு துணை நிற்கலாம். 
ஆறுதலான வார்த்தைகளை கொடுக்கலாம். அவர்களுக்கு இயேசுவைப் போல வழிகாட்டலாம்.  எனவே நிகழும் இக்கட்டான இச்சூழ்நிலையில், சூழலைக் கண்டு அஞ்சி கலங்காது, ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களாக,  நாம் இச்சமூகத்தில் தொடர்ந்து,  நல்ல மக்களாய் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், தொடர்ந்து நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க கூடிய இயேசுவின் உண்மை சீடர்களாகிட இறையருளை வேண்டுவோம்.

2 கருத்துகள்:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...