ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா - மறையுரை
இயேசு புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார். எனவே அவர் உயிர்ப்பெற்றெழுந்தார்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்று நாம் திருஅவையோடு இணைந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். எனவே உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாக்கி மகிழ்கிறேன்.
ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திலே மிகவும் கொடூரமான ஒரு மனிதன் இருந்தான். உலகத்தில் சொல்லக்கூடிய அத்தனை தீய பழக்கங்களையும் கொண்டிருந்தவன். அவன் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அதே காட்டுப்பாதையில் எதிர்முனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் நடந்து வந்தாள். நடுக் காட்டை அடைந்தபோது அவளுக்கு பேறுகால வலி வந்தது. துடிதுடித்தவளாய், என்ன செய்வது? என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமைதியின்றி நிலை தடுமாறி விழுந்தாள். பிரசவ வலி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். யாராவது வந்து நம்மை காக்க மாட்டார்களா? என்ற நினைப்போடு வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்ணில் பட்டது, இந்த சமூகத்தால் அயோக்கியன் என கருதப்பட்ட அந்த கொடூர மனிதன் மட்டுமே. இவனையா நான் பார்க்கவேண்டும்! இவன் எப்படி எனக்கு உதவி செய்வான் என்று அந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஒருபுறம். மறுபுறமோ வலியும் வேதனையும். துடிதுடித்துக் கொண்டிருந்தாள். அவ்வழியே வந்த அந்த கொடூர குணம் கொண்டவன் அந்தப்பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் துடிப்பதை சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய கைலியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இதற்கு முன்பு வரை அவன் அவ்வாறு செய்ததே கிடையாது. இவனுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. இருந்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான். குழந்தையை கையில் எடுத்தான். தான் கையில் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய கூரிய கத்தியை எடுத்து, தொப்புள் கொடியை வெட்டினான். இதற்கு முன்பு வரை இவன் அப்படி செய்ததே கிடையாது. ஆனால் அதை அன்று அவன் செய்தான். அதன் பிறகு தாய் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருக்கும் போது, ஓடிச்சென்று அருகிலிருந்த ஒரு குட்டையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தான். அந்த தாயின் வாயில் அந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தான். அவளது கை சட்டையை சற்று விலக்கி குழந்தைக்கு உணவருந்தும் வகையில் அந்த குழந்தையை அப்பெண்ணின் மார்பகம் பக்கம் வைத்தான். இத்தகைய கதையை எழுதிய வால்ட் விட்மன் என்ற ஆசிரியர், இந்த கதைக்கு மனிதன் பிறந்தான் எனப் பெயரிட்டார். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே மரணம் என்ற ஒன்றை சந்தித்தே தீர வேண்டும். மரணத்தை சந்திக்கின்றன தருணம் நமது வாழ்வு முடிந்து விடுவது அல்ல. மாறாக வாழ்வு துவங்குகிறது. மரணம் விண்ணகத்தின் திறவுகோல் என்று கூறுவார்கள். இந்த உலகம் என்பது ஒரு மாயை. நாமெல்லாம் பயணிகள் போல இங்கு வந்தோம். நாம் வந்ததன் நோக்கம் என்னவென்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் இந்த மண்ணகத்தை விட்டு நமது உயிரானது பிரிந்து செல்லும். அப்போது நாம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்வோம் என்ற வகையில், இறைவனிடம் சென்று சேருவோம் என்று இலக்கியங்கள் கூறுவார்கள்.
நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இறப்பு என்பது ஒரு மனிதனுக்கு பலவிதமான பாடங்களை கற்றுத் தருகிறது. ஞானியரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவேயிருக்கும் என சபை உரையாளர் 7: 4 புத்தகம் கூறுகிறது. இறப்பு நடந்த வீட்டிற்கு செல்பவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கையில் தாங்களும் சந்திக்க வேண்டிய நிகழ்வு இது என்ற பாடத்தினை உள்வாங்கிக் கொள்கிறார்கள். கருவறையில் பிறந்த மனிதன் மீண்டும் கல்லறையில் தான் புதுப் பிறப்பு அடைகிறான். தான் காணும் ஒருவரின் இறப்பில் தான் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டவனாய் புதுப்பிறப்பு அடைகிறான். அங்கு தான் ஒரு மனிதன் மீண்டும் பிறக்கிறான். இறந்த மனிதர்களை எல்லாம் அடக்கம் செய்வார்கள். அவர்கள் எல்லாம் புதைக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக விதைக்கப்பட்டவர்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து 33 ஆண்டு காலமாக இம்மண்ணில் வாழ்ந்த போது, இச் சமூகத்தில் நிலவிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். தவறுகளை கண்டித்தார். இயேசுவைக் கொன்று விட்டால் போதும், இந்த உலகத்தில் புரட்சி என்பது இருக்காது என்ற சிந்தனையோடு, தங்களின் வாழ்வை அழிக்க வந்தவன் என்ற எண்ணத்தோடு, பரிசேயர்களும், சதுசேயர்களும், உரோமை ஆட்சியாளர்களும், தங்களின் சூழ்ச்சியால் இயேசுவுக்கு மரணதண்டனையை பரிசாகக் கொடுத்தனர், ஒரு கள்வனைப் போல, கொடூரமான சிலுவை மரத் தண்டனையை கொடுத்து, இயேசுவை வானுக்கும் பூமிக்கும் நடுவே சிலுவையில் தொங்கவிட்டுக் கொனள்றனர். இயேசு நமக்காக சிலுவையில் தன் இன்னுயிரை இழந்தார். இயேசுவின் உயிரைப் பறித்தவர்கள் எல்லாம் நினைத்தார்கள், நம்மை சுட்டிக்காட்டியவனை சுவடு இல்லாமல் செய்து விட்டோம்;. ஆனால் இயேசு அன்று புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார்.
விதைக்கப்பட்ட விதையானது எப்படி மண்ணுக்குள் இருந்து அந்த மண்ணை முட்டிக் கொண்டு மேலெழுந்து வந்து விருட்சமாக நிற்கிறதோ அதுபோல கல்லறையில் அடக்கப்பட்ட இயேசுவும், கல்லறைகளை பிளந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அதன் விளைவே இன்று நாம் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஆண்டவரின் உயிர்ப்பு நமக்கு எதை சொல்லித் தருகிறது? ஏன சிந்திப்போமாயின். ஆண்டவரின் உயிர்ப்பு இன்று நமக்கு அச்சத்திலிருந்து வெளிவருவதற்கான ஆற்றலை தரக்கூடியதாக அமைகிறது. இயேசு இறந்த பிறகு சீடர்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாது, அஞ்சி நடுங்கி மாடி வீட்டின் அறையிலேயே முடங்கிக் கிடந்தார்கள். தூய ஆவியானவரின் தூண்டுதலால் துணிச்சல் பெற்றவர்களாக, ஆண்டவர் இயேசு உயிர்த்தார், அவரைக் கொன்றது இந்த பரிசேயர்களும் சதுசேயர்களும். அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார், என்ற நற்செய்தியை துணிச்சலோடு மேடைக்கு மேடை, வீதிக்கு வீதி, தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் ஆண்டவர் இயேசுவைப் பற்றி துணிச்சலோடு அறிக்கையிட்டார்கள் அவரின் சீடர்கள்.
உங்களிடத்தில் ஒரு கோள்வி எழுப்பலாம் என எண்ணுகிறேன். நாம் வாழும் இந்த உலகத்தில் நெடுங்காலமாகவே தொடரக்; கூடியது எது? பிறப்பும் இறப்பும் மட்டுமே நெடுங்காலமாக நம்மை தொடர்ந்து வருகிறது. இதுதான் இவ்வுலகில் புதுமையானது. இது தான் இவ்வுலகில் பழமையானதும் எனலாம். எந்த காலத்தை திருப்பினாலும் அதில் பிறப்பும் இறப்பும் உண்டு. இனி வரக்கூடிய காலங்களிலும் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. இறப்பு என்பது முடிவல்ல. அது உயிர்ப்பின் தொடக்கம். இறைவனை அடைவதன் தொடக்கம்.
எத்தனையோ மனிதர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு, பலவிதமான நல்ல செயல்களை இச்சமூகத்தில் செய்த போதும் கூட, அவர்களையெல்லாம் எப்படியாவது அடக்கி கொன்று குவித்து விட வேண்டும். இவர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று பல காரணங்கள் கூறி, பலரை இச்சமூகம் கொன்றொழித்தது. கொன்றொழித்து விட்டு மார்தட்டிக் கொண்டது, நம்மை எதிர்த்தவன் ஒழிந்து போனான் என்று. ஆனால் அவர்கள் யாரும் மறைந்து போகவில்லை. அவர்கள் யாரும் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டார்கள் இயேசுவைப்போல. அவர்களைப் பின்பற்றி இன்று பலரும் பெருக்கி இருக்கிறோம். இன்றும் சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்கள் இம்மண்ணில் நிற்கிறார்கள் என்றால், அதற்கான விதை ஏற்கனவே விதைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அஞ்சி நடுங்கி வாழ்ந்த சீடர்கள் கூட, இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு, ஆண்டவர் இயேசு உயிர்த்தார் என்ற செய்தியை, மகிழ்ச்சியோடு அறிவித்தார்கள். இன்று நாம் வாழும் சமூகத்தில், நம்மிடையே இருக்கக்கூடிய அச்சங்களை களைந்து, நீதிக்காகவும் உண்மைக்காகவும், மரணமே பரிசாகக் கிடைத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்டு நாம் பயணிக்கும் போது, ஆண்டவர் இயேசுவைப் போல உயிர்த்தவர்களாய், விதைக்கப்பட்டவர்களாய், பலருக்கும் பயன்தரக்கூடிய விருட்சமாக, மாறுவதற்கு நமது வாழ்வு நல்லதோர் எடுத்துக்காட்டான வாழ்வாக அமைய வேண்டும்.
திருத்தூதர் பணிகள் 12: 31ஆம் இறை வசனத்தில் நாம் வாசிக்கின்றோம்.. இயேசு உயிர்த்தார் என்ற சீடர்களின் அருளுரைகளை கேட்டவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களிடத்தில் அன்று சீடர்கள் சொன்ன பதில், மனம் மாறுங்கள். திருமுழுக்கு வழியாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். இன்றும் இந்த உயிர்ப்பு பெருவிழா நமக்கும் அதே அழைப்பை தான் கொடுக்கிறது. நாம் நமது கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நம்மை நாம் சரி செய்து கொள்வோம். துணிச்சல் உள்ளவர்களாக நல்ல மனிதர்களாக இச்சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்கக் கூடியவர்களாக, இயேசுவைப் போல, மரணமே பரிசாகக் கிடைத்தாலும், இறுதிவரை நீதிக்காகவும் உண்மைக்காகவும், ஏழை எளியவர்களுக்காகவும், சட்டத்தால் நசுக்கப்படக்கூடிய மக்களுக்காகவும், உரிமை குரல் கொடுத்துக் கொண்டே பயணிக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைக்கின்றன.
இவ்வாறு பயணிக்க வேண்டுமென்றால் நம் மனதில் இருக்கக்கூடிய அச்ச உணர்வு அடியோடு அழிக்க வேண்டும். அது அழிந்தால் மட்டுமே நாம் புதுப் பிறப்பு அடைய முடியும். இயேசுவில் உயிர்ப்பு பெற முடியும். ஒரு காலம் இருந்தது, அப்போது சிறு குழந்தைகளாக நாம் இருந்தோம். கீழே விழுவோம், வலிக்காது, ஆனால் வலித்தது போல நாம் அழுவோம். தாய் ஓடிவந்து அரவணைப்பாள். தந்தையோடு வந்து தூக்குவார். சகோதர சகோதரிகள் நம்மீது இரக்கம் கொண்டு அன்போடும் பாசத்தோடும், நான் விழுந்த இடத்தை அடித்துவிட்டு நம்மை தூக்கி கொஞ்சுவார்கள். ஆனால் இன்று சட்டங்களாலும், அநீதியாலும், உண்மைக்கு எதிரான செயல்களாலும் நாளுக்கு நாள் நாம் அனைவரும், அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிக்கப்படும் போது நமக்குள் வலியை உருவாக்குகிறது. ஆனால் இப்போதெல்லாம் வலித்தாலும் வலிக்காதது போல, காட்டிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம். நாம் இருக்கும் இடத்தில் எத்தனையோ அநீதிகள், எத்தனையோ இன்னல்கள், எத்தனையோ முரண்பாடான செயல்பாடுகள், நடைபெறும் போது நம் கண் முன்பாக நடக்கும் இந்நிகழ்வுகளை கண்டும் காணாதவர்களாக, கேட்டும் கேட்காதவர்களாக இருக்கிறோம்.
நாம் வாழும் இவ்வுலகில் நம் அருகில் இருக்கக் கூடியவர்கள், தங்களுடைய வாழ்வின் இன்ப துன்ப நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்களா? அவர்களுக்கு நாம் ஒரு நம்பகத் தன்மையை உருவாக்கி கொடுத்திருக்கி;றோமா? செய்யாத ஒரு தவறுக்காக, நம்மில் ஒரு சகோதரர் துன்புறும் போது அவருக்கு நாம் துணை நின்று இருக்கின்றோமா? எங்கு நாம் அவருக்காக பேசினால், அவரோடு இணைந்து நின்றால், நமக்கு துன்பம் வந்து விடுமோ? என்ற அச்ச உணர்வின் காரணமாக கண்ணுக்கு முன்பாக இச்சமூகத்தில் நிகழக்கூடிய பலவிதமான அநீதிகளையும் கண்டும் காணாமல் எப்படியாவது, நமது வாழ்வை நகர்த்த வேண்டும்; என்ற நோக்கத்தோடு பயணிக்கக்கூடியவர்களா நீங்களும்? நானும்? கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிப் பார்ப்போம்.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா இன்று அச்சம் தவிர்த்து நம்பிக்கை கொள்ள நம்மை அழைக்கிறது. 2 பேதுரு 5: 9 ஆம் வசனம் கூறுகிறது, அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள் என்று… நாம் வாழும் இச்சமூகத்தில் நாம் இருக்கும் தளத்தில், கண்ணுக்கு முன்பாக நடக்கக்கூடிய அநீதிகளை கண்டும் காணாதவர்களாய் இருக்காமல், அதனைக் தட்டிக்கேட்கவும், அதனை சரி செய்யவும், துணிச்சல் கொண்டவர்களாக, வாழ அழைக்கும் ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்க முயலுவோம். ஆண்டவர் இயேசுவை இந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை உயித்தெழச் செய்தார் என்று நற்செய்தி சீடர்கள் தூய ஆவியின் தூண்டுதலால் துணிச்சலோடு அறிவித்தார்களோ அதுப்போல நாமும் தூய ஆவியால் துணிவு பெற்றவர்களாய் நாம் இருக்கும் இடங்களில், நம் கண் முன்பாக காணக்கூடிய அநீதிகளை தட்டி கேட்கவும், நீதிக்காகக் குரல் கொடுக்கவும், உண்மையை சார்ந்து நிற்கும் உண்மை பணியாளர்களாய் உயிர்த்த இயேசுவின் பாதையில் உற்ச்சாகமாக பயணிப்போம்.’
அன்புடன்
சகோ. சகாய ராஜ் ஜே.
👏👏👏👌👍
பதிலளிநீக்குஉயிர்த்த இயேசுவின் பாதையில் உயிர்த்துடிப்போடு பயணிக்க, பிறருக்கும் உயிர்கொடுக்க, வாழ்வு கொடுக்க, நம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு உயிர்ப்பின் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅண்ணா அருமை.. வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு