செவ்வாய், 20 ஏப்ரல், 2021

வாழ்க்கை வாழ்வதற்கே... (21.04.2021)

வாழ்க்கை வாழ்வதற்கே ...

வாழ்க்கை வாழ்வதற்கே என்று உற்சாகத்தோடு உத்வேகத்தோடு சிறப்பாக வாழ ஆசைப்படும் அன்பு உள்ளங்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம் ஸ்தேவான் இறந்த பின்பு இறைப் பற்று கொண்டவர்கள் யூதேயா சமாரியா பகுதிகளில் சிதறடிக்கப்பட்டு போனதையும், சவுல் வீடு வீடாகச் சென்று ஆண்களையும் பெண்களையும் சிறைப்பிடித்துச் சென்றதையும், பிலிப்பு சமாரியா பகுதியில் மெசியாவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததையும் அவர் வழியாக இறைவன் அங்கு பல்வேறு நோய்களை குணமாக்கியதையும், கால் ஊனமுற்றோர் முடக்குவாதமுற்றோருக்கும் குணம் கொடுத்ததையும், பேய்களை ஓட்டியதையும், எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆண்டவர் தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப இவ்வுலகில் எவரையும் அழியவிடாமல் அவர்களை உயிர்த்தெழச் செய்ய வேண்டும். அவர்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராக அனைவரும் நிலை வாழ்வைப் பெற வேண்டும். இதுவே என் பணி. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் புறம்பே தள்ளி விட மாட்டேன் என்று கூறுகிறார். 

இந்த உலகில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் பொழுது நல்ல உடல் நலத்துடன் முழுமையாக வளர்ச்சியடைந்த உடல் உறுப்புகளுடன் பிறக்க வேண்டும் என்றே எல்லோரும் விரும்புவர். ஆனால் பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் சிறிய அளவிலான இரண்டு கால்களுடன் பிறந்த ஒரு ஆண் குழந்தை தனது நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு இன்று இவ்வுலகில் அனைத்து மனிதருக்கும் போராட்டங்களை வெல்லக் கற்றுத் தரக்கூடிய ஒரு மாமனிதராக வளர்ச்சி அடைந்த நிலையை, வாழ்வு பெற்ற நிலையை நிக் என்ற உலகப்புகழ் பெற்ற மனிதரில் நாம் காண்கிறோம். தனக்கென்று இவ்வுலகில் வாழ்வதற்கு சரியான உடல் கூட இல்லையே என்று தன்னையே அழித்துக் கொள்ள வேண்டும் என்று கூட நினைத்த நிக் என்ற மனிதர் இன்று இறைவன் தனது வாழ்வுக்கு என்று ஒரு மிகப்பெரிய திட்டத்தை வைத்திருப்பதை உணர்ந்துகொண்ட அந்த நிமிடத்தில் இருந்து தன்னை உலகம் முழுவதற்கும் முன்னேற்றங்களை கற்றுத் தரக்கூடிய ஒரு மனிதராக இன்று உயர்ந்து நிற்கின்றார். 

 இவரைப் போலவே இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இன்றைய இறைவார்த்தையின் வழியாக இயேசு ஆண்டவர் இவ்வுலகில் உள்ள அனைவரும் வாழ்வு பெற வேண்டும். எவரையும் அழிய விடுவது தந்தையின் விருப்பம் அல்ல. என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் இவ்வுலகிற்கு வந்தேன் என்று கூறுகிறார். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே தந்தையின் திருவுளம் என்பதை எடுத்துரைக்கிறார். 

இன்றைய நாளில் நாமும் மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் சிறப்பாக கண்டு கொண்டு அவற்றில் நமது நம்பிக்கையை ஆழப்படுத்த அவர் பாதத்தில் சில மணித்துளிகள் செலவிடுவோம். ஆண்டவர் இயேசுவை நமது உள்ளத்தின் கோவிலில் கண்டு கொண்டவர்களாக, அவர் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக அவரது கரங்களில் நம்மையே ஒப்புக் கொடுப்போம். அவரது கரங்களில் இருந்து நிலை வாழ்வையும் நிறைவான மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்வோம். மல்லிகை தோட்டத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்பதற்கு ஏற்ப, ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ளும் நாமும் இன்று நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு விளம்பரம் இல்லாமல் வாழ்வை வழங்கும் இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...