வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பணிகளை பகிர்வோம்.... (18.4.2021)

பணிகளை பகிர்வோம்....

அனுதினமும் ஆண்டவரின் பணியை செய்யப் புறப்படக்கூடிய அன்பர்களே வணக்கம்!
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்து பணி செய்ய அழைப்பு விடுக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் கைம்பெண்கள் கவனிக்கப்படாததைக் குறித்து சீடர்களுக்குள்ளேயே சலசலப்பு ஏற்படுகிறது.
 அவர்களுக்குள் எழுந்த சலசலப்பை உணர்ந்துகொண்ட இயேசுவின் உடன் பயணித்த சீடர்கள் அனைவரும் ஒன்று கூடி, சிலரை பந்தியில்  பரிமாறுவதற்கு என தேர்வு செய்கிறார்கள்.  தங்களுடைய பணிப் பொறுப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். 

           இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலும் அனைத்து விதமான பொறுப்புகளையும் அனைத்துப் பணிகளையும் நாமே முன்னெடுக்க வேண்டும். அனைத்துப் புகழும் பெருமையும் நமக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணிக்கின்றோம். அப்படி பயணிப்பதிலோ, ஈடுபாட்டோடு செயல்படுவதிலோ தவறில்லை. ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது பல நேரங்களில் நாம் பலரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். எப்படி அனைத்து பணிகளையுமே சீடர்கள் கவனித்துக் கொண்டிருந்த போது கைம்பெண்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டார்களோ அது போல பல நேரங்களில் நம்மையும் அறியாமல் பணிச்சுமை காரணமாக பலரை கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறோம்.  இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் விவேகம் உள்ளவர்களாக செயல்படவே இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். 

              இதையே  இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாம் வாசிக்க கேட்கிறோம்.  இயேசுவின் சீடர்கள் கடலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் இயேசு கடல் மேல் நடந்து அவர்களை நோக்கி வருகிறார். இயேசுவையும் அவர்கள்  பேய் எனக் கருதி அஞ்சினார்கள்.  அவர்களிடம் இயேசு "அஞ்சாதீர்கள்"! என்று கூறினார்.

 இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பெரும்பாலும் பணிகளை நாம் பகிர்ந்து கொள்ளாமல் பணிச்சுமைகளை நாமே ஏற்றிக்கொண்டு அதிகமான பழுச் சுமைகளை கொண்டிருக்கிறோம் என்று கூறிக்கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதிகமான துன்பங்களை கடவுள் நமக்கே தருகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் கடவுள் கொடுக்கக் கூடிய பணிப் பொறுப்புகள் அனைத்துமே நாம் மட்டும் செயல்பட வேண்டும் என்பதற்காக அல்ல. அதை அடுத்தவரோடு செயல்படவே அடுத்தவரோடு பகிர்ந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகவே இறைவன்  நமக்கு பணிகளையும் பொறுப்புக்களையும் வழங்குகிறார். அதனை நாம் உணர்ந்து கொண்டு நடந்துகொள்ள வேண்டும் இதனை உணர்ந்து கொள்ளாமல் இயேசுவைப் பேய் என எண்ணி கலங்கிய சீடர்களைப்போல பணிகளைக் கண்டு பணிச்சுமைகளைக் கண்டு பயந்து அஞ்சி பணிச்சுமைகளைக் கண்டு பயந்து அஞ்சி நடுங்காமல், பகிர்ந்து கொண்டு நாமும் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக தொடர்ந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம். எனவே பணிகளை பகிர்ந்து அதனோடு இணைந்து ஆண்டவர் இயேசுவின் அன்பையும் அருளையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும், அனைவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவும் இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...